Health: நைட் சாப்பிட்ட பிறகு இதெல்லாம் பண்ணாதீங்க... ப்ளீஸ் ஒரு நிமிஷம் இதைப்படிங்க..!
அன்றாட நடைமுறைகளில் கவனிக்காமல் நாம் செய்யும் செயல்கள் எப்படி உடலை பாதிக்கின்றன என்பதை புரிந்துகொள்வதும், அதனை சரிசெய்வதும் மிக முக்கியமானது.
![Health: நைட் சாப்பிட்ட பிறகு இதெல்லாம் பண்ணாதீங்க... ப்ளீஸ் ஒரு நிமிஷம் இதைப்படிங்க..! Do not do this after dinner overall health and life will be better Health: நைட் சாப்பிட்ட பிறகு இதெல்லாம் பண்ணாதீங்க... ப்ளீஸ் ஒரு நிமிஷம் இதைப்படிங்க..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/17/8446dff605f4db6dab5b81a987f46f851692260248969109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆரோக்கியமான உணவுதான் நம் ஒட்டுமொத்த உடல்நலனையும் பாதுகாக்கிறது. ஆனால் அதற்கு உணவு தேர்வு மட்டும் போதாது. சாப்பிடும் முறைகளும், அதற்கு முன்னும் பின்னும் செய்யக்கூடாதவைகளும் உண்டு. இன்றைய உலகில், நீரிழிவு, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற வாழ்க்கை முறை தொடர்பான நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், அன்றாட நடைமுறைகளில் கவனிக்காமல் நாம் செய்யும் செயல்கள் எப்படி உடலை பாதிக்கின்றன என்பதை புரிந்துகொள்வதும், அதனை சரிசெய்வதும் மிக முக்கியமானது. ஆரோக்கியத்தில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் சில தவிர்க்கவேண்டிய செயல்களை இங்கே தொகுத்துள்ளோம்.
தாமதமாக சாப்பிடுவது..
இரவில் தாமதமாக சாப்பிடுவது, குறிப்பாக தூங்கும் முன் சாப்பிடுவது உங்கள் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பழக்கம் ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து, செரிமானத்தைத் தடுக்கும். மேலும் வளர்சிதை மாற்றத்தை எதிர்மறையாக பாதிக்கும். இதன் காரணமாக எடை அதிகரிப்பு, செரிமான பிரச்சனைகள் மற்றும் உடல் பருமனுக்கான வாய்ப்புகள் உள்ளன.
சாப்பிட்டவுடன் தூக்கம்..
நம்மில் பலருக்கு உணவு உண்ட உடனேயே தூங்குவது வழக்கம். இது நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்திற்கு வழிவகுக்கும். படுத்திருக்கும்போது வயிற்றின் செரிமான சாறுகள் மீண்டும் தலைகீழாக நெஞ்சுப்பகுதியில் உள்ள உணவுக்குழாய்க்குள் பாய்ந்து, அசௌகரியத்தை ஏற்படுத்தி, செரிமான செயல்பாட்டில் குறுக்கிடலாம்.
புகைபிடித்தல்
புகைபிடித்தல் சாதாரணமாகவே தீங்கு விளைவிக்கும் ஒன்றாகும். ஆனால் இரவு உணவிற்குப் பிறகு சிகரெட் பிடிப்பது உடல்நலப் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கும். உணவுக்குப் பின் புகைபிடிப்பது அஜீரணம், ஆசிட் ரிஃப்ளக்ஸ் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும். சிகரெட்டில் உள்ள கார்சினோஜென்கள், குடல் எரிச்சலை அதிகரிக்கலாம். மேலும் இது அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சிக்கு வழி வகுக்கலாம்.
மொபைல் பயன்பாடு
ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்துவது நம் வாழ்வோடு ஒன்றியது என்றாலும், உணவுக்குப் பிறகு அதிகமாக திரையைப் பார்ப்பது பல ஆபத்துகளை ஏற்படுத்தும். திரைகளைப் பார்ப்பது மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை உயர்த்தி, தூக்கத்தின் ஆழத்தை பாதிக்கும். இந்த உடல்நலப் பிரச்சனை வராமல் இருக்க உணவருந்திய பின் உடனடியாக மொபைல் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
உணவுக்குப் பின் நடைபயிற்சி
இரவு உணவிற்குப் பிறகு உடனடியாக உட்கார்ந்து அல்லது ஓய்வெடுக்காமல், சுமார் 10 நிமிடங்களுக்கு ஒரு சிறிய நடைப்பயிற்சி செய்தால் நன்மை கிடைக்கும். நடைபயிற்சி செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் அசௌகரியத்தை தடுக்கிறது. இப்படி செய்தால் இரவு தூக்கத்திற்கும் இது பங்களிக்கும். மேலும் காலையில் புத்துணர்ச்சியுடன் எழுவதற்கு இது உதவும்.
தண்ணீர் குடித்தல்
உடலுக்கு தண்ணீர் முக்கியம் என்றாலும், சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது செரிமானத்தைத் தடுக்கும். இது வயிற்று நொதிகள் மற்றும் சாறுகளை நீர்த்துப்போகச் செய்யும். இது அமிலத்தன்மை மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது. உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் அல்லது ஒரு மணி நேரத்திற்குப் பிறகுதான் தண்ணீர் அருந்துவதற்கு ஏற்ற நேரம் ஆகும்.
இரவு உணவிற்குப் பிறகு இந்த வழிகாட்டுதல்களுக்கு முன்னுரிமை அளிப்பது ஒட்டுமொத்த நல்வாழ்வை கணிசமாக மேம்படுத்தும். இவற்றை பின்பற்றுவதன் மூலம், நீண்ட கால நன்மைகள் மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை பெறலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)