(Source: ECI/ABP News/ABP Majha)
BJP Election Plan: 5 மாநில தேர்தல், களத்தில் 350 எம்.எல்.ஏக்கள்.. கருத்து கணிப்பு நடத்த பாஜக அதிரடி திட்டம்..
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில், கட்சியின் வெற்றி, தோல்வி குறித்து கருத்துகணிப்பு நடத்த பாஜக தேர்தல் குழு திட்டமிட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில், கட்சியின் வெற்றி, தோல்வி குறித்து கருத்துகணிப்பு நடத்த பாஜக தேர்தல் குழு திட்டமிட்டுள்ளது.
5 மாநில தேர்தல்:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னதாகவே, 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இது, மினி நாடாளுமன்ற தேர்தலாகவே முக்கிய தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கருதுகிறது. இதனால், இரு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கார், மத்தியபிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், மத்தியபிரதேசத்தில் மட்டுமே பாஜக் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேநேரம், ராஜஸ்தான் மற்றும் சதீஷ்காரில் காங்கிரஸ் அரசையும், தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ். ஆட்சியையும் அகற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
பாஜக தேர்தல் கூட்டம்:
இந்த நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்து பாஜக மத்திய தேர்தல் குழுவின் நேற்று டெல்லியில் கூடி ஆலோசித்தது. இதில், பிரதமர் மோடி கட்சியின் தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்களான அமித்ஷா, ராஜ்நாத் சிங், மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வழக்கமாக தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூடும். ஆனால் 5 மாநில தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்த கூட்டம் முன்கூட்டியே நடைபெற்றுள்ளது.
கட்சியை வலுப்படுத்த திட்டம்:
கூட்டத்தில், கட்சி வலுவான எதிர்ப்பை எதிர்கொள்ளும் இடங்களில் அதிக கவனம் செலுத்துவது, வலுவான வேட்பாளர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு, மத்தியபிரதேசம் மற்றும் சதீஷ்கார் மாநிலங்களில் செய்யப்பட்டு வரும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேட்பாளர்கள் தேர்வு:
5 மாநில தேர்தலில் மக்களிடையே எந்த அளவிற்கு பிரபலமாக இருப்பவர்கள், பெரிதாக எந்தவித பிரச்னைகளிலும் சிக்காமல் இருப்பவர்கள் மற்றும் அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் அவரது செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் வேட்பாளர்களின் தேர்வு இருக்கும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே எம்.எல்.ஏ பதவியில் இருப்பவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால், அவருக்கான மாற்று வேட்பாளர் சமூக நீதிக்கான செயல்பாடுகளில் சிறந்த சாதனை படைத்தவராக இருக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் பாஜக முடிவு செய்துள்ளதாம்.
கருத்துகணிப்பு நடத்த திட்டம்:
தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களிலும் பாஜகவின் வெற்றி தோல்விக்கான வாய்ப்புகள் குறித்து ஆராய, கருத்துகணிப்பை நடத்தவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இதில் அக்கட்சியை சேர்ந்த அதேநேரம் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களை சேராத 350 எம்.எல்.ஏக்கள் ஈடுபட உள்ளனர். இதுதொடர்பான தகவலின்படி, உத்தரபிரதேசத்தில் இருந்து 160 பேர், குஜராத் மற்றும் பீகாரில் இருந்து 150 பேர் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து 45 எம்எல்ஏக்கள் இந்த கருத்துகணிப்பு குழுவில் இடம்பெறலாம். இவர்களது ஆலோசனை கூட்டம் நாளை போபாலில் நடைபெற உள்ளது. கர்நாடகா தேர்தலில் தோற்று ஆட்சியை இழந்த நிலையில், 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக மிகவும் துரிதமாகவும், நுணுக்கமாகவும் செயல்பட்டு வருகிறது.