பீட்சாவில் பீஸ் குறைவாக இருந்ததால் அதிருப்தி.. ரூ.41.2 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்த அமெரிக்கர்!
ஜூலை 31, 2020-க்கு பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் நியூயார்க்கில் பொருட்களை வாங்கிய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் டாகோ பெல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஃபிராங்க் சிரகுசா கேட்டுள்ளார்.
பிரபல டாகோ பெல் கடையில் தான் வாங்கிய பிட்சாவில் இறைச்சி மிக குறைவாக இருந்ததால் அதிருப்தி அடைந்த அமெரிக்கர் ஒருவர் வழக்கு தொடர்ந்து 41.2 கோடி இழப்பீடு கேட்டுள்ளார்.
பிட்ஸாவில் இறைச்சி குறைவு
துரித உணவுகள் மீதான மோகம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு அதிகம் உள்ளது. உணவின் வகைதான் மாறும் தவிர அதில் உள்ள சாதக பாதகங்கள் எல்லா இடங்களிலும் ஒன்றுதான். பொதுவாகவே துரித உணவுகளை தயாரிப்பது மீதான சுகாதாரம் குறித்த பிரச்சனை அதிகம். அவை சாலை ஓரங்களில், சிறிய கடைகளில் விற்பனை செய்யப்படுவதால் அந்த மீதான ஐயங்கள் மக்களிடையே அதிகம். ஆனால் அவற்றின் சுவை காரணமாக அவை மக்களிடையே பிரபலமாக உள்ளன. நம் ஊரை எடுத்துக்கொண்டால் சிக்கன் ரைஸ், சிக்கன் நூடுல்ஸ் போன்ற உணவுகள் துரித உணவுகளில் மிகவும் பிரபலமான உணவுகள் ஆகும்.
நமக்கே பல நேரம் கொஞ்சம் சிக்கன் பீஸ்கள் கம்மியாக வந்துவிட்டதோ என்ற ஐயம் வரும். அதுவும் ஒன்றாக சேர்த்து நான்கு ஐந்து ரைஸ்கள் செய்து, அதனை பிரித்து கொடுக்கும்போது அதனை பார்ப்பதே பலருக்கு பதற்றமாக இருக்கும். நமக்கு கொடுக்கப்போகும் பார்சலில் சிக்கன் அதிகமாக இருந்ததா என்ற சந்தேகம் வீட்டிற்கு சென்று சாப்பிட்ட பின்னும் தீராது. அப்படி ஒருவர் பிரபல டாகோ பெல் கடையில்தான் வாங்கிய பீட்சாவில் இறைச்சி மிக குறைவாக இருந்ததாக கூறி அதிருப்தி அடைந்துள்ளார்.
டகோ பெல் மீது வழக்கு
கடந்த ஆண்டு செப்டம்பரில், ஃபிராங்க் சிரகுசா என்ற அமெரிக்கர், நியூயார்க் நகரில் உள்ள டகோ பெல் கடையில் $5.49 கொடுத்து, மெக்சிகன் பீட்சா வாங்கியுள்ளார். அதில் டகோ பெல் கடை விளம்பரப்படுத்திய அதே அளவு இறைச்சி இல்லை என்று அந்த நபர் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து புரூக்ளின் ஃபெடரல் நீதிமன்றத்தில் திங்களன்று ரிட்ஜ்வுட் குடியிருப்பாளரான ஃபிராங்க் சிரகுசா ஒரு வழக்கை தாக்கல் செய்தார். டகோ பெல் தனது தயாரிப்புகளான மெக்சிகன் பிஸ்ஸா, க்ரஞ்ச்ராப் சுப்ரீம், கிராண்டே க்ரஞ்ச்ராப் மற்றும் வேகன் க்ரஞ்ச்ராப் உள்ளிட்ட தயாரிப்புகளை 'தவறான விளம்பரம்' செய்ததாக சிரகுசா குற்றம்சாட்டினார்.
விளம்பரத்தில் உள்ளதை விட குறைவாக உள்ளது
அந்த வழக்கில், விளம்பரப்படுத்தப்பட்ட மெனுவில் உள்ள பொருட்களில் உண்மையில் சேர்க்கப்பட்டுள்ள இறைச்சியின் அளவை விட விளம்பரப்படுத்தப்பட்டு இருக்கும் புகைப்படங்களில் இரண்டு மடங்குக் மேல் அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அவர் அந்த வழக்கில், உண்மையான உணவு மற்றும், விளம்பரப்படுத்தப்பட்ட உணவு ஆகிய இரண்டு படங்களையும் காட்டினார்.
விளம்பரத்தில் காட்டப்பட்ட புகைப்படம் இறைச்சி, சீஸ், சிவப்பு மற்றும் பச்சை காய்கறிகளால் நிரப்பப்பட்டு கவர்ச்சியாக தோன்றியது, அதே நேரத்தில் உண்மையான உணவோடு அந்த புகைப்படம் பொருந்தவில்லை.
Taco Bell was sued today in a false advertising class action.
— Rob Freund (@RobertFreundLaw) July 31, 2023
Consumers allege that Taco Bell misrepresents the amount of beef in the Crunchwrap Supreme "by at least double the amount." pic.twitter.com/a0J84dsMin
ரூ.41.2 கோடி இழப்பீடு வேண்டும்..
Taco Bell ஆனது நுகர்வோர்கள் அதிக அளவில் அவர்களின் உணவகங்களுக்குச் செல்ல அதிகமாக உணவை விளம்பரப்படுத்துகிறது. மேலும் போட்டியாளர்களிடமிருந்து முன்னேறி செல்ல அவற்றை மேலும் கவர்ச்சியாக காட்டுகிறது. டகோ பெல் இன்னும் இந்த வழக்குக்கு பதிலளிக்கவில்லை. இதற்கிடையில், ஜூலை 31, 2020க்குப் பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் நியூயார்க் மாநிலத்தில் பொருட்களை வாங்கிய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் டாகோ பெல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஃபிராங்க் சிரகுசா கேட்டுள்ளார். இது குறைந்தபட்சம் $5 மில்லியன் வரை ஆகும். அதாவது இந்திய மதிப்பில் ரூ.41.2 கோடி ஆகும்.