குளிர்காலத்தில் தயிர்.. சளி பிடிக்குமா? என்ன விளைவுகள்? ஊட்டச்சத்து நிபுணர் கூறும் பதில் என்ன!
குளிர்காலத்தில் 'தவிர்க்க வேண்டிய' உணவுகள் பட்டியலில் தயிரை சேர்க்க எந்த காரணமும் இல்லை என்று ஹரிப்ரியா கூறுகிறார்
தயிர் ஒரு ஆரோக்கியமான புரோபயாடிக் ஆகும், இதில் அதிக அளவு புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. தயிர் பச்சடி, தயிர் அல்லது மோர் போன்ற வடிவில் இதை உங்கள் உணவில் உட்கொள்வது உங்கள் உணவின் சுவையை அதிகரிக்கவும், செரிமானத்தை அதிகரிக்கவும் உதவும். ஆனால் பலர் குளிர்காலத்தில் தயிர் எடுத்துக்கொள்வது சளி மற்றும் இருமல் வர வழிவகுக்கும் என்று நினைத்து அதை தவிர்க்கின்றனர். குளிர்காலத்தில் குறிப்பாக இரவில் தயிர் குழந்தைகளை தயிர் சாப்பிட விடாமல் பெற்றோர்கள் தடுக்கின்றனர். குளிர்காலத்தில் தயிர் உட்கொள்வது உண்மையிலேயே தீங்கு விளைவிப்பதாஎன்பதை ஊட்டச்சத்து நிபுணரிடம் கேட்டு தெரிந்துகொள்வோம்.
தயிர் ஒரு சத்தான உணவு
"தயிர் ஒரு மிகச்சிறந்த சத்தான உணவாகக் கருதப்படுகிறது, மேலும் நல்ல பாக்டீரியாக்களால் நிரம்பியுள்ளது. அதுமட்டுமின்றி அது நல்ல தரமான புரத உணவாக கருதப்படுகிறது. இதில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி 2 மற்றும் பி 12 ஆகியவை உள்ளதால் சத்துக்களின் புதையலுக்குக் குறைவில்லை" என்கிறார், க்ளவுட் நைன் மருத்துவமனையின் சென்னை ஒஎம்ஆர் கிளையின் ஊட்டச்சத்து நிபுணர் என். ஹரிப்ரியா. குளிர்காலத்தில் 'தவிர்க்க வேண்டிய' உணவுகள் பட்டியலில் தயிரை சேர்க்க எந்த காரணமும் இல்லை என்று ஹரிப்ரியா கூறுகிறார், மேலும் குளிர்காலத்தில் தயிர் சாப்பிடுவது தொடர்பான சில கட்டுக்கதைகளை உடைத்துள்ளார்.
கட்டுக்கதை 1: குளிர்காலத்தில் தயிர் சாப்பிடுவது சளி மற்றும் இருமலுக்கு வழிவகுக்கும்
உண்மை: தயிர் குளிர்காலத்தில் உட்கொள்ள வேண்டிய ஒரு சரியான உணவாகும், ஏனெனில் அதில் புரோபயாடிக் மற்றும் வைட்டமின்கள் உள்ளன, இது எந்த கால பருவத்தையும் பொருட்படுத்தாமல் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. ஆனால் அதனை அறை வெப்பநிலையில் பயன்படுத்த வேண்டும், குளிரவைத்து பயன்படுத்தினால் சளி பிடிக்கும் வாய்ப்புள்ளது.
கட்டுக்கதை 2: தயிர் இரவில் சாப்பிடக்கூடாது
உண்மை: இதுவும் ஒரு கட்டுக்கதைதான். தயிர் இரவு உணவிற்கு ஒரு நல்ல பக்க உணவாக இருக்கும். உண்மையில் தயிர் வயிற்றை மிகவும் நிதானமாக வைக்கும். மேலும் மனதையும் அமைதிப்படுத்தும். இது மூளையில் டிரிப்டோபான் என்ற தனித்துவமான அமினோ அமிலத்தை வெளியிட உதவுகிறது, இது ஒருவரை நிதானமாக்கவும், தெளிவாக சிந்திக்கவும் உதவுகிறது. டிரிப்டோபான் காரணமாக நியூரான்களுக்கு ஓய்வு கிடைத்து ரீசார்ஜ் செய்யப்படுகின்றன.
கட்டுக்கதை 3: பாலூட்டும் தாய்மார்கள் தயிரை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்தும்
உண்மை: அதுவும் உண்மையல்ல. தாய்ப்பாலின் ஊடாக குழந்தைக்கு ஊட்டச் சத்துக்கள் மட்டுமே செல்லும், மேலும் தாய்ப்பாலில் இம்யூனோகுளோபுலின்கள் நிறைந்திருப்பதால் சளி அல்லது தொற்று ஏற்படாது. தயிரில் உள்ள பாக்டீரியா நோயை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலம் உங்கள் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. தயிரில் லாக்டோபாகிலஸ் உடன் வைட்டமின் மற்றும் புரதம் நிரம்பியுள்ளது, இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது. பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் கால்சியம் தேவை மற்றும் நல்ல தரமான புரதத்தை பூர்த்தி செய்ய ரைதா அல்லது தயிர் சாதம் உட்கொள்ளலாம்.
கட்டுக்கதை 4: குழந்தைகள் குளிர்காலத்தில் தயிரைத் தவிர்க்க வேண்டும்
உண்மை: குழந்தைகள் எந்த வடிவத்திலும் தயிர் சாப்பிட ஊக்குவிக்கப்பட வேண்டும், ஆனால் அது அறை வெப்பநிலையில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே ஒரே விஷயம், குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து உடனே உட்கொள்ள வேண்டும். தயிரில் பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்த்து சுவையான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மாலை நேர சிற்றுண்டியை உருவாக்கலாம்.
கட்டுக்கதை 5: உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது தயிரை தவிர்க்கவும்
உண்மை: இதுவும் உண்மையில்லை, ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களை உட்கொள்வது எடை குறைப்பில் மிகவும் முக்கியமானது. குறைந்த கொழுப்புள்ள பால் அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிரை உட்கொள்வதால் உடல் எடை அதிகரிக்காது. கொழுப்பைத் தவிர, தயிர் கால்சியம், வைட்டமின் டி, பொட்டாசியம் மற்றும் புரதம் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது, இது சிறந்த உறிஞ்சுதலுக்கான ஊட்டச்சத்துக்களின் சரியான கலவையாகும், எனவே டயட்டில் இருப்பவர்களுக்கும் சிறந்த உணவே.