Burma Atho :அத்தோ ப்ரியரா நீங்க... வீட்டிலேயே டேஸ்டியான அத்தோ எப்படி செய்யுறதுன்னு பார்க்கலாம் வாங்க...
சுவையான பர்மா அத்தோ எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தமிழகத்திற்கு அகதிகளாக பல்லாயிரம் பர்மியர் வந்ததாக சொல்லப்படுகின்றது. அதில் சிலரை தமிழர்களை மணந்த பின்னர், பர்மியர்கள் அதிகம் வாழும் பகுதியில் பாரம்பரிய பர்மா உணவகங்களும் உருவானது. பர்மா உணவின் சுவை தமிழர்களையும் கவர்ந்தது.
இதன் காரணமாக தான் தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பர்மா உணவு பரவி காணப்படுகின்றது. அதன் சுவை பிடித்து போனதால் தமிழர்களும் பர்மா உணவுகளை விரும்பி சாப்பிட தொடங்கினர். அதிலும் குறிப்பாக நூடுல்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் அத்தோவின் சுவைக்கு பலர் அடிமை. சென்னையில் உள்ள பாரிஸ் கார்னர் இந்த உணவுக்கு பெயர் பெற்ற இடம். இந்த அத்தோவை சுவைப்பதற்காகவே சிலர் அடிக்கடி பாரிஸ் கார்னர் செல்வது உண்டு.
நூடுல்ஸ் உடன் சேர்க்கப்படும் வெட்டிய முட்டைக்கோஸ், வெங்காயம் இவற்றுடன், உப்பு தண்ணீர், பூண்டு எண்ணெய், வாழைத்தண்டு சூப் உள்ளிட்ட பொருட்களை எல்லாம் சேர்த்து தயாரிக்கப்படும் அத்தோவின் சுவை அலாதியானது. வாங்க அத்தோ எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நூடுல்ஸ் - 200 கிராம், பூண்டு - 10 பல், பெரிய வெங்காயம் - 2 ,முட்டைக்கோஸ் - ஒரு கப், கேரட் - ஒரு கப், எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன், புளி கரைசல் - ஒரு டேபிள் ஸ்பூன், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் தூள் - தேவையான அளவு ,தட்டை - 2, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். முட்டை கோஸ், கேரட்டை மெல்லிதாக நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். முதலில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்ததும் நூடுல்ஸ், கேசரி பவுடர், உப்பு போட்டு வேகவிட வேண்டும். நூடுல்ஸ் வெந்ததும் தண்ணீர் முழுவதையும் வடித்துவிட்டு அதில் எண்ணெய்விட்டு கிளறி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, பூண்டு போட்டு வறுத்து தனியாக வைக்க வேண்டும். அதேபோல் பாதி வெங்காயத்தை வறுத்து தனியாக வைக்க வேண்டும். ஒரு பெரிய பாத்திரத்தில் நூடுல்ஸ், நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸ், கேரட், எலுமிச்சை சாறு, நல்லெண்ணெய், புளி கரைசல், காய்ந்த மிளகாய் தூள், உப்பு, உடைத்த தட்டு வடை, கொத்தமல்லித்தழை, பொரித்த பூண்டு, வறுத்த வெங்காயம் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அவ்வளவுதான் சுவையான அத்தோ தயார். இதை ஒரு பிளேட்டில் வைத்து பறிமாறலாம்.
மேலும் படிக்க,
Watch Video: யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய ரஜினிகாந்த்.. நாளைக்கு என்ன திட்டம்?