Body Donation: உடல் தானம் செய்வது எப்படி? யாரிடம் அனுமதி பெறவேண்டும்? முழு வழிகாட்டி!
Body Donation After Death: மருத்துவப் படிப்புக்கு உதவுவதன் மூலம் மானுடத்தின் நன்மைக்கு இறந்த நபர்களின் முழு தேகங்கள் பயன்படுகின்றன.

உடல் தானம் செய்வது எப்படி ? என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படுகிறது. உடல் தானம் செய்ய விரும்புபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகள் என்ன?
இதுகுறித்து பொது நல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா கூறி உள்ளதாவது:
ஆண்டுதோறும் மாணவ மாணவிகள் பயின்று மருத்துவர்களாக தேர்ச்சி அடைந்து வெளிவருகிறார்கள். மருத்துவ மாணவர்கள் மனித உடலின் உடற்கூறை நன்றாக அறிந்துகொள்ள "இறந்த நபர்களின்" உடலை கூறாய்வு செய்து உடலின் தசைகள், நரம்புகள், ரத்த நாளங்கள், முக்கிய உறுப்புகள் என அனைத்தைப் பற்றியும் கற்றுக் கொள்கிறார்கள்.
அறுவை சிகிச்சைத் துறை மேற்படிப்பு நிபுணர்களும் இறந்த உடல்களில் பாடம் கற்று தங்களது நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்வர். இவ்வாறாக மருத்துவப் படிப்புக்கு உதவுவதன் மூலம் மானுடத்தின் நன்மைக்கு இறந்த நபர்களின் முழு தேகங்கள் பயன்படுகின்றன.
தங்களின் இறப்புக்குப் பிறகு தங்களது முழு உடலையும் மருத்துவ மாணவர்களின் படிப்புக்காக தானமாக வழங்கும் விருப்பம் இருப்பவர்கள் முதலில் தங்களின் நெருங்கிய உறவினர்களாகிய கணவர், மனைவி, மகன், மகள், தாய், தந்தை ஆகியோரிடம் இத்தகைய விருப்பத்தை விளக்கமாக எடுத்துக் கூறி அவர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
ஒரு நடுத்தர வயது ஆண் தனது உடலை தானமாக வழங்க விரும்பினால் அவரது மனைவி , மகன் , மகள் என அனைவரிடமும் ஒருசேர விருப்பத்தை தெரிவித்து ஒப்புதல் பெற வேண்டும்.
அவ்வாறு ஒப்புதல் பெற்ற பிறகு தனது இணையருடன் அல்லது மகன் / மகளுடன் அவரின் வீடு இருக்கும் பகுதிக்கு அருகில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரியின் உடற்கூறியல் துறை ( DEPARTMENT OF ANATOMY ) பேராசிரியரை சந்தித்து, தான் முழு உடல் தானம் செய்ய விளையும் விருப்பக் கடிதத்தை வழங்க வேண்டும்.
அந்த கடிதத்தின் சாராம்சம் இதுதான்
- தனது சொந்த விருப்பத்தின் பேரில்
- முழு சுயநினைவுடன்
- யாருடைய கட்டாயத்தின் பேரிலும் இல்லாமல் எனது உடலை தானமாக வழங்க விரும்புகிறேன்
-எனக்கு ஹெபடைட்டிஸ் பி / எச் ஐ வி முதலிய தொற்று வியாதிகள் இல்லை என்பதையும்
-எனது கண்களையும் தானமாக தர விரும்புகிறேன்/ விரும்பவில்லை என்பதையும் சேர்த்து அந்த "விருப்பக் கடிதம்" இருக்கும்.
அந்த கடிதத்தில் இருவர் சாட்சிகளாக கையொப்பமிட வேண்டும். இவ்விருவரில் ஒருவர் நெருங்கிய ரத்த உறவினராக இருப்பது சிறந்தது.
அவரது அங்க அடையாளங்கள் இரண்டை விளக்கும் வண்ணம்
அங்க அடையாள சான்றிதழ் (IDENTIFICATION CERTIFICATE) கூடவே ஆதார்/ வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடையாள சான்றிதழ் ஒன்றை வழங்க வேண்டும். மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் இணைக்கப்பட வேண்டும்.
உடல் தானமாக தர விரும்புபவரிடம் இருந்து விருப்பக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு இத்தகைய மேன்மையான செயலை அங்கீகரிக்கும் விதமாக உடற்கூறியல் துறை பேராசிரியர் ஒப்புதல் கடிதத்தை வழங்குவார்.
கூடவே அன்னாரது பெயர், முகவரி முதலியவற்றைக் கொண்ட "உடல் தான அடையாள அட்டை" வழங்கப்படும். இவ்வாறு தனது விருப்பத்தை பதிவு செய்யாதவரின் உடலையும் அவர் இறந்த பிறகு அவரது ரத்த சொந்தங்கள் விருப்பப்பட்டால் கொடையாக வழங்க முடியும்.
தனது உடலைக் கொடையாக வழங்க விருப்பம் தெரிவித்தவர் இறந்த பிறகு அவரது நெருங்கிய உறவினர்கள் செய்ய வேண்டியது என்ன?
இறந்த நபர் - இயற்கை காரணங்களால் இறந்திருக்க வேண்டும்.
மருத்துவ சட்ட ரீதியான காரணங்களாக இருக்கக்கூடாது.
அசாதாரண இறப்பு காரணங்களான, தற்கொலை , கொலை , வாகன விபத்து போன்றவற்றால் இறந்தால் உடல் தானம் செய்ய இயலாது.
காரணம் மேற்சொன்ன மருத்துவ சட்ட ரீதியான இறப்புகளில் பிணக்கூறாய்வு செய்யப்படும். பிணக்கூறாய்வு செய்யப்பட்ட உடல்களை மருத்துவக் கல்விக்குப் பயன்படுத்த இயலாது. மரணம் மருத்துவமனையில் நிகழ்ந்திருந்தால் மருத்துவமனை நிர்வாகம் - இறப்புக்கான காரணத்தை சான்றிதழாக வழங்கும். (Medical Certificate of cause of death)
வீட்டில் இறந்திருந்தால் சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் மரணத்திற்கான காரணத்திற்கான சான்றிதழை பெற வேண்டும்.
வீடு அமைந்திருக்கும் காவல்துறை சரகத்திற்குட்பட்ட காவல் நிலையத்தாரிடம் இறந்த உடலை தானமாக வழங்க தடையில்லாச் சான்றிதழ் ( NO OBJECTION CERTIFICATE FROM LOCAL POLICE STATION) பெற வேண்டியது கட்டாயம்.
இறந்த எட்டு மணிநேரங்களுக்குள் அந்த நபரின் சமயம் சார்ந்த சடங்குகள் செய்யப்பட்டு பிரேதத்தை மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைக்க வேண்டும்.
அன்னார் இறந்த செய்தியை சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி முதல்வருக்கோ / நிலைய உள்ளிருப்பு மருத்துவ அலுவலருக்கோ தகவல் தெரிவித்தால் அவர்களே பிரேதத்தை பெற்றுக்கொள்ள வாகன ஏற்பாடு செய்வார்கள். அமரர் ஊர்தி மூலம் பிரேதம் மருத்துவக் கல்லூரியை அடைந்திடும்.
இறந்த நபரின் பிரேதத்துடன் அவரது நெருங்கிய ரத்த உறவினர்கள் அவரது உடலை தானமாக வழங்க தங்களது முழு விருப்பத்தையும் தெரிவிக்கும் கடிதத்தையும் எக்காரணம் கொண்டும் இந்த உடலுக்கு மீண்டும் உரிமை கோர மாட்டோம் என்றும் உடலை தானமாக வழங்க எந்தத் தடையுமில்லை என்று எழுதிக் கொடுக்க வேண்டும் கூடவே அவர்களின் அடையாள அட்டைகளின் பிரதிகளையும் ஒப்படைக்க வேண்டும்.
வாரிசுதாரர்களில் ஒருவர் விருப்பம் தெரிவித்து மற்றொருவர் ஆட்சேபம் தெரிவித்தாலும் இறந்த உடல் மருத்துவக் கல்லூரியில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
எனவே உடல் தானம் அளிக்க விரும்புபவர்கள் கட்டாயம் தங்களின் நெருங்கிய உறவினர்களின் சம்மதத்தைப் பெற வேண்டியது இந்திய சட்டப்படி கட்டாயமாகிறது.
மேற்கூறிய விசயங்கள் பூர்த்தியானதும் அன்னாரது உடலானது உடற்கூறியல் துறையால் ஏற்றுக் கொள்ளப்படும். அன்றிலிருந்து அந்த உடல் "கெடாவர்" ( இறந்த மனிதரின் உடல்) என்று அழைக்கப்படும். அன்னாரது உடலின் நாளங்களில் ஃபார்மலின் எனும் ரசாயனம் ஏற்றப்படும். இதை "எம்பால்மிங்" என்கிறோம்.
பிறகு சில மாதங்கள் கழித்து மருத்துவ மாணவர்களின் உடற்கூறு பயன்பாட்டிற்காக வழங்கப்படும். தங்களது முழு உடலை தானமாக வழங்க விரும்புபவர்கள் மேற்கூறிய விசயங்களைக் கருத்தில் கொண்டு சொந்தங்களின் விருப்பத்தைப் பெற்று அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறைக்குச் சென்று தங்களது விருப்பத்தைத் தெரிவிக்கலாம் என்று மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.






















