Meno-Divorce: அதிகரிக்கும் விவாகரத்து.. காரணமாகும் மாதவிடாய் நிறுத்தம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
சமீப காலமாக விவாகரத்து சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. அதிலும் தூக்கத்தால் அவதி, தன்னை சரியாக கவனிக்கவில்லை, அடிமை வாழ்க்கை என விவாகரத்து பெறுவதற்கான காரணங்கள் வியக்க வைக்கிறது.

உலகளவில் மாதவிடாய் முற்றிலுமாக நின்று போகும் காலங்களில் திருமண வாழ்க்கையில் இருந்து பெரும்பாலான பெண்கள் விவாகரத்து பெறுவதாக ஆய்வு முடிவு ஒன்றில் வெளியாகியுள்ள தகவல் பேசுபொருளாக மாறியுள்ளது.
திருமண வாழ்க்கை
நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் பற்றிய கனவு வெவ்வேறாக இருக்கும். அதிலும் பெண்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். முதல் பாதி முழுக்க பிறந்த வீட்டிலும், அடுத்த பாதி முழுக்க புகுந்த வீட்டிலும் தன்னுடைய வாழ்க்கையை கழிக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் சொல்லில் அடங்க முடியாதவை. ஆனாலும் அத்தகைய திருமண வாழ்க்கையில் விலகுவது மிக கடினமாக உள்ளது.
தங்களுடைய ஆசைகள் உள்ளிட்ட அனைத்தையும் குடும்பத்தினருக்காக தியாகம் செய்யும் பெண்கள் பலரும் திருமண வாழ்க்கையை முறிக்கும் நிலையில் கடினமான முடிவுகளை எடுக்கவே யோசிப்பார்கள்.
அதிகரிக்கும் விவாகரத்து
இந்த நிலையில் சமீப காலமாக விவாகரத்து சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. அதிலும் தூக்கத்தால் அவதி, தன்னை சரியாக கவனிக்கவில்லை, அடிமை வாழ்க்கை என விவாகரத்து பெறுவதற்கான காரணங்கள் வியக்க வைக்கிறது. இதனால் இளம் தலைமுறையினர் பலரும் திருமணமே வேண்டாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள். இல்லாவிட்டால் பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணத்தை புறந்தள்ளி விட்டு காதல் திருமணத்தில் நாட்டம் கொள்கிறார்கள். எனினும் எத்தகைய திருமண பந்தம் ஆனாலும் கணவன், மனைவி இடையேயான புரிதல் தான் வாழ்க்கையை எப்போதும் நகர்த்தும்.
ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
இதனிடையே மெனோடிவோர்ஸ் (Meno-divorce) என்ற ஒரு வார்த்தையும் விவாகரத்து பெறுவதற்கான காரணங்கள் பட்டியலில் இணைந்துள்ளது. அதாவது மாதவிடாய் நிற்கும் வயதில் திருமண உறவில் ஏற்படும் விரிசல் காரணமாக, வயதான தம்பதியினர் விவாகரத்து செய்வதைக் குறிக்கும் ஒரு புதிய வார்த்தையாக பார்க்கப்படுகிறது.
நடுத்தர வயதுப் பெண்களை மேம்படுத்துவதற்கான ஒரு ஆய்வில், 45–65 வயதுடைய மூன்று பெண்களில் ஒருவர் தங்கள் திருமணங்களை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த முடிவு முன்னெப்போதும் இல்லாத அளவில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
விவாகரத்துக்கு காரணமாகும் மாதவிடாய் நிறுத்தம்
இங்கிலாந்து முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் இத்தகைய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் 46 சதவிகிதம் முடிவுகள் பெண்களால் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் திருமண 25 வயது தொடங்கி 50 வயது வரையிலான காலக்கட்டம் பெண்கள் வாழ்க்கையில் மிகவும் நெருக்கடியானவை. அவர்கள் உணர்ச்சி ரீதியாகவும், சமூக ரீதியாகவும், ஹார்மோன் ரீதியாகவும் நெருக்கடிகளை சந்திக்கின்றனர்.
இயந்திரத்தனமான வாழ்க்கை, நிறைவேறாத கனவுகள், பிடிக்காத தேர்வுகள் என் இவை பெண்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது நேற்று, இன்று பிரச்னையல்ல, நீண்ட நாள் பிரச்னையாகும். இந்தக் காலகட்டத்தில்தான் பெரும்பாலும் விவாகரத்து பெறுவது தொடங்கும்.
வாழ்க்கையின் நடுப்பகுதியில் விவாகரத்து முடிவை எடுப்பது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதாக பெண்கள் நம்புகின்றனர். இது அவர்களுக்கு விடுதலை உணர்வை தருகிறது. எனக்கு என்ன வேண்டும்? என கேட்க அவர்களுக்கு நேரம் கிடைக்கிறது. இயந்திரத்தனமான வாழ்க்கையில் வெற்று கூடுகளாக மாறி , மீண்டும் ஒரு இணையர்களாக மாற இடமளிப்பது 45-50 வயது தான்.
விவாகரத்து செய்த பெண்களில் 56 சதவீதம் பேர் தங்களுக்குத் தேவையான ஆதரவு கிடைக்கவில்லை என்று கூறியதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இந்தியாவில் நடுத்தர வயதுடைய பெண்கள் தங்கள் திருமணங்களை மறுபரிசீலனை செய்வது இப்போது சர்வசாதாரணமாகி வருகிறது என்பது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
மாதவிடாய் நிறுத்தத்தின்போது மன அழுத்தம், குறைந்த சகிப்புத்தன்மை, தூக்கக் கலக்கம், எரிச்சல் போன்றவை ஏற்படுவதால் அதனை சரிசெய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. விவாகரத்துக்கு காரணம் மாதவிடாய் நிறுத்தம் தான் ஆணித்தரமாக கூற முடியாவிட்டாலும், அந்த காலக்கட்டம் என்பதை மறுக்க முடியாது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.





















