பாலின பாகுபாடு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் வேலைவாய்ப்பு இடைவெளி 98% - ஆய்வறிக்கை சொல்வது என்ன ?
சுயதொழில் செய்யும் ஆண்கள் பெண்களை விட 2.5 மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார்கள்.
பாலின பாகுபாடு காரணமாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே 98% வேலைவாய்ப்பு இடைவெளி இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
பிரபல ஆக்ஸ்பாம் இந்தியா நிறுவனம் 'இந்தியப் பாகுபாடு அறிக்கை 2022' என்னும் தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் இந்தியாவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான 98 சதவீத வேலைவாய்ப்பு இடைவெளிக்கு பாலினப் பாகுபாடுதான் காரணம் என கூறியுள்ளது. இந்தியாவில் பெண்களின் கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் ஆண்களுக்கு நிகராக இருந்தாலும், சமூகம் மற்றும் முதலாளித்துவம் காரணமாக தொழிலாளர் சந்தையில் அதிகம் பெண்கள் பாகுபாடு காட்டப்படுகிறார்கள் என அறிக்கை எடுத்துரைக்கிறது. ஆண் , பெண் என்னும் பாலின பாகுபாட்டினால் , வேலை வாய்ப்பில் கிராமப்புற பெண்கள் 100 சதவிகிதம் சமத்துவமின்மையை எதிர்க்கொள்கிறார்கள் என்றும் , நகர்புறத்தில் மிகப்பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. 98 சதவிகித பெண்கள் பாலின பாகுபாட்டால் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்கிறது அந்த ஆய்வு.
சுயதொழில் செய்யும் ஆண்கள் பெண்களை விட 2.5 மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார்கள். அதில் 83 சதவீதம் பாலின பாகுபாட்டினாலும் 95 சதவிகிதம் சாதாரண கூலித்தொழிலாளர்களான ஆண் , பெண் இருவரின் ஊதியம் சார்ந்த பாகுபாட்டினால் அமைகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான வருமானத்தில் 91.1 சதவீத இடைவெளி பாகுபாடுகளால் மட்டுமே இருப்பதாக கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. மேலும் கிராமப்புறங்களில் பெண்கள் சம்பாதிப்பதை விட கிராமப்புற சுயதொழில் செய்யும் ஆண்கள் இரண்டு மடங்கு சம்பாதிக்கிறார்கள். சாதாரண ஆண் தொழிலாளி பெண்களை விட மாதத்திற்கு ₹3,000 அதிகம் சம்பாதிக்கிறார்கள், இதில் 96 சதவீதம் பெண்களுக்கு பாலின பாகுபாடு காட்டப்படுவதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
அறிக்கையில் கல்வி ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட புள்ளிவிவர மாதிரியானது, தொழிலாளர் சந்தையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டை விளக்குகிறது. பெண்களுக்கான ஊதியம் பாலின பாகுபாட்டால் 67 சதவிகிதம் உள்ளது. மீதமுள்ள 33 சதவிகிதம் கல்வி மற்றும் பணி அனுபவமின்மை பொருத்து அமைந்துள்ளது. எனவே அனைத்து பெண்களுக்கும் சம ஊதியம் மற்றும் வேலைக்கான பாதுகாப்பு மற்றும் உரிமைக்கான பயனுள்ள நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்துமாறு ஆக்ஸ்பாம் இந்தியா அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.2004-05 முதல் 2019-20 வரையிலான வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் பற்றிய அரசாங்கத் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு ஆணும் பெண்ணும் சமமாக தங்களது வேலையை தொடங்கினாலும் , பாலின பாகுபாடு காரணமாக பெண் பொருளாதாரத்தில் பின்நோக்கி தள்ளப்படுகிறாள். சமத்துவமின்மை , அனுபவமின்மை , கல்வித்தகுதி போலவே பாலின பாகுபாடும் பெண்களின் வேலை வாய்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.