புதுச்சேரியில் அரசு வேலை: 354 பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
புதுச்சேரி அரசு துறைகளில் 10,000 அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப புதுச்சேரி அரசு நடவடிக்கை!

புதுச்சேரி : புதுச்சேரி அரசுத் துறைகளில் காலியாக உள்ள 10,000 பணியிடங்களை நிரப்பும் பணியின் ஒரு பகுதியாக, முதற்கட்டமாக 354 அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
அரசுத் துறைகளில் காலியாக உள்ள 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும்
புதுச்சேரி அரசு துறைகளில் 10,000 அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒவ்வொரு பதவிகளின் நியமன விதிமுறைகளை காலத்துகேற்ப திருத்தி, ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 2,800-க்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அடுத்தாண்டு சட்டபேரவைத் தேர்தல் நடக்க உள்ள சூழ்நிலையில் ஆட்சிக்கு குறுகிய காலமே உள்ளது. இதற்குள் மேலும் 1,000 அரசு பணியிடங்களை நிரப்பிவிட வேண்டும் என புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, 354 அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
யு.டி.சி., -197, பொருளாதார துறையில் புள்ளியியல் ஆய்வாளர்- 26, கலைப்பண்பாட்டு துறையில் நுாலக தகவல் உதவியாளர் - 25, வேளாண் துறையில் வேளாண் அதிகாரி- 23, தொழில் வணிக துறையில் டெக்னிக்கல் ஆபிசர்- 19, வேளாண் துறையில் வேளாண் அதிகாரி (இன்ஜினியரிங்) -5, வேளாண் அதிகாரி (நிலத்தடி நீர் பிரிவு)-5, பொருளாதார துறையில் பீல்டு சூப்ரவைசர்-27, இளநிலை நுாலக உதவியாளர் 26, கேலரி அசிஸ்டென்ட் ௧ என, மொத்தம்354 அரசு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அரசு பணியிடங்களுக்கு நாளை 18ம் தேதி மதியம் 12 மணி முதல் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அரசு பணியிடத்திற்கு தனித்தனியே போட்டி தேர்வு நடத்தப்படும்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 14ம் தேதி மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். வழக்கமாக ஒவ்வொரு அரசு பணியிடத்திற்கு தனித்தனியே போட்டி தேர்வு நடத்தப்படும். புதுச்சேரியில் முதல் முறையாக இந்த அரசு பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த போட்டி தேர்வுக்கு நடத்தப்பட உள்ளது. இதற்காக புதுச்சேரி பணியாளர் தேர்வு முகமையும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
3 வகை அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகள்
தேர்வு மதிப்பெண் இந்த 3 வகை அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகள் அனைத்தும் 100 மதிப்பெண்ணிற்கு 2 மணி நேரம் என்ற அடிப்படையில் இனி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கான போட்டி தேர்வு இடைநிலை, மேல்நிலை, பட்டதாரி என 3 நிலைகளில் நடத்தப்பட உள்ளது. குரூப் சி பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த இடைநிலை போட்டி தேர்வு 100 மதிப்பெண்ணிற்கு 10ம் வகுப்பு தரத்தில் கொள்குறி வகையில் இருக்கும்.
குரூப்-சி ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான போட்டி தேர்வு
குரூப்-சி ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான போட்டி தேர்வு, முதல்தாள், 2-ம் தாள் என இருதாள் கொண்டதாக நடத்தப்படும். இந்த போட்டி தேர்வு பிளஸ் 2, டிப்ளமோ படித்த மாணவர்கள் எழுதலாம். குரூப்-பி அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த பட்டதாரிகளுக்கான போட்டி தேர்வு முதல் தாள், இரண்டாம் தாள் கொண்டதாக 100 மதிப்பெண்ணிற்கு கொள்குறி வகையில் நடத்தப்படும்.
தகுதி மதிப்பெண் போட்டி
தகுதி மதிப்பெண் போட்டி தேர்வில் பொது பிரிவினருக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 30 ஆகவும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 20 ஆகவும், ஓ.பி.சி., எம்.பி.சி., மீனவர், முஸ்லீம், இ.டபுள்யூ.எஸ்., பிரிவினருக்கு 25 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் என அறிவிக்கப்பட்டு உள்ளது.





















