Winter Joint Pain: குளிர்காலத்தில் மூட்டு வலியா.. என்ன காரணம்? - தீர்வு சொல்லும் மருத்துவர்!
மூட்டு வலிக்கு ஒரு முக்கிய காரணமாக பாரோமெட்ரிக் அழுத்தம் குறைவது குறிப்பிடப்படுகிறது. இது குளிர் காலநிலைக்கு முன்னும் பின்னும் நிகழ்கிறது. வெளிப்புற வெப்பநிலை குறையும் போது, மூட்டுகளுக்குள் உள்ள திசுக்கள் சிறிது விரிவடைகின்றன.

குளிர்காலம் வந்து விட்டாலே இலவச இணைப்பாக நம் உடம்பில் ஏகப்பட்ட பாதிப்புகள் வரும். சளி, காய்ச்சல், ஜலதோஷம், குளிர், தலைவலி என இது விதவிதமாக நம்மை ஆட்டுவிக்கும். அதுமட்டுமல்லாமல் வெயில் காலத்தை விட குளிர் காலத்தில் உடல் வலி, மூட்டு மற்றும் கழுத்து வலி ஆகியவை நம்மை பாடாய்படுத்தும். இப்படியான நிலையில் பருவகால நோயாக பார்க்கப்படும் மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு பிரபல எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் தனஞ்செய் குப்தா சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
குளிர்காலத்தில் மூட்டு வலிகள் ஏன் அதிகரிக்கின்றன? என்ற கேள்வி பெரும்பாலான மக்களுக்கு உள்ளது. இதற்கு என்ன தீர்வு என கேட்காத நபர்கள் இல்லை. குளிர்காலத்தில் மூட்டுவலி ஏற்படாவிட்டாலும், அது நிச்சயமாக அதன் அறிகுறிகளை மோசமாக்குகிறது என மருத்துவர் கூறுகிறார்.
மூட்டு வலிக்கு ஒரு முக்கிய காரணமாக பாரோமெட்ரிக் அழுத்தம் குறைவது குறிப்பிடப்படுகிறது. இது குளிர் காலநிலைக்கு முன்னும் பின்னும் நிகழ்கிறது. வெளிப்புற வெப்பநிலை குறையும் போது, மூட்டுகளுக்குள் உள்ள திசுக்கள் சிறிது விரிவடைகின்றன. மூட்டுகளில், பாதுகாப்பு குருத்தெலும்பு ஏற்கனவே தேய்ந்து போயிருந்தால், இந்த விரிவாக்கம் வெளிப்படும் நரம்பு முனைகளில் அழுத்தத்தை அதிகரிக்கிறது. இது மூட்டு வலி மற்றும் கால்கள் விறைப்பை ஏற்படுத்துகிறது.
குளிர்காலத்தில் சுற்றுப்புற வெப்பநிலை குறைவாக இருக்கும்போது அது இரத்த நாளங்களை சுருங்கச் செய்கிறது. இதனால் அவை இறுகி, இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது. இது தசைகள் மற்றும் மூட்டுகளைச் சுற்றியுள்ள திசுக்களில் வெப்பத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் குறைக்கிறது. இதன் காரணமாக மூட்டு அதன் இயல்பான இயக்க வரம்பை இழக்கிறது. இது அசௌகரியத்தை தீவிரப்படுத்துகிறது. இந்த மாற்றம் கீல்வாதம், முடக்கு வாதம் போன்ற பிரச்னைகளை உண்டாக்குகிறது.
குளிர்காலத்தில் நம்முடைய உடல் செயல்பாடு குறைவந்து போகிறது. இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த அசௌகரியம் காரணமாக, மக்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதில்லை. மூட்டுகளுக்கு இயக்கம் தேவை. அது குருத்தெலும்புக்கு ஊட்டமளிக்கிறது. இயற்கையாகவே உடல் வலி அதிகரிக்கிறது. குளிர்காலத்தில் பெரிய அளவு சூரிய ஒளி தாக்கம் இல்லாததால் வைட்டமின் டி குறைபாடு உண்டாகிறது. இதனால் தசைகள் மற்றும் எலும்புகள் பலவீனமடைகிறது. இது மறைமுகமாக மூட்டு வலியை அதிகரிக்கிறது. ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் வெயிலில் செலவிட்டால் இந்த பிரச்னையை தடுக்கலாம்.
குளிர்காலத்தில் மூட்டு வலியை தவிர்க்க உடலை சூடாக வைத்துக் கொள்வது முக்கியம். வெப்ப நிலையை தக்க வைத்துக் கொள்ள நடைபயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொள்ளலாம். மேலும் வைட்டமின் டி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )





















