மேலும் அறிய
Advertisement
Cancer Causes : புற்றுநோய் ஏற்படுவது எப்படி? மருத்துவர் பரூக் அப்துல்லா எளிய விளக்கம்..
Cancer Carcinogens : அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் கேன்சருக்கான மரபணுக்களை சீண்டி வெளியே கொண்டுவரும் விசயங்களை "கார்சினோஜென்ஸ்" என்று அழைக்கிறோம். (புற்றுநோய் உண்டாக்கிகள்)
நாம் அனைவரும் நமது தாயும் தந்தையும் பங்களித்து வழங்கிய க்ரோமோசம்களினால் உடலும் உயிரும் பெற்றவர்கள்.
இவற்றுக்குள் நமது தோலின் நிறம், மூக்கின் அளவு, கண்களின் ஐரிஸ் நிறம், உயரம், உடல் வாகு, மூளையின் மடிப்புகள்
பாலினம் என்று பலவற்றையும் நிர்வகிக்கும் மரபணுக்கள் நிரம்பி இருக்கும். மரபணுக்களை ஜீன்கள் என்று அழைக்கிறோம்.
செல்கள் இணைந்து தான் திசுக்கள் உருவாகின்றன. திசுக்களின் ஒன்றிணைப்பால் உறுப்புகள் உண்டாகின்றன.
இத்தகைய நிலையில் உடலில் செல்கள் கடைபிடிக்கும் முக்கியமான மூன்று விதிகள் இருக்கின்றன.
முதல் விதி
ஒரு குறிப்பிட்ட திசுவில் எவ்வளவு எண்ணிக்கையில் செல்கள் உருவாக வேண்டுமோ அந்த வேகத்தில் மட்டுமே செல்கள் உருவாக வேண்டும்
இரண்டாம் விதி
ஒரு செல் அளவில் வளரும் போது பக்கத்தில் இருக்கும் செல்லை இடிக்கும் நிலை வந்தால் அதன் உருவ வளர்ச்சி தானாக தடை பட வேண்டும்
மூன்றாவது விதி
தனக்கான காலக்கெடு முடிந்ததும் தானாக அழிந்து விட வேண்டும். இதன் வழி அடுத்த செல் உருவாக வழிவிட்டு விட வேண்டும்.
இந்த மூன்று விதிகளையும் குறிப்பிட்ட பகுதியின் உள்ள செல்கள் காற்றில் பறக்கவிட்டால் அதை "கேன்சர்" என்கிறோம்
ஆம்... புற்று நோய் ஏற்படும் இடத்தில் செல்கள் மிதமிஞ்சிப் பெருகுகின்றன செல்கள் அளவில் மிதமிஞ்சி வளருகின்றன
தாம் அழித்து மறுசுழற்சிக்கு செல்ல வேண்டும் என்பதை மறந்து மறுத்து அபரிமிதமான வளர்ச்சியை அடைகின்றன.
இப்படி செல்களை அதன் கட்டுக்குள் வைக்கவும் / தறிகெட்டு வளரச் செய்யவும் காரணமான மரபணுக்கள் நமக்குள்ளேயே இருக்கின்றன. இவற்றில் முக்கியமான மூன்று வகைகள் , கேன்சர் நோயுடன் முக்கியமாக சம்பந்தப்பட்டவை. அவை
1. ஆண்கோ ஜீன் (Onco gene)- புற்று நோய் உண்டாக்கும் ஜீன்கள்
2. புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஜீன்கள் (TUMOUR SUPPRESSOR GENES)
3. டிஎன்ஏவை ரிப்பேர் செய்து நிர்வகிக்கும் ஜீன்கள்
மேற்சொன்ன மூன்றில்
ஆண்கோ ஜீன்கள் - ரெட் சிப் போல அமைதியாக தூங்கிக் கொண்டிருக்கும். அதற்கான காலம் வரும் வரை வெளியே வராது.
ஆனால் தொடர்ந்து புற்று நோய் காரணிகளுக்கு நமது உடல் வெளிப்பட்டுக் கொண்டிருந்தால் ரெட் சிப் மாட்டிய சிட்டியாக வெளிவரும் ட்யூமர் சப்ரசர் ஜீன்கள் - தொடர்ந்து எக்ஸ்ட்ரா டைம் வேலை பார்த்து உடலில் எங்கும் புற்று நோயை உருவாகும் நிலை ஏற்பட்டால் அங்கு சென்று பக்குவமாகப் பேசி பூதம் வெளியே வராமல் அடக்கி வைக்கும்.
மூன்றாவது , டிஎன்ஏ ரிப்பேர் ஜீன் , நமது மரபணுக்களில் தொடர்ந்து ஏற்படும் பிரச்சனைகளுக்கு ட்ரபிள் ஷூட்டிங் செய்து செப்பனிட்டுக் கொண்டே இருக்கும்.
மேற்சொன்ன மூன்று வகை மரபணுக்களும் அதன் அதன் வேலைகளை சரியாக செய்யாமல் மக்கர் செய்வதே கேன்சருக்கான காரணம்.
வயதாக வயதாக எப்படி நாம் வாங்கும் வாகனங்கள் தேய்மானம் ஆகிறதோ அதே மாதிரி நமது உடலும் அதில் உள்ள டிஎன்ஏவை ரிப்பேர் செய்யும் ஜீன்களும் தேய்மானத்துக்கு உள்ளாகி பிரச்சனைக்குரிய ஜீன்கள் வெளிப்படுகின்றன. இதன் காரணமாகவே புற்று நோய்கள் பெரும்பாலும் வயோதிகர்களுக்கு ஏற்படுகிறது.
இதற்கடுத்த படியாக தூங்கிட்ருந்தவன எழுப்பி விட்ட கதையாக அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் கேன்சருக்கான மரபணுக்களை சீண்டி வெளியே கொண்டு வரும் விசயங்களை "கார்சினோஜென்ஸ்" என்று அழைக்கிறோம். (புற்றுநோய் உண்டாக்கிகள்)
- சிகரெட் / புகையிலை
- மது
- ஆஸ்பெஸ்டாஸ்
- அர்செனிக் போன்ற உலோகங்கள்
- அணுக்கதிர்
- ஊடுகதிர் ( எக்ஸ்ரே)
- உணவின் நிறம் மற்றும் சுவைக்காக சேர்க்கப்படும் ரசாயனக் கலப்படங்கள்
- காற்று மாசு
- நீர் மாசு
- அதீத மன அழுத்தம்
- தூக்கமின்மை
போன்றவை அறியப்பட்டுள்ள பல புற்றுநோய் உண்டாக்கிகளில் சில மட்டுமே.
மேற்கூறியவற்றிற்கு நாம் அறிந்தோ, நாம் அறியாமலோ தொடர்ந்து நம்மை வெளிப்படுத்தி வருகிறோம்.
இதன் காரணமாக நமது மரபணுக்களில் மாற்றங்கள் நிகழ்ந்து புற்று நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
இவையன்றி பாப்பிலோமா வைரஸ் - கர்ப்ப பை வாய் புற்று நோய்
ஹெப்படைடிஸ் பி & சி - கல்லீரல் புற்று நோய்
ஹெலிகோபேக்டர் பைலோரி பாக்டீரியா - இரைப்பைப் புற்று நோய்
போன்ற நுண்ணுயிரிகள் தொற்றினாலும் புற்று நோய் ஏற்படலாம்.
புற்று நோயை எப்படி தடுக்கலாம் ?
நமக்கு என்னென்ன ஜீன்கள் இருக்கின்றன? என்பதும், அதில் எதெல்லாம் புற்று நோய் உண்டாக்கும் உண்டாக்காது என்றோ விலாவாரியாக நம்மால் அறிந்து கொள்ள இயலாது. ஆனால் நம் கண்ணுக்குத் தெரிந்து நமக்கு முந்தைய தலைமுறையினரில் யாரேனும் புற்றுநோய்க்கு ஆட்பட்டிருந்தால் நமக்கு அந்த மரபணுக்கள் கடத்தப்பட்டிருக்கும் வாய்ப்பு உண்டு. எனவே ஏனையோர்களை விட சற்று அதிக எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும்.
புற்றுநோய் காரணிகளான புகையிலை / சிகரெட்/ மது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்
கலப்படமில்லாத சத்தான உணவு
உடல் பயிற்சி
நல்ல உறக்கம் இதன் மூலம் உடல் எடையை சரியாக பராமரிக்கலாம்
மன அழுத்தம் குறைத்தல்
போன்றவற்றிக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
பாப்பிலோமா வைரஸ் , ஹெப்படைட்டிஸ் வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசிகள் பெற்றுக் கொள்ளலாம்.
புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் சிறப்பான சிகிச்சை பெற்று முற்றிலும் குணம் பெற முடியும்
புற்று நோயின்
சில முக்கிய அறிகுறிகள்
- எடையிழப்பு
- உடல் சோர்வு
- உடல் வலி
- ஆறாத புண்
- சளி ,மலம், சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல்
போன்றவை இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
மீண்டும் கூறுகிறேன்
புற்று நோய் வந்துவிட்டாலே வாழ்க்கைக்கு முடிவுரை என்று எண்ணி சோர்ந்து விட வேண்டாம்
புற்று நோயை சிகிச்சை மூலம் வென்று எடுத்துக்காட்டாக வாழும் பலர் நம்மிடையே உண்டு.
எனவே
புற்றுநோயைத் தவிர்ப்போம்
அறிகுறிகளைத் தாமதிக்காமல் சிகிச்சை பெறுவோம்
புற்றுநோய் வந்தவர்களை அரவணைப்போம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய உடல் நலம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் உடல் நலம் செய்திகளைத் (Tamil Health News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion