Burnout Syndrome: வாழ்க்கையே சலிப்பா இருக்கா..! வேலை போர் அடிக்குதா? உங்க பிரச்னை இதுதான்..!
Burnout Syndrome: வாழ்க்கையில் சலிப்புத்தன்மையை ஏற்படுத்தக் கூடிய பர்ன் - அவுட் சின்ட்ரோம் எனப்படும் பாதிப்பு குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
Burnout Syndrome: பர்ன் - அவுட் சின்ட்ரோமிற்கான காரணங்கள், சிகிச்சை முறைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
பர்ன் - அவுட் சிண்ட்ரோம்:
உங்கள் வாழ்க்கை சலிப்பாக தோன்றுகிறதா, எந்த வேலையிலும் ஆர்வம் காட்ட முடியவில்லையா, மனதளவில் சோர்வாக உணர்கிறீர்களா? எப்போதும் மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா? இந்த கேள்விகளுக்கான உங்களது பதில் ஆம் எனில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் இது பர்ன் - அவுட் சின்ட்ரோம் என்ற பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். ஒரே மாதிரியான பழக்கங்களை பின்பற்றுவது சில சமயங்களில் வாழ்க்கையின் மீது சலிப்பை ஏற்படுத்துகிறது.
ஒரு காலத்தில் மகிழ்ச்சியாக இருந்த வேலை இப்போது தலைவலியாக மாறியிருக்கலாம். நீண்ட விடுமுறை இருந்தபோதிலும், மன அழுத்தம் தொடரலாம். பர்ன்அவுட் சின்ட்ரோம் 'நாட்பட்ட பணியிட மன அழுத்தத்தால்' கூட இந்த பாதிப்பு ஏற்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது. இதில் வேலை தொடர்பான அதிகப்படியான மன அழுத்தம் ஆரம்ப அறிகுறியாகும்.
பர்ன் - அவுட் சின்ட்ரோமின் சிக்கல்கள் என்ன?
- வேலையில் ஆர்வம் இல்லை, வேலைக்கான ஆற்றலை உடலில் உணராமல்போவது
- வேலை சம்பந்தமாக உங்கள் மனதில் கெட்ட எண்ணங்கள் இருப்பது
- வேலையில் சலிப்பை உணர்வது
- காலக்கெடுவிற்குள் உங்கள் வேலையை முடிக்க முடியாமல் இருப்பது அல்லது இலக்கில் இருந்து விலகி இருப்பது.
பர்ன் - அவுட் சின்ட்ரோம் ஏற்பட காரணம்:
நிபுணர்களின் கூற்றுப்படி, ஒருவர் நீண்ட காலமாக பணியிடத்தில் பணி அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் போது அல்லது சக ஊழியருடன் கருத்து வேறுபாடு அல்லது வேலை தொடர்பான சவால்களை உணர்ந்தால், ஒருவர் தன்னை பலவீனமாகக் கருதத் தொடங்குகிறார். இதன் காரணமாக பர்ன் - அவுட் சின்ட்ரோம் ஏற்படுகிறது. சதர்ன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, நீண்ட நேரம் மன அழுத்தத்தில் இருப்பது மற்றும் இரவும் பகலும் சிந்திப்பது பர்ன் - அவுட் சின்ட்ரோம் பிரச்னைக்கு வழிவகுக்கும். இது ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தக் கூடியது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பர்ன் - அவுட் சின்ட்ரோம் மூளையின் பங்கு
நரம்பியல் அறிவியலின் படி, எப்போதும் வேலையில் மூழ்கி இருப்பது மூளையில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும். மூளையின் செயல்பாட்டின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் லோகஸ் கோரூலியஸ் என்ற சிறிய பகுதி நமது மூளையில் உள்ளது. அதனை சரியாக செயல்பட விடாமல் பர்ன் - அவுட் சின்ட்ரோம் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது.
பர்ன் - அவுட் சின்ட்ரோம் விளைவு
- படைப்பாற்றல் இல்லாமை
- வேலையின் தரம் மோசமடைவது
- நாள் முழுவதும் அதிகரித்த மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை உணர்வது
- நீண்ட கால உற்பத்தி இழப்பு
- ஆழமாக சிந்திக்கும் திறன் பலவீனமடையும்
பர்ன் - அவுட் சின்ட்ரோமை தவிர்ப்பது எப்படி?
1. வேலையில் தீவிரமாக இருக்காதீர்கள், உங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
2. அலுவலக வேலைகளை வீட்டிற்கு கொண்டு வராதீர்கள் இல்லையெனில் உறவுகள் பாதிக்கப்படலாம்.
3. உங்களுக்குப் பிடித்த செயலுக்காக சிறிது நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.
4. குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.
5. போதுமான தூக்கம் அவசியம்
6. தேவைப்படின் மருத்துவரை அணுகவும்.
பொறுப்புத் துறப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள சில தகவல்கள் ஊடக அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. எந்தவொரு பரிந்துரையையும் செயல்படுத்துவதற்கு முன், நீங்கள் சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகுவது நல்லது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )