Dubrow Diet | ரீசெட் காலம்… ரீஃபியூல் காலம்… என்ன இருக்கிறது டப்ரோ டயட்டில்! யாரெல்லாம் பின்பற்றலாம்?
நம் உடலுக்கு கார்போஹைட்ரேட்டிலிருந்து 60-70% ஆற்றல், புரதத்திலிருந்து 15-20% ஆற்றல் மற்றும் கொழுப்பிலிருந்து 10% ஆற்றல் தேவை. ஆனால் உணவுமுறை இதைப் பின்பற்றுகிறதா?
ஒவ்வொரு புது வருடங்களும் ரிசோல்யூஷன் எடுக்கும் நம் தலைமுறையினர் பெரும்பாலும் செய்வது ஜிம்மிற்கு செல்வதும், உடல் எடை குறைப்பதும் தான். அதற்கு பல்வேறு வகையான டயட் வழிமுறைகளை பலர் பின்பற்றுவார்கள். பேலியோ டயட், பனானா டயட், வாட்டர் டயட், ஷெப்பர்ட்ஸ் டயட், நூம் டயட், கார்ணிவோர் டயட் என்று இன்னும் இன்னும் பல வகையான டையட் முறைகள் உள்ளன. அதில் முன்பெல்லாம் அதிகம் கேள்விப்படாத டயட் முறை ஒன்று சமீபத்தில் வெகு அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அந்த டயட்தான் டப்ரோ டயட். இந்த டயட் மூலம் என்னென்ன செய்யலாம், யார் யார் பின்பற்றலாம் என்பதை பார்க்கலாம்.
அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் யதார்த்தமான, வெற்றிகரமான இணையாக உலா வரும் ஹீதர் டப்ரோ - டெரி டப்ரோ ஆகியோர்களால் உருவாக்கப்பட்டது DD என சுருக்கமாக அழைக்கப்பெறும் இந்த Dubrow Diet . ஹீதர் டப்ரோவின் கணவரான டெரி டப்ரோ அறுவை சிகிச்சை மருத்துவரும் கூட என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்த டயட்டாக கருதுகிறார்கள். எதிர்பாராத திருப்பத்துடன் அமைந்த ‘இடையீடு உண்ணா நோன்பு’ ஆகத்தான் குறிப்பிடப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு நாளும் நீங்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும்தான் சாப்பிட வேண்டும்; மற்ற நேரங்களில் எதையும் உண்ணக் கூடாது. விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கிறது. மூன்று பிரிவுகளை உள்ளடக்கிய இவ்வகை உணவு, நீங்கள் எத்தனை மணி நேரம் உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும்; என்ன மாதிரியான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது.
இந்த டயட் சாப்பிடுவதற்காக நேரத்தை பிக்ஸ் செய்கிறது. இடைவெளி விட்டு உண்பதையே இந்த டயட் பரிந்துரைக்கிறது. அதாவது 'ரிஃபியூல்' காலம் என்று ஒன்று இதில் இருக்கிறது. அப்போது நீங்கள் சாப்பிடலாம். அதன் பின் 'ரீசெட்' காலம் என்று ஒன்று இருக்கிறது. அந்த நேரத்தில் எதையுமே சாப்பிடாமல் இருக்க வேண்டும். இந்த டயட்டை மூன்று நிலைகளில் கடிப்பிடிக்கலாம்,கடுமையாக கடைபிடிக்க 16 மணிநேர ரீசெட் காலத்தை கடைபிடிக்க வேண்டும். கொஞ்சம் மிதமாக கடைபிடிக்க 12 மணி நேரம் ரீசெட் காலமும் வைத்துக்கொள்ளலாம். இந்த டயட்டில் உட்கொள்ளும் கலோரிக்களை கணக்கில் வைத்துக்கொள்ள தேவை இல்லை. கொடுக்கப்பட்டுள்ள அனைத்து சத்துக்களையும் எடுத்துக்கொள்வதே முக்கியமாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி இந்த டயட்டில் கார்போஹைட்ரேட்ஸை விட புரதம் மற்றும் கொழுப்புச்சத்துகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. பால் வகைகள், பருப்பு, பழம், காய்கறிகள் போன்றவை முக்கிய இடத்தை பெருகின்றன. இனிப்பு குறைவான மது வகைகளும் இந்த டயட்டில் இடம்பெருகின்றன.
மூன்றாவது மற்றும் கடைசி நிலையான இந்த டயட், வாரத்தில் ஐந்து நாட்கள் 12 மணி நேர ரீசெட் காலமும், இரண்டு நாட்கள் 16 மணி நேர ரீசெட் காலமும் கடைபிடிக்கலாம். டயட்களில் மிகவும் பிரபலமான 'சீட் டே' வை இந்த நிலை டயட்டில் கடை பிடிக்கலாம். அதாவது அன்று ஒருநாள் முழுவதும் டயட் கடைபிடிக்காமல் என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்வது சீட் டே எனப்படும்.
இந்த டயட் இந்திய உணவு முறைகளுக்கும், இந்தியர்களுக்கும் பொருந்துமா? பெங்களூரைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் அஞ்சு சூட் கூறுகையில், டயட் அதன் அடிப்படைக் கருத்துப்படி, மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. "உங்கள் மெட்டபாலிக் மாற்ற விகிதத்தைக் குறைக்க விடக்கூடாது என்ற அடிப்படைக் கொள்கையின்படி இந்த டயட் முறை நன்கு சிந்திக்கப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான உணவை உட்கொள்வதும், அடிக்கடி சாப்பிடுவதும் உங்கள் செரிமான அமைப்பை மிகவும் திறமையாகச் செயல்படுத்துகிறது, இதனால் செரிமான செயல்பாட்டில் அதிக கலோரிகளை எரித்து உதவுவது மட்டுமின்றி, மெட்டபாலிக் மாற்ற விகிதத்தை பராமரிக்கவும் உதவுகிறது." என்கிறார். இந்த டயட்டின் ஒரே குறை என்னவென்றால் இது கலோரிகளை கணக்கில் வைத்துக்கொள்ளாததுதான், ஏனெனில் குறைந்த நேரம் மட்டுமே உணவு உட்கொள்வதால், டயட் கடைபிடிப்பவர்கள் மிகவும் ஆற்றல் குறைவாக உணர்வார்கள். "நம் உடலுக்கு கார்போஹைட்ரேட்டிலிருந்து 60-70% ஆற்றல், புரதத்திலிருந்து 15-20% ஆற்றல் மற்றும் கொழுப்பிலிருந்து 10% ஆற்றல் தேவை. ஆனால் உணவுமுறை இதைப் பின்பற்றுகிறதா? இந்த உணவின் புரத உள்ளடக்கம் சற்று அதிகமாக உள்ளது, மேலும் ஆற்றல் கூறு பெரும்பாலும் காணவில்லை. உடல் ஆற்றலைப் பிரித்தெடுப்பதற்கு மூன்று மடங்கு கடினமாக உழைக்க வேண்டும், இது உங்கள் உறுப்புகள், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு அதிக வேலையை கொடுக்கிறது," என்று டாக்டர் சூட் எச்சரிக்கிறார்.
மேக்ரோபயாடிக் ஊட்டச்சத்து நிபுணரும் சுகாதாரப் பயிற்சியாளருமான ஷில்பா அரோரா ஒவ்வொரு டயட்டிற்கும் அதன் சொந்த நன்மைகள் இருப்பதாக உணர்கிறார். "கீட்டோ மற்றும் ஃபாஸ்டிங் இரண்டும் சரியாகச் செய்தால் அவற்றின் சொந்த நன்மைகள் உள்ளன; இருப்பினும், எந்தவொரு உணவுத் திட்டமும் நீண்ட காலத்திற்கு நிலையானதாகவோ அல்லது பயனுள்ளதாகவோ இல்லை. எடை இழப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான திறவுகோலாக நான் பார்ப்பது என்னவென்றால், நிலையான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் நல்ல தூக்கம். இதுவே போதும் உடலை அமைதிப்படுத்தவும், புத்துணர்ச்சி பெறவும் நல்ல வழிகளை வகுக்கும். ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு ஆடம்பரமான டயட்டுகள் மற்றும் அதன் பெயர்கள் வந்து ட்ரெண்ட் ஆகின்றன, ஆனால் அவை நீண்ட கால ஆரோக்கியத்திற்கு தீர்வாகாது" என்று முடிக்கிறார் ஷில்பா அரோரா.
டப்ரோ டயட் புரத சத்துக்களை மையப்படுத்தி கொண்டுவரப்பட்டுள்ள ஒரு டயட் முறையாக உள்ளது, இந்த முறையில் கொஞ்சம் ஆற்றல் அதிகரிப்பதற்கான கார்போஹைட்ரேட்களை இணைக்கும் வழியை உண்டு செய்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்று பலரது கருத்து. ஆனால் இதனை யார் கடைபிடிப்பதாக இருந்தாலும் தகுந்த மருத்துவ, ஊட்டச்சத்து ஆலோசகரிடம் கலந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )