சென்னை ஏர்போர்டில் நடந்த கொரோனா சோதனை மோசடி: அம்பலப்படுத்திய யூடியூபர் இர்பான்!
ஊரடங்கால் வெளிநாட்டில் வேலையிழந்து இந்தியாவிலும் வேலை கிடைக்காமல் வட்டிக்கு கடன் வாங்கி மீண்டும் வெளிநாட்டுக்கு செல்லும் பல ஏழைகளிடம் இதுபோல் சோதனை என்ற பெயரில் மத்திய அரசு கொள்ளையடிப்பதா?
கொரோனா பரவல் காரணமாக இந்தியாவுக்கான விமான சேவையை நிறுத்தி இருந்த வெளிநாடுகள் தற்போது இந்தியாவுக்கு மீண்டும் விமானங்களை இயக்கத் தொடங்கி இருக்கின்றனர். 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். 48 மணி நேரத்தில் கொரோரோனா சோதனை செய்து நெகட்டிவ் என்ற ரிசல்ட் வந்திருக்க வேண்டும் என்பது போன்ற பல கட்டுப்பாடுகளை வெளிநாடுகள் விதித்து உள்ளன.
குறிப்பாக இந்தியர்கள் அதிகம் பணிபுரியும், ஐக்கிய அரபு அமீரகமும் இத்தகைய கட்டுப்பாடுகளை பயணிகளுக்கு விதித்து இருக்கிறது. அரசு மையங்களில் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கிடைக்காததால் வெளிநாடு செல்லும் பயணிகள் தனியார் கொரோனா மையங்களுக்கு சென்று சில ஆயிரங்களை செலவழித்து கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழை பெறுகின்றனர்.
இப்படி கொரோனா சோதனை செய்த சான்றிதழுடன் சென்னை விமான நிலையம் வரும் பயணிகளை மீண்டும் ஒரு கொரோனா பரிசோதனை செய்ய கட்டாயப்படுத்துகிறது விமான போக்குவரத்துத் துறை. இதற்காக இந்திய சுகாதாரத்துறையால் நடத்தப்படும் ஹிந்த் லேப்ஸ் பரிசோதனை மையத்தின் பரிசோதனை கூடமும் சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
மருத்துவர்கள் பலரால் ஏற்றுக் கொள்ளப்படாத தவறான முடிவுகளை காட்டுவதாக கூறப்பட்ட ரேபிட் சோதனை கருவி மூலமாக ஹிந்த் லேப்ஸ் இந்த சோதனையை மேற்கொள்கிறது. வெளியில் ஆயிரக்கணக்கில் செலவு செய்து கொரோனா சான்றிதழை பெற்று வரும் பயணிகளிடம், விமான நிலையத்தில் மீண்டும் சோதனை செய்ய சொல்லி அதற்காக ரூ.3,500- ஐ வசூலிக்கிறது மத்திய அரசின் ஹிந்த் பரிசோதனை மையம்.
ஆனால், இதற்காக முறையான ஏற்பாடுகளை ஹிந்த் லேப்ஸ் நிறுவனம் மேற்கொள்ளவில்லை எனவும், பரிசோதனை அந்த முடிவுகளும் முறையாக கிடைப்பதில்லை எனவும், இதனால் பல பயணிகள் விமானங்களை தவறவிடும் சூழல் இருப்பதாக பிரபல யூடியூபர் இர்பான் குற்றம்சாட்டி இருக்கிறார். இது குறித்து அவர் யூடியூபில் வெளியிட்டுள்ள வீடியோ பார்வையாளர்கள் எண்ணிக்கை லட்சங்களை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது.
துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல். இறுதிப் போட்டியை காண ஏர் அரேபியா விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு வெளியில் கொரோனா பரிசோதனை செய்துவிட்டு சான்றிதழுடன் வந்த அவரிடம் ஹிந்த் லேப்ஸ் நிறுவனத்தில் மீண்டும் சோதனை செய்ய சொல்லி இருக்கிறார்கள். இதற்காக நள்ளிரவு சுமார் 12 மணிக்கு பரிசோதனை செய்த அவருக்கு அதிகாலை 4:30 மணிக்கு சோதனை முடிவை கொடுத்திருக்கிறார்கள். தொழில்நுட்ப கோளாறு என்று சொல்லி தாமதப்படுத்தி இருக்கிறார்கள் ஹிந்த் லேப்ஸ் ஊழியர்கள். அதற்குள் அவரும் மற்றவர்களும் ஏர் அரேபியா விமானத்தை தவறவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஹிந்த் லேப்ஸ் நிறுவன ஊழியர்களுடன் அவரும் மற்ற பயணிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பரிசோதனை முடிவுகளை தாருங்கள் அதட்டி கேட்ட பிறகு உடனடியாக ஒரு ஊழியர் இர்பானின் பரிசோதனை முடிவுகளை கொடுத்துள்ளார். ஆனால், அதில் மாதிரி சேகரத்த நேரம் அதிகாலை 4:19 என குறிப்பிடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த நள்ளிரவு 12 மணிக்கு மாதிரியை சேகரித்துவிட்டு, காலை 4:19 என ஏன் மாற்றினீர்கள் என்று கேள்வி எழுப்பிய இர்ஃபான் இந்த முறைகேடு குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இர்பான் வெளியிட்டுள்ள வீடியோவில், ஹிந்த் லேப்ஸ் நிறுவனத்திடம் சோதனை முடிவுகளை பெறுவதற்காக நூற்றுக்கணக்கான பயணிகள் எந்த சமூக இடைவெளியும் இன்றி கூட்ட நெரிசலில் காத்துக் கிடந்தனர். கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறி, பரிசோதனை கூடத்திலேயே கொரோனா பரப்பும் பணி நடைபெறுவதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இர்பான் வெளியிட்டுள்ள யூடியூப் வீடியோவின் கமெண்ட் பாக்ஸில் பல பயணிகள் இந்த நடைமுறையால் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். தற்போது இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், சோதனைக் கருவில் அதிகரிக்கப்படவில்லை. ஊரடங்கால் வெளிநாட்டில் வேலையிழந்து இந்தியாவிலும் வேலை கிடைக்காமல் வட்டிக்கு கடன் வாங்கி மீண்டும் வெளிநாட்டுக்கு செல்லும் பல ஏழைகளிடம் இதுபோல் சோதனை என்ற பெயரில் மத்திய அரசு கொள்ளையடிப்பதா? என பலர் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )