திருவண்ணாமலை : குறைகிறதா கொரோனா தொற்று? தடுப்பூசி நிலவரம் என்ன?
திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட கொரோனா தொற்று இன்று 117 நபர்கள் பாதிக்கப்பட்டு 5 நபர்கள் இறந்துள்ளனர். இன்று, 8437 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாம் அலை அதிக பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. மேலும் இரண்டாவது அலை கொரோனா தொற்றால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முழுஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது கொரோனா தொற்று குறைந்த மாவட்டத்தில் ஒரு சில தளர்வுகள் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று 300-க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகி வந்தது. அது சற்று குறையத் தொடங்கி கடந்த நான்கு நாட்களாக நாளுக்கு நாள் மேலும் எண்ணிக்கை குறைந்துள்ளது. மாவட்ட நிர்வாக சீரிய முயற்சியினால் கட்டுக்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்ட மக்கள் சிறிது நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 47131 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு,45052 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 117 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 305 பேர் குணமாகி சென்றுள்ளனர். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி இன்று மட்டும் 5 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனா வைரஸால் பலியாகியுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 545 நபர்கள் இறந்துள்ளனர்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றிக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், போளுர் , ஆரணி , வந்தவாசி உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 1534 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி உள்ளிட்ட 12 வட்டங்களில் இன்று 180 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தற்போது 18 வயது முதல் 45 வயதுவரை உள்ளவர்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 8437 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, மாவட்டம் முழுவதும் இன்று நடைபெற்று முகாமில் கோவேக்சன் முதல் தடுப்பூசி 906 பேரும் இரண்டாவது தடுப்பூசி 118 பேரும் செலுத்தியுள்ளனர் மற்றும் கோவிஷீல்டு முதல் தடுப்பூசி 7131 நபர்களும் இரண்டாவது தடுப்பூசி 282 நபர்களும் செலுத்தியுள்ளனர்.





















