Kerala Corona Cases: கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் என்ன?
கொரோனா பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, கேரளாவைப் போல் தயார் நிலையில் இருக்க வேண்டும் - ககன்தீப் சிங்
இந்தியாவில் கிட்டத்தட்ட 55 நாட்களுக்குப் பிறகு, கடந்த 24 மணிநேரத்தில் தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 45,892 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 44,291 பேர் மட்டுமே கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கேரளா மாநிலத்தில் கண்டறியப்படும் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கையால், தேசிய அளவில் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் (Active Cases) கடந்த இரண்டு நாட்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு, கர்நாடகாக, மகராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் கண்டறியப்படும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக சரிந்தது. இருப்பினும், 10,௦௦௦க்கும் அதிகமான தினசரி பாதிப்புகளை கேரளா கடந்த ஒரு மாத காலமாக பதிவு செய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில், பதிவான நாட்டின் மொத்த பாதிப்புகளில் 30%க்கும் அதிகமான புதிய தொற்றுக்கள் கேரளாவில் மட்டுமே பதிவாகியுள்ளது. மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில்(3.6 கோடி) , எட்டு சதவிதம் பேர் (30 லட்சம்) இதுவரை கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 60 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தாலும், மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் அதன் பாதிப்பு விகிதம் (5%) கேரளாவை விட குறைவாக உள்ளது. 7 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 25,10,059 ஆக உள்ளது. அதாவது, கேரளாவில் 10 லட்சம் மக்கள் தொகையில் 90,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவில் இந்த எண்ணிக்கை 22,218 ஆக உள்ளது.
இந்த ஏற்றத்திற்கு காரணம் என்ன?
பிரபல வைராலஜிஸ்ட் மருத்துவர் ககன்தீப் காங் இது குறித்து தனது ட்விட்டர் குறிப்பில், " கொரோனா பரிசோதனை மற்றும் நோய்த் தொற்று கண்டறியப்படுவதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறைவான இறப்பு விகிதம் இருப்பதால் பெருந்தொற்று அம்மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பை வலுவிழக்க செய்யவில்லை என்பதை உணர முடிகிறது. கொரோனா பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, கேரளாவைப் போல் தயார் நிலையில் இருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
உதாரணமாக, கொரோனா தொற்று பரிசோதனை மூலம் தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 3.5% பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதம், தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்ட மாவட்ட அளவிலான சீரோ சர்வே ஆய்வில், மொத்த மக்கள்தொகையில் 23% பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. எனவே, 7ல் 1 என்றளவில் தான் கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் கண்டறியப்படுகிறது.
மேலும், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை விட தடுப்பூசி நிர்வகிப்பதில் கேரளா முன்னிலை வகிக்கிறது. அம்மாநிலத்தில், 45% பயனாளிகளுக்கு முதல்கட்ட தடுப்பூசியும், 10%க்கும் அதிகமான பயனாளிக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி டோஸ்களும் போடப்பட்டுள்ளன.