நெல்லையில் முழு ஊரடங்கு - தீவிர கண்காணிப்பில் போலீசார்; சட்டவிரோதமாக விற்பனை செய்த மதுபாட்டிகள் பறிமுதல்;
போலீசார் சோதனைச்சாவடிகள் அமைத்து சாலைகள், சுற்றுலா தலங்களில் தீவிர கண்காணிப்பு..
தமிழகத்தில் கொரோனா தொற்று ஒமிக்ரான் வைரஸ் 3- ம் அலையாக அதிவேகமாக பரவி வருகிறது. இதனைக்கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் கடந்த 10 நாட்களாக தொற்று பாதிப்பு இரட்டை இலக்கத்தில் இருந்து மூன்று இலக்கத்தில் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுபடுத்த கட்டுப்பாடுகள் மீண்டும் படிப்படியாக கொண்டு வரப்படுகிறது. இதன்படி தினமும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இரண்டாவது வாரமாக இன்று நடைமுறையில் இருந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கிய ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை 31 மணிநேரம் அமலில் இருக்கும். இந்த முழு ஊரடங்கைத் தொடர்ந்து நெல்லை பாளையங்கோட்டை, ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலை, கே.டி.சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்கள் முழு அளவில் மூடப்பட்டுள்ளது. போக்குவரத்தும் இயங்கவில்லை, இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது, காவல்துறை சார்பில் மாநகர எல்லைப் பகுதியில் 7 சோதனைச் சாவடிகளும், மாநகர் உள்பகுதியில் 18 சோதனைச் சாவடிகளும் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விதிமுறைகளை மீறி வருபவர்களை எச்சரிப்பதுடன் அபராதமும் விதிக்கப்பட்டு சோதனைச் சாவடிகளிலேயே திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்,
இதுபோன்று முழு ஊரடங்கினை முன்னிட்டு நெல்லை மாவட்ட எல்கை பகுதிகளில் 7 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 21 நான்கு சக்கர ரோந்து வாகனங்களும், 64 இரண்டு சக்கர ரோந்து வாகனங்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது, நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய சந்திப்புகள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் 52 காவல்துறை கண்காணிப்பு குழுக்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். முழு ஊரடங்கினைத் தொடர்ந்து நெல்லையில் மருத்துவம், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் மட்டும் நடந்து வருகிறது
காணும் பொங்கல் இன்று கொண்டாடப்படும் நிலையில் பொதுமக்கள் சுற்றுலாத்தலங்கள், ஆறு மற்றும் குள கரைகள் உள்ளிட்டவைகளில் ஒன்று சேர்வதை தடுக்கும் பொருட்டு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர், அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்காணிக்கு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் நெல்லை மாநகரின் அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் நேற்று சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபான விற்பனையில் ஈடுபட்ட 25 நபர்களிடமிருந்தும், பாளையங்கோட்டையில் 197 பாட்டில்கள், மேலப்பாளையத்தில் 315 பாட்டில்கள், பெருமாள்புரத்தில் 60 பாட்டில்கள், தச்சநல்லூரில் 143 பாட்டில்கள், டவுணில் 13 பாட்டில்கள், பேட்டையில் 18 பாட்டில்கள், மற்றும் மாநகர மதுவிலக்கு போலீசார் 169 பாட்டில்கள் என, நெல்லை மாநகர போலீசாரின் அதிரடி வேட்டையில் சிக்கிய மொத்தம் 915 பாட்டில்கள் மற்றும் ரூபாய் 17,290/- பறிமுதல் செய்து, மது விற்பனையில் ஈடுபட்ட 25 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.