Covishield Covaxin Price: ஒரு தவணை தடுப்பூசியின் விலை 275 ரூபாய்? கொரோனா தடுப்பூசிகளின் விலை நிர்ணயிக்க மத்திய அரசு திட்டம்!
கொரோனா தடுப்பூசிகளின் விலைகளை நிர்ணயிப்பதன் மூலம் அவற்றை அனைவரும் பயன்படுத்தும் விதமாக தேசிய மருந்துப் பொருள்கள் விலை நிர்ணய ஆணையத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்ட், கோவாக்ஸின் ஆகியவற்றின் விலைகள் விரைவில் தேசிய மருந்துப் பொருள்கள் விலை நிர்ணய ஆணையத்தால் விலை நிர்ணயிக்கப்பட்டு, ஒரு தவணை ஊசியின் விலை 275 ரூபாய் எனவும், கூடுதலாக சேவைக் கட்டணமாக 150 ரூபாய் எனவும் விதிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா தடுப்பூசிகளின் விலைகளை நிர்ணயிப்பதன் மூலம் அவற்றை அனைவரும் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் விதமாக தேசிய மருந்துப் பொருள்கள் விலை நிர்ணய ஆணையத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், தனியார் மருத்துவமனைகளில் கோவாக்ஸின் தடுப்பூசியின் ஒரு தவணைக்கான விலை 1200 ரூபாய் எனவும், ஒரு தவணை கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலை 780 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கட்டணத்தில் 150 ரூபாய் சேவைக் கட்டணம் உள்ளடக்கியதாக இருக்கிறது. மேலும் இந்த இரண்டு தடுப்பூசிகளும் நாடு முழுவதும் அவசர நிலைத் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த ஜனவரி 19 அன்று, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் சார்பில் உருவாகப்பட்ட கோவிட் தொற்று வல்லுநர் குழு வெளியிட்ட பரிந்துரைகளில் கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்ட், கோவாக்ஸின் ஆகியவற்றைச் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு நாடு முழுவதும் உள்ள வயது வந்தோருக்கான பயன்பாட்டிற்காக வழக்கமான சந்தையில் விற்பனை செய்யும் ஒப்புதலுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
`தேசிய மருந்துப் பொருள்கள் விலை நிர்ணய ஆணையம் தடுப்பூசிகளின் விலையை நிர்ணயம் செய்வதற்காக உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு தவணை ஊசியின் விலை 275 ரூபாய் விலை எனவும், சேவைக் கட்டணமாக 150 ரூபாய் கட்டணமும் விதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன’ என மத்திய அரசு அதிகாரிகளின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சீரம் நிறுவனத்தின் அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களுக்கான இயக்குநர் பிரகாஷ் குமார் சிங் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் அலுவலகத்திற்குக் கடந்த ஆண்டு அக்டோபர் 25 அன்று எழுதிய கடிதத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு வழக்கமான சந்தையில் விற்பனை செய்யும் உரிமம் அளிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் இயக்குநர் கிருஷ்ண மோகன் கோவாக்ஸின் தடுப்பூசியின் வேதியியல் தன்மை, உற்பத்தி முறை, அதன் பரிசோதனை முடிவுகள் முதலானவற்றை சமர்பித்து, கோவாக்ஸின் விற்பனைக்கான ஒப்புதலைக் கோரியிருந்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 3 அன்று, மத்திய அரசு கோவாக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளை அவசர காலப் பயன்பாட்டுக்கான ஒப்புதலை வழங்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இதுவரை நாடு முழுவதும் 163.5 கோடி பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.