Covid Booster dose | பூஸ்டர் 3-வது தடுப்பூசியா? ஏன் போடவேண்டும்? ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?
லான்செட், பூஸ்டர் தடுப்பூசி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதை 93% குறைப்பதாகவும், கடுமையான நோய்களுக்கு எதிராக 92% சிறப்பாகவும், கோவிட் 19 தொடர்பான மரணங்களை 81% குறைப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது முந்தைய நாளை விட 13 சதவீதம் அதிகரித்து, மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை, 7,23,619 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, டெல்லி, மும்பை போன்ற தலைநகரங்களில் தொற்றுப் பரவல் கணிசமாக அதிகரித்துள்ளது.
இதில் ஒமிக்ரான் வகைத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,033 மட்டுமே. இதன்மூலம் டெல்டா வகை வைரஸால் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதை உணரலாம். டெல்வா வகைத் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொண்டு, இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதோர் உடனடியாக செலுத்துவது அவசியம்.
இந்தியாவில் மொத்தம் 151.94 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 91% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 66% பேர் இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளனர். இந்த சூழலில், கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று (ஜன.10) நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது.
பூஸ்டர் டோஸ் யாருக்கு?
* முதல்கட்டமாக, மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் மற்றும் இணை நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
* இணை நோய்கள் இல்லாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, தற்போது பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுவதில்லை.
எப்படிச் செலுத்தப்படுகிறது?
* பூஸ்டர் டோஸ் செலுத்த விரும்புவோர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தியிருக்க வேண்டும்.
* 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி, 9 மாதங்கள் அல்லது 39 வாரங்கள் நிறைவடைந்தவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்.
* முதல் இரண்டு தவணைக்கு எந்த வகைத் தடுப்பூசி (கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு) செலுத்தப்பட்டதோ, அதே வகைத் தடுப்பூசி மட்டுமே பூஸ்டர் டோஸாக செலுத்தப்படும். (வெளிநாடுகளில் மாற்றியும் செலுத்தப்படுகின்றன.)
* முந்தைய தவணை தடுப்பூகளைப் போல பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள, அரசின் கோவின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
* பூஸ்டர் டோஸ் செலுத்த மருத்துவர் சான்றிதழ் எதுவும் தேவையில்லை. தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாகச் சென்று செலுத்திக்கொள்ளலாம்.
* ஆதார் அட்டை, பான் அட்டை, கடவுச் சீட்டு, வாகன ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அடையாள அட்டைகளைக் காண்பித்து, பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் இன்று (ஜன.10) 4 லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஆய்வுகள் சொல்வதென்ன?
ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வில், பூஸ்டர் தடுப்பூசி ஒமிக்ரான் தொற்றுக்கு எதிராக சிறப்பாகச் செயலாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல உலகின் பழைமையான மற்றும் பிரபல மருத்துவ இதழ் லான்செட், பூஸ்டர் தடுப்பூசி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதை 93% குறைப்பதாகவும், கடுமையான நோய்களுக்கு எதிராக 92% சிறப்பாகவும், கோவிட் 19 தொடர்பான மரணங்களை 81% குறைப்பதாகவும் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது?
''உருமாற்ற கொரோனா வைரஸ் தொற்றுகளுக்கு முதன்மைத் தடுப்பூசி தவணைகள் போதுமானதாக இல்லாத சூழலில் பூஸ்டர் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மக்களுக்கு இது அவசியமானது. தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு 6 மாத காலத்தில், அனைத்து வயதினருக்கும் கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் 8 சதவீதம் குறைகிறது.
50 வயதுக்கு மேற்பட்டோருக்கு, கடுமையான நோய்க்கு எதிரான தடுப்பூசியின் செயல்திறன் 10 சதவீதம் அளவுக்குக் குறைகிறது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்போது ஆன்டிபாடிகள் அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தி உயர்கிறது'' என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
இதுகுறித்துப் பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி 'ஏபிபி நாடு' செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ''இந்தத் தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசி என்றோ அல்லது 3வது தடுப்பூசி என்றோ இதுவரை யாரும் சொல்லவில்லை. தற்போது இதை முன்னெச்சரிக்கை (precautionary) தடுப்பூசி என்றே அழைக்கின்றனர்.
அதிகத் தொற்று அபாயத்துக்கு வாய்ப்புள்ளோர் மற்றும் இணைநோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோரின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்ட பூஸ்டர் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. எனினும் இரு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட பொது மக்களுக்கு அடுத்தடுத்த தவணை தடுப்பூசிகள் போட வேண்டிய தேவை இருக்காது.
தடுப்பூசிகள் செயலாற்றும் முறையைப் பொறுத்து 3 பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
முதல் வகைத் தடுப்பூசி ஓர் உடலில் செலுத்தப்பட்டால், அந்த நோய் மீண்டும் வராது. எனினும் கிருமிகள் உலகில் நிலைத்திருக்கும். தொண்டை அடைப்பான், ரணஜன்னி, போலியோ உள்ளிட்ட நோய்த் தடுப்பூசிகள் அந்த வகையைச் சேர்ந்தவை.
இரண்டாவது வகைத் தடுப்பூசியைச் செலுத்தினால், அந்த நோய் வராது. அந்த வைரஸ் / பாக்டீரியாவும் மெல்ல மெல்ல அழிந்துவிடும். இதற்குப் பெரியம்மையை உதாரணமாகச் சொல்லலாம். இதனால் இப்போது பெரியம்மைக்கான தடுப்பூசியே போடப்படுவதில்லை.
3-வது வகைத் தடுப்பூசியால், நோய் வராமல் முழுமையாகத் தடுக்க முடியாது. ஆனால் அதன் பாதிப்பைக் குறைக்க முடியும். காசநோய் தடுப்பூசி (BCG vaccine) இந்த வகையைச் சேர்ந்தது. பிசிஜி தடுப்பூசி போட்டவர்களுக்கும் காசநோய் வரலாம். ஆனால் மூளை காசநோயும், உடல் முழுவதும் பரவக்கூடிய காசநோயும் வராது. நிமோனியா, இன்ஃப்ளூயன்ஸா வகைத் தடுப்பூசிகளும் இதே ரகம்தான். அதைப் போன்ற ஒரு வகைத் தடுப்பூசிதான் கொரோனா தடுப்பூசிகள். மீண்டும் தொற்று வரலாம், ஆனால் பாதிப்பு குறைவாக இருக்கும்.
அதனால் அனைத்து மக்களும் கொரோனா 2 தவணை தடுப்பூசிகளையும், தேவையுள்ளோர் பூஸ்டர் தடுப்பூசிகளையும் கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும்'' என்று குழந்தைசாமி தெரிவித்தார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )