தமிழ்நாட்டில் ஒமிக்ரான் 100-ஐ தாண்டியது - மேலும் 74 பேருக்கு தொற்று உறுதி..!
தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 100-ஐ தாண்டியுள்ளது. 66 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் மேலும் 74 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது என்று மருத்துவத்துறை கூறியுள்ளது. 115 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் 74 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 2 எஸ் ஜீன் டிராப் மாதிரிகளின் பரிசோதனை முடிவு நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
117எஸ் ஜீன் டிராப் மாதிரிகளின் பரிசோதனை முடிவில் 74 பேருக்கு ஒமிக்ரானும், 41 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே 46 பேருக்கு ஒமிக்ரான் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 74 பேருக்கு உறுதியானதன் மூலம் தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது. இதில், 66 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 34 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே பயிற்சி மையத்தில் 34 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் குழு பரவலா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, ஒமிக்ரான் பரவும் வேகம் அதிகம் என்பதால் திடீரென தேவைப்படும் மருத்துவ உதவி இந்தியாவுக்கு பெரிய சவாலானதாக இருக்குமென WHO தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். ஒமிக்ரானின் எழுச்சி மிக வேகம் என்றும், பலர் நோய்வாய்ப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ள அவர், ஒமிக்ரானின் பரவும் வேகமும், மாறுபாடும் உலகளவில் பாதிப்புகளை அதிகரித்துள்ளது. திடீரென அதிகரிக்கும் பாதிப்பு ஒரு எச்சரிக்கை மணியை அடித்துச் சொல்கிறது. மக்கள் கவலையில் இருக்கிறார்கள். உங்களுக்கு அறிகுறிகள் இல்லை என்றாலும், மருத்துவர்களிடம் ஆலோசனை பெற மக்கள் விரும்புவார்கள். ஏதாவது ஒரு மருத்துவம் சார்ந்த ஊழியரின் ஆலோசனை தேவைப்படும். அதற்கு அரசு தயாராக இருக்க வேண்டும் என்றார். மேலும், நோயாளிகளை கையாளும் மருத்துவர்கள், செவிலியர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், மருத்துவமனை என்பதையும் தாண்டி நோயாளிகளை அவர்களின் வீட்டிலேயும், தனிமைப்படுத்தும் இடங்களிலும் கூட முறையாக கவனிக்கும் அடிப்படையை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்