கொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு, அலர்ஜியால் ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக மத்திய தடுப்பூசி ஆய்வு குழு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் மிகவும் தீவிரம் அடைந்தது. அந்த பரவல் தற்போது ஓரளவு குறைய தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பல இடங்களில் தடுப்பூசி தொடர்பான தவறான புரிதல் காரணமாக முதலில் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் காட்டி வந்தனர். ஆனால் தற்போது அந்த நிலை மாற தொடங்கி பலர் தடுப்பூசி செலுத்த ஆர்வமுடன் வருகின்றனர்.
எனினும் தடுப்பூசி செலுத்தி கொண்டதால்தான் மரணம் ஏற்படுகிறது என்ற மக்களின் நம்பிக்கையை போக்க தடுப்பூசி செலுத்திய பின்பு இறந்தவர்கள் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை ஒரு குழுவை அமைத்தது. ஏஇஎஃப்ஐ என்ற இந்தக் குழு 31 மரணங்கள் தொடர்பாக ஆய்வு செய்தது. அதாவது, பிப்ரவரி 5-இல் நிகழ்ந்த 5 மரணங்கள், மார்ச் 9-இல் நிகழ்ந்த 8 மரணங்கள், மார்ச் 31 ஆம் தேதி நிகழ்ந்த 18 மரணங்கள் என்று மொத்தம் 31 மரணங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவற்றை ஆய்வு செய்த குழு தற்போது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி,"31 மரணங்களில் 18 மரணங்களுக்கும் தடுப்பூசிக்கு சம்பந்தமே இல்லை. மேலும் 7 மரணங்களுக்கான உரிய காரணத்தை அறிய முடியவில்லை. 3 மரணங்கள் தடுப்பூசி ஒரு காரணமாக இருக்கலாம். 2 மரணங்கள் எப்படி நிகழ்ந்தது என்று உரிய ஆவணங்கள் இல்லை. ஒரே ஒரு மரணம் மட்டும் தடுப்பூசி செலுத்திய பிறகு ஏற்பட்ட அனஃபைலேக்சிஸ் என்ற அலர்ஜியின் காரணமாக ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
அதன்படி கடந்த மார்ச் 8-ஆம் தேதி தடுப்பூசி செலுத்திக்கொண்ட 68 வயது நபர் ஒருவர் மார்ச் 9-ஆம் தேதி மரணமடைந்துள்ளார். அவருக்கு தடுப்பூசி தொடர்பான அனஃபைலேக்சிஸ் என்ற அலர்ஜி ஏற்பட்டு இறந்துள்ளதாக இந்தக் குழு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம் 16 மற்றும் 19-ஆம் தேதி தடுப்பூசி செலுத்தி கொண்ட இருவருக்கு அலர்ஜி ஏற்பட்டது. எனினும் அவர்கள் இருவரும் சிகிச்சை பிறகு குணம் அடைந்துவிட்டனர். ஆனால் இந்த நபர் மட்டும்தான் தடுப்பூசி செலுத்திய பிறகு ஒவ்வாமை காரணமாக இறந்துள்ளார்.
அனஃபைலேக்சிஸ் என்பது ஒரு உணவு, மருந்து அல்லது ஊசி தொடர்பாக ஏற்படும் அலர்ஜி ஆகும். சில சமயங்களில் தேனீக்கள் கடித்தாலும் இந்த மாதிரியான அலர்ஜி ஏற்படும். இந்த மாதிரியான அலர்ஜி ஏற்படும் போது பல்ஸ் அளவில் மாறுபாடு ஏற்படலாம். அதை சரியாக சிகிச்சை அளிக்காமல் விட்டால் மரணம் வரைக் கூட செல்லக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க: இந்தியாவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )