Children : குழந்தைகள் நீங்க பேசுறத கவனிக்கலையா? சோர்வா இருக்காங்களா? இதை முதல்ல செக் பண்ணுங்க..
குழந்தைகளின் கவலை அவர்களின் இயல்பான நடத்தையை முற்றிலும் மாற்றிவிடும். படிப்பு மற்றும் இதர பல விஷயங்களால் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இது உடனடியாக கண்காணிக்கப்பட வேண்டும்.
தற்போது உள்ள கால சூழ்நிலையில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவருமே அவசரமான வாழ்க்கை முறையை பின்பற்றி வருகிறோம். அதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி பதட்டம், மனஅழுத்தம் ஏற்படுகிறது. இதில் குழந்தைகளும் அடக்கம். படிப்பு மற்றும் இதர பல விஷயங்களால் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இது அவர்களின் பதட்டத்தையும், மனச்சோர்வையும் அதிகரித்து அவர்களின் இயல்பான நடத்தையில் இருந்து முற்றிலும் மாற்றி விடுகிறது. குழந்தைகளின் இந்த பிரச்சனை சில அறிகுறிகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கவனம் இல்லாமல் இருப்பது
குழந்தைகள் கவனக்குறைவாக இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு ஏதோ ஒரு கவலை மனதில் உள்ளது என்று அர்த்தம். அதனால் அவர்களால் படிப்பிலோ அல்லது மற்ற விஷயத்திலோ முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் இருக்கலாம். எதையாவது பற்றி சிந்தித்து கொண்டே இருப்பார்கள் அல்லது ஏதாவது தவறு நடந்து விடும் என்று பயப்படுவார்கள்.
பசியின்மை
பொதுவாக பதட்டம் ஏற்பட்டால் அது ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்தி பசியின்மையை உண்டாக்கும். அதனால் தான் குழந்தைகள் பதட்டத்தில் இருக்கும் போது சாப்பிட மறுக்கிறார்கள். உங்கள் குழந்தைகளிடம் நீண்ட நாட்களாக இது போன்ற மாற்றங்கள் தென்பட்டால் உடனடியாக உங்களின் குடும்ப நல மருத்துவரை அணுகவும்.
அதிக கோபம்
மனஅழுத்தம் உள்ள சூழலில் இருக்கும் போது பதட்டம் ஏற்படும். அந்த சமயம் அவர்களால் அச்சுறுத்தலை சமாளிக்க இயலாத போது அல்லது வெளிப்படுத்த முடியாத போது அவர்களின் உணர்ச்சிகள் விரக்தியை உண்டாக்கி அது கோபமாக மாறிவிடும். இதனால் சிறு விஷயங்களுக்கு கூட அதிகமாக கோபப்படுவார்கள்.
அழுகை
எப்போது ஒரு குழந்தை தன்னுடைய உண்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த இயலாத போது தங்களை பாதிக்கப்பட்டவர்களாக எண்ணுகிறார்கள். அந்த சமயத்தில் அவர்களின் உணர்ச்சி அழுகையாக மாறி வெளிவருகிறது. இப்படி சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் உங்கள் குழந்தை அழுகையை கையாள்வது போல தோன்றினால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அது அவர்களின் மனதில் உள்ள கவலையின் வெளிப்பாடாக கூட இருக்கலாம். உடனே அவர்களுடன் பேசி, சிந்தனையை மாற்றி உற்சாகப்படுத்த முயற்சியுங்கள்.
ஆரோக்கியம் பாதிப்பு
குழந்தைகள் கவலையாக இருக்கிறார்கள் என்றால் அடிக்கடி நோய்வாய் படுவார்கள். எந்த ஒரு வேலையையும் முழுமனதோடு ஈடுபட்டு செய்யமாட்டார்கள். அதிகமாக தூங்குவது, அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போவது, சோம்பல் போன்றவை கவலையின் அறிகுறியாக இருக்கலாம். இப்படிப்பட்ட அறிகுறிகள் உங்கள் குழந்தையுடன் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )