Cancer Deaths in India: ஆண்டுக்கு 8 லட்சம் மரணங்கள்.. இந்தியாவின் சாபமாக மாறும் புற்றுநோய்..! பெரும் அதிர்ச்சி..!
புற்றுநோயால் 2020ல் 7 லட்சத்து 70 ஆயிரத்து 230 பேரும், 2021ல் 7 லட்சத்து 89 ஆயிரத்து 202 பேரும், 2022ல் 8 லட்சத்து 8 ஆயிரத்து 558 பேரும் உயிரிழந்துள்ளனர்.
புற்றுநோய்க்கு இந்தியாவில் ஆண்டுக்கு 8 லட்சம் பேருக்கு மேல் உயிரிழந்து வருவதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அதிர்ச்சியளிக்கும் தகவல் தெரிவித்துள்ளது.
மக்களவை உறுப்பினர் கேள்விக்கு பதில்
நாட்டில் புற்று நோயினால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்து மக்களவை உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. அதில், மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, தேசிய சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக, தொற்றாத நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவதற்கான தேசியத் திட்டத்தின் கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி உதவியை வழங்குவதாக கூறியுள்ளது.
புற்றுநோய்க்கான திட்டங்கள்
மேலும், "புற்று நோய் தடுப்பு இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். புற்றுநோய் தடுப்பு உள்கட்டமைப்பு, மனித வள மேம்பாடு, சுகாதார மேம்பாடு மற்றும் விழிப்புணர்வை உருவாக்குதல், ஆரம்ப கட்டத்திலேயே நோய் இருபப்தை கண்டறிதல், போன்றவற்றில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக நிதி உதவியும் வழங்குகிறது," என்று குறிப்பிட்டுள்ளது.
ஆண்டுவாரியாக நோய் பாதிப்புகள்
2020 ஆம் ஆண்டில், நாட்டில் 13 லட்சத்து 92 ஆயிரத்து 179 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2021ல் 14 லட்சத்து 26 ஆயிரத்து 447 ஆகவும், 2022ல் 14 லட்சத்து 61 ஆயிரத்து 427 ஆகவும் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று தகவல்கள தெரிவிக்கப் பட்டுள்ளன. இந்த எண்ணிக்கைகளை பார்க்கும்போது புற்றுநோய் மனித குலத்தின் சாபமாக மாறிவிட்டிருக்கிறது என்பது கண்கூடாக தெரிகிறது. புற்றுநோயால் பாதிக்க்படுபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காரணம் மட்டும்தான் என்றில்லாமல், ஒரு குறிப்பிட்ட வயதினர் தான் என்றில்லாமல், பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை எல்லோருக்கும் வருகிறது. அதுவே இந்த நோயை குறித்த அச்சத்தை அதிகரிக்க செய்கிறது.
ஆண்டுவாரியாக கேன்சர் உயிரிழப்புகள்
அதேபோல், புற்றுநோய் இறப்புகளை எடுத்துக்கொண்டால், 2020ல் 7 லட்சத்து 70 ஆயிரத்து 230 பேரும், 2021ல் 7 லட்சத்து 89 ஆயிரத்து 202 பேரும், 2022ல் 8 லட்சத்து 8 ஆயிரத்து 558 பேரும் உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு 2 லட்சத்து 10 ஆயிரத்து 958 பேர் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் 93 ஆயிரத்து 536 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 14 லட்சத்து 61 ஆயிரத்து 427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புற்றுநோய் இறப்புகளிலும் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அங்கு ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 818 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 50 ஆயிரத்து 841 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )