(Source: ECI/ABP News/ABP Majha)
Fact Check: பொள்ளாச்சியில் நான்கு சக்கரங்களில் இயங்கும் பேருந்து? - வைரலாகும் வீடியோ உண்மையா?
Fact Check: பொள்ளாச்சியில் அரசுப் பேருந்து நான்கு சக்கரங்களில் இயங்குவதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Fact Check: பொள்ளாச்சியில் அரசுப் பேருந்து ஆறு சக்கரங்களுக்குப் பதிலாக நான்கு சக்கரங்களில் இயங்குவதாக பரவும் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் பரவும் வீடியோ:
சங்கர் கணேஷ் அதிமுக என்ற சமூக வலைதள கணக்கில், அரசுப் பேருந்து ஆறு சக்கரங்களுக்கு பதிலாக, நான்கு சக்கரங்களில் இயங்கும் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த பதிவில், “பொள்ளாச்சி டு திருப்பூர் செல்லும் பேருந்தின் பின்புற அச்சில் நான்கு சக்கரங்கள் இருக்க வேண்டிய நிலையில், வெறும் இரண்டு சக்கரங்களுடன் அந்த அரசுப் பேருந்து இயங்கிக் கொண்டுள்ளது. பயணிகள் அச்சத்தில் சென்று கொண்டுள்ளனர். அரசினுடைய அவலம் இந்த பேருந்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்" என்ற கேப்ஷனுடன் திமுக அரசை சாடும் விதமாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மைத்தன்மை என்ன?
இதன் உண்மைத்தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்து பார்த்தோம். அப்போது 2019ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி DT Next செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, ”பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்று, ஆறு சக்கரங்களுக்குப் பதிலாக நான்கு சக்கரங்களில் இயங்கும் காணொலி வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், TN 38 1419 என்ற எண் கொண்ட இந்த அரசுப் பேருந்து இயங்குவதற்கு தகுதியற்றது. இதனால், இப்பேருந்து அழிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பொள்ளாச்சியில் இருந்து காமநாயக்கன்பாளையம், சோமனூர், அன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் பேருந்து டெப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டது. பேருந்தின் இயக்கம் மற்றும் அதன் வழித்தடம் குறித்து ஏற்கனவே மூத்த அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், பயணிகள் யாரும் பயணிக்கவில்லை என்றார்” என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதனை ஈடிவி பாரத் மற்றும் Behindwoods ஆகிய ஊடகங்களும் 2019ஆம் ஆண்டு செய்தியாக வெளியிட்டுள்ளன. மேலும், அந்த ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முடிவு:
தேடலின் முடிவாக நான்கு சக்கரங்களில் இயங்கும் அரசு பேருந்து என்று வலைதளங்களில் வைரலாகும் காணொலி 2019ஆம் ஆண்டு வெளியானது. தற்போது திமுக ஆட்சியில் இதுபோன்ற நிகழ்வுகள் எதுவும் அரங்கேறவில்லை என்பது ஆதாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.
பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Newsmeter என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பு சற்றே திருத்தி எழுதப்பட்டுள்ளது.