Yuvan Shankar Raja: மகிழ்ச்சியைக் கொண்டாடவும், சோகத்தை தீர்த்துக் கொள்ளவும்... கைநீட்டி அழைக்கும் யுவன்!
எங்கே இசையமைக்க வேண்டும், எங்கே மௌனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தால் மட்டுமே உயிர்ப்பான பின்னணி இசையை தரமுடியும். அதுபோன்ற பின்னணி இசையை உருவாக்குவதில் தான் மெனக்கெடுவார் யுவன்!
யுவன்... ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் உணர்வு. இங்கு இசையில் யுவன் தந்த உணர்வு சம்திங் ஸ்பெஷல்... ஒரு பாடலில் யுவன் தரும் உணர்வுதான் அவரின் பலம். அதேநேரம் நான் உட்பட பலரின் stress buster யார் எனக் கேட்டால் யுவன் என பதில் வரும். எத்தனை அயர்ச்சி, சோகம், டென்ஷன் இருந்தாலும், ஒற்றை பாடலில் அத்தனையும் போக்க யுவனால் மட்டுமே முடியும். அதுதான் யுவனின் மேஜிக்.
யுவன் ஒரு இசையமைப்பாளர் என்பதையெல்லாம் தாண்டி அவர் ரசிகனின் உணர்வுகளோடு கலந்தவர். அதனால் தான் யுவனுக்கு பேனர் வைப்பது, கட் அவுட் வைப்பது எல்லாம் சாத்தியமாகிறது. ஆம். ஒரு மாஸ் ஹீரோவையும் தாண்டி யுவனுக்கு இருக்கும் ரீச் அளவிட முடியாதது. யுவன் இசையின் மீது யாருக்கும் எந்த விமர்சனமும் இருந்ததில்லை. ரஹ்மானை, ஹாரிசை, அனிருத்தை ரசிப்பவர்கள் கூட யுவனை ரசிப்பார்கள், கொண்டாடுவார்கள். யுவனை எல்லார்க்கும் பிடிக்கும். இத்தனை ஆண்டுகளில் யுவன் சம்பாதித்தது இதைத்தான்.
இசைக்கருவிகளின் சத்தத்தையும் தாண்டி உயிரோட்டமான இசையை சிலரால் மட்டுமே கொடுக்க முடியும். அந்த பட்டியலில் உள்ள மிகச் சிலரில் யுவனும் ஒருவர். உதாரணத்திற்கு, சுசீந்திரனின் ஆதலால் காதல் செய்வீர் படத்தில் பல்வேறு பாடல்கள் இருந்தாலும், படத்தின் முடிவில், ”ஆராரோ என்று சொல்ல தாயும் இல்லை” என யுவன் உச்சஸ்தாயியில் பாடத் தொடங்கும்போதே கண்களில் இருந்து ஒரு சொட்டு நீராவது வழிந்திருக்கும்.
70, 80களில் பிறந்தவர்களின் காதலுக்கு எப்படி இளையராஜாவும், அவரது பாடல்களும் உதவியதோ, அதே போல 90களில் பிறந்தவர்களின் காதலுக்கு யுவனின் இசை பேருதவியாய் இருந்தது. அதேநேரம் காதலின் பிரிவு என்றாலும் யுவன் குரலில் வெளியாகும் மென்சோகப் பாடல்கள் தான் இளைஞர்களுக்கு குளுக்கோஸாக இருந்தது. தனது காதல் தோல்விக்கு பிறகு ”போகாதே” பாடலை தொடர்ச்சியாக கேட்டு, தம் அடித்தபடி, அழுதுகொண்டே இருந்த ஒருவரை நான் பார்த்திருக்கிறேன்.
யுவனின் versatility கூட அவரின் தனித்துவம்தான். ஒரே நேரத்தில் வெவ்வேறு படங்களில் அவரால் பணியாற்ற முடியும். ஆனால் ஒரு படத்தின் சாயல் இன்னொரு படத்தில் வராமல் எல்லா படத்திலும் நேர்த்தியான இசையை தருவதில் யுவன் அப்படியே அவர் தந்தை இளையராஜாவை போன்றவர்.
தமிழின் ஆகச்சிறந்த ஸ்டைலிஷ் டான் படமான பில்லாவிற்கும் யுவன் தான் இசை, நேட்டிவிட்டி சொட்டச் சொட்ட எடுக்கப்பட்ட பருத்திவீரன் படத்திற்கும் யுவன் தான் இசை. நம் மண்ணின் இசையை மிகச்சரியாக பதிவு செய்த வெகு சிலரில் யுவனும் ஒருவர். பருத்திவீரன் எல்லாம் இறங்கி அடித்திருப்பார்.
உச்சத்தில் உள்ள அஜித், சூர்யா உள்ளிட்ட ஆக்ஷன் ஹீரோக்கள் படங்களுக்கு இசையமைக்கும் யுவன், ஆரண்ய காண்டம் என்ற பாடல்களே இல்லாத கல்ட் க்ளாசிக் முயற்சிகளையும் ஒரு கை பார்ப்பார். இன்னார் ஹீரோ, இந்த தயாரிப்பு நிறுவனம், இவர்தான் டைரக்டர் என்ற எந்த அளவுகோலும் இல்லாமல் பெரிய படம், சிறிய படம், சிறிய ஹீரோ, அறிமுக இயக்குநர் என அனைவருடனும் வேலை செய்வார்.
கற்றது தமிழ், காதல் சொல்ல வந்தேன், பதினாறு, அறிந்தும் அறியாமலும், குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும், கழுகு, யாக்கை, பாணா காத்தாடி, வாமனன், ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு யுவன் இசை தான் விசிட்டிங் கார்ட்.
வெவ்வேறு படங்களில் பணிபுரிந்தாலும்கூட தனது நண்பர்களுடன் பணிபுரியும் படங்களில் தனித்து தெரியும்படியான ஸ்பெஷல் பாடல்களை யுவன் வழங்கியுள்ளார். செல்வராகவன், விஷ்ணுவர்தன், வெங்கட் பிரபு, சிம்பு, அமீர் என யுவன் பணிபுரிந்த அத்தனை படங்களின் பாடல்களும் இன்றும் பலரது பிளேலிஸ்ட்டில் முக்கிய இடம் வகிக்கின்றன.
வெங்கட் பிரபுவின் சென்னை 28, சரோஜா, கோவா, மங்காத்தா போன்ற படங்களில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் வேறு வேறு ஜானர். அதேபோல் விஷ்ணுவர்தனின் அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம் படங்களில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகை. காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி ஒரு எக்ஸ்ட்ரீம் என்றால், புதுப்பேட்டை இது எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பானது. இவர்கள் எல்லாரையும் விட சிம்புவும், யுவனும் இணைந்த பாடல்களில் 90% பாடல்கள் ஹிட்லிஸ்ட்டில் இடம்பெற்றவை.
நா.முத்துக்குமார் – யுவன் காம்போவை இதில் தவிர்க்கவே முடியாது. அப்பாக்கள் காலத்தில் எம்எஸ்வி கண்ணதாசன், அண்ணன்கள் காலத்தில் இளையராஜா – வைரமுத்து என்றால், 90களில் பிறந்த இளைஞர்களுக்கு யுவனும் – நா.முத்துக்குமாரும் தான். இருவரின் மேதைமை குறித்து சிலாகிக்க "பறவையே எங்கு இருக்கிறாய்" என்ற ஒற்றை பாடல் போதும். அது ஒரு யுகத்திற்கான பாடல்.
ஒரு பாடலுக்கு இசையமைப்பதை யார்வேண்டுமானாலும் செய்து விடலாம். அதுவும் தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில் அது ரொம்ப சுலபமும் கூட. ஆனால் படத்தின் அடிநாதமான பின்னணி இசையை உருவாக்குவது தான் கடினம். எங்கே இசையமைக்க வேண்டும், எங்கே மௌனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தால் மட்டுமே உயிர்ப்பான பின்னணி இசையை தரமுடியும். அதுபோன்ற பின்னணி இசையை உருவாக்குவதில் தான் மெனக்கெடுவார் யுவன். பிற இசையமைப்பாளர்களை விட, பின்னணி இசையில் யுவன் சங்கர் ராஜா ஒருபடி மேலேதான் இருக்கிறார். பின்னணி இசையில் ராஜா என்றால் அது யுவன் மட்டுமே.
அப்படி, யுவனின் பின்னணி இசை குறித்து வாழ்நாளுக்கெல்லாம் பேசப்படக் கூடிய படம் ஆரண்ய காண்டம்தான். அதற்கு அடுத்த இடங்கள் புதுப்பேட்டை, பருத்திவீரன், மௌனம் பேசியதே, 7ஜி ரெயின்போ காலனிக்கு. இந்த படங்களுக்கு எல்லாம் வேறு, வேறு எக்ஸ்ட்ரீம்களில் இசை அமைத்திருப்பார் யுவன். ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் படங்களுக்கான பின்னணி இசை, பருத்திவீரனில் கிராமிய மணம் ததும்பும் உயிரோட்டமான பின்னணி இசை பற்றி தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம்.
இசை ராட்சசனின் உயிர் பிடுங்கும் இசையோடு 7ஜி படத்தை நாம் பார்க்கும்போது கதாநாயகன் கதிரின் தனிமையை நம்மால் உணர முடியும். அதேபோல் பில்லா, மங்காத்தா, வல்லவன், மன்மதன், சண்டக்கோழி, தாமிரபரணி போன்ற படங்களுக்கான பின்னணி இசைதான் இன்றுவரை மாஸ் படங்களுக்கான ஒரு பெஞ்ச்மார்க். இப்படியாக தமிழ் சினிமாவின் சிறந்த பத்து பின்னணி இசையை கணக்கிட்டால், அதில் யுவனின் பெயரே 5,6 முறை இடம் பெற்றிருக்கும் என்பதே அவருக்கான பெருமை.
உண்மையில் மகிழ்ச்சியை கொண்டாடவும், சோகத்தை தீர்த்துக் கொள்ளவும் யுவன் இசை நம்மை கையை நீட்டி அழைக்கும். நட்பு, காதலை கொண்டாடவும், அதே நட்பு, காதலின் பிரிவில், மடியில் சாய்த்து ஆறுதல் சொல்லவும் இசை ரூபத்தில் யுவன் தோன்றுவார். 90களில் பிறந்தவர்களை அதிகமாக அழவைத்த, கொண்டாட வைத்த, உணர்வுகளை கடத்திய ஒரே இசையமைப்பாளர் யுவன் மட்டுமே. அதனால் தான் ரசிகர்கள் அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள்.
//சிரிக்கின்ற போதிலும் நீ அழுகின்ற போதிலும்.. உன் வழித்துணைப் போலவே நான் இசையுடன் தோன்றுவேன்..
I ll be there for you… !! // என யுவனின் ஆல்பத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த வரிகள், வெறும் வரிகள் இல்லை. யுவன் ரசிகர்களுக்கான உற்சாக டானிக்
Yes.. He ll Always Be There For Us…
கட்டுரையாளர் : மணிகண்டன்