Irfan Controversy : மீண்டும் சர்ச்சையில் யூ ட்யூபர் இர்ஃபான்.. தொப்புள் கொடியை வெட்டும் வீடியோ.. விளக்கமளிக்க நோட்டீஸ்
பிரபல யூடியூபர் தனது மனைவிக்கு குழந்தை பிறக்கும்போது தொப்புள்கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்ட நிலையில் இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்க மருத்துவத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது
இர்ஃபான்
கையேந்தி பவன் முதல் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் வரை சென்று விதவிதமான உணவுகளை ரிவியு செய்து யூடியூபில் வீடியோ வெளியிட்டு வருபவர் இர்ஃபான். நாளடைவில் இவரது சேனல் பிரபலமாக அரசியல் பிரமுகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை தனது ஷோவிற்கு விருந்தினராக அழைத்து வீடியோ வெளியிட்டார். பின் தனது வீட்டிலேயே ஹைஃபையான செட் அப் அமைத்து அங்கிருந்தபடியே வீடியோ வெளியிட்டார். இவரது திருமணத்தில் பல்வெறு முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். புகழின் உச்சத்திற்கு சென்ற இர்ஃபான் அடுத்தடுத்து சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்
கடந்த ஆண்டு இர்ஃபானின் கார் விபத்திற்குள்ளாகி பெண் ஒருவர் இந்த விபத்தில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தனக்கு பிறக்கவிருக்கும் குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதனை பிரம்மாண்டமாக அறிவித்தார். இது மருத்துவர்களிடம் பெரும் எதிர்ப்பை சந்தித்தது. குழந்தை பிறப்பதற்கு முன்பு அதன் பாலினத்தை தெரிவிக்கக் கூடாது என்பது மருத்துவ விதி. ஆனால் இர்ஃபான் துபாய் சென்று தனது குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே அதன் பாலினத்தை வெளியிட்டது கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. அந்த வகையில் சமீபத்தில் இர்ஃபான் வெளியிட்ட வீடியோ ஒன்ற மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 24 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் இர்ஃபானுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிகழ்வை வீடியோவாக எடுத்து இர்ஃபான் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி வெளியிட்டார். பிரசவத்தின்போது தனது மனைவியின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டும் இந்த வீடியோவை பலர் சமூக வலைதளங்களில் உணர்ச்சிவசப்பட்டு பகிர்ந்து வந்தார்கள். ஆனால் மருத்துவர்களிடம் இந்த வீடியோ பெரும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இது இந்திய மருத்துவ சட்டத்தின் படி தவறு என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் ஊரக நலப்பணி இயக்குநரகத்தில் இர்ஃபான் மீது மருத்துவர்கள் சார்பாக புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ குறித்து இர்ஃபானிடம் விளக்கம் கேட்க உள்ளதாக ஊரக நலப்பணி இயக்குநர் மருத்துவர் ஜே ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது மருத்துவ கவுன்சிலில் புகாரளிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.