சும்மா சுத்திட்டு இருந்தேன்..தனுஷ் தான் ஐடியா கொடுத்தார்..கென் கருணாஸ் பகிர்ந்த தகவல்
எந்த வித ஐடியாவும் இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த தான் இயக்குநராவதற்கு முக்கியமான காரணம் நடிகர் தனுஷ் தான் என கென் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

அசுரன் படத்தில் நடிகராக அறிமுகமான நடிகர் கருணாஸின் மகன் கென் அடுத்தபடியாக இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். பர்வதா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் அவர் இயக்கியிருக்கும் படத்திற்கு விஜயின் படமான 'யூத்' என்கிற டைட்டிலை வைத்துள்ளார். அசுரன் படத்திற்கு பின் எந்த வித ஐடியாவும் இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த தான் இயக்குநராவதற்கு முக்கியமான காரணம் நடிகர் தனுஷ் தான் என கென் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
இயக்குநராகும் கென் கருணாஸ்
வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் தனுஷின் மகனாக நடித்து பலரது கவனத்தை ஈர்த்தவர் நடிகர் கென். நகைச்சுவை இயல்பு , தன்னம்பிக்கையான பேச்சு என கென் எதிர்கால தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்டார். அசுரன் தொடர்ந்து விடுதலை படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகராக வளர்ந்து வந்த இவர் திடீரென்று இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். ஜாலியான காமெடி என்டர்டெயினர் படமான யூத் படத்தை கென் தற்போது இயக்கி முடித்துள்ளார். இப்படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கிறது. நடிப்பில் இருந்து தான் இயக்குநராவதற்கு தனுஷ் தன்னை வழி நடத்தியதாக கென் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்
தனுஷின் உதவி இயக்குநராக பணியாற்றினே
" இயக்குநராக வேண்டும் என்கிற ஆசை எனக்கு எப்போதும் இருந்ததில்லை. நாங்கள் ஒரு ஆல்பம் பாடல் உருவாக்கியிருந்தோம். அதை வெளியிட தனுஷ் சாரிடம் கேட்க போனேன். அப்போது அவர் நீ இப்போ என்ன பண்ணிட்டு இருக்க என்று கேட்டார். நான் எதுவும் இல்லை சும்மாதான் இருக்கேன் என்றேன். சும்மா எதுக்கு சுத்திட்டு இருக்க. எப்படியும் சினிமாவில் தான் ஏதாவது பண்ணனும். நீ நான் நடிக்கும் படங்களில் வந்து உதவி இயக்குநராக வேலை செய் என்று சொன்னார். அப்போது அவர் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன். பின் வாத்தி மற்றும் ராயன் படத்திலும் வேலை செய்தேன். படப்பிடிப்பை பார்த்து பார்த்து எனக்குள் ஒரு ஆர்வம் ஏற்பட்டது. விடுதலை படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது இந்த படத்திற்கான கதையை எழுதினேன். நடிப்பதற்காக எனக்கு வந்த எல்லா படங்களுமே ரொம்ப சீரியஸான கதாபாத்திரங்களாக வந்தன. அதனால் நான் ரொம்ப ஜாலியாக ஒரு கதையை எழுதினேன். எழுதி முடித்து தெரிந்தவர்களிடம் கொடுத்து அதை இயக்க சொல்வது தான் என் திட்டமாக இருந்தது.
கதை எழுதிமுடித்தபின் ஆர்ஜே பாலாஜியிடம் படிக்க கொடுத்தேன். அவர்தான் இந்த கதையை முதலில் படித்து என்னை ரொம்ப பாராட்டினார். இந்த படத்தை நான் தான் இயக்க வேண்டும் என்று அவர் தான் என்னை ஊக்கமளித்தார். நாங்களே செல்ஃபோனில் இந்த மொத்த படத்தையும் எடுத்து தயாரிப்பாளர்களுக்கு காட்டினோம். அப்படிதான் இந்த படம் உருவானது." என கென் தெரிவித்துள்ளார்





















