Weapon Movie : 2 கோடி நஷ்ட ஈடு...யூடியுப் சேனலுக்கு நோட்டீஸ் அனுப்பிய வெப்பன் படக்குழு
வெப்பன் படத்தின் நடிகர் வசந்த் ரவி மற்றும் படக்குழுவை பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசியதால் யூடியூப் சேனலுக்கு 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது வெப்பன் படக்குழு
வெப்பன்
குகன் சென்னியப்பன் இயக்கத்தில் கடந்த ஜூன் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியான திரைப்படம் ‘வெப்பன்’ (Weapon). இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். வசந்த் ரவி , சத்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்ய, கோபி கிருஷ்ணா இப்படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இயக்குநர் ராஜீவ் மேனன், நடிகை தான்யா ஹோப், ராஜீவ் பிள்ளை, பிக்பாஸ் மாயா எனப் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
நெகட்டிவ் விமர்சனங்களை குவித்த வெப்பன்
சூப்பர் ஹ்யூமன் கான்செப்ட்டை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள வெப்பன் படம் எல்லா தரப்பு ரசிகர்களிடமும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. கதையில் ஐடியா புதிதாக இருந்தாலும் கதாபாத்திர வடிவமைப்பு , திரைக்கதை போன்ற அம்சங்களில் கோட்டையை விட்டுவிட்டார்கள் என்று விமர்சர்களின் கருத்தாக இருந்தது. மேலும் இந்த வருடம் வெளியான படங்களில் ரசிகர்களின் பொறுமையை சோதித்த படங்களில் வெப்பன் படமும் இடம்பிடிக்கும் என பல யூடியுப் விமர்சகர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள்.
இப்படியான நிலையில் வெப்பன் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை வழங்கிய பிரபல யூடியுப் சேனல் ஒன்றுக்கு வெப்பன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு
சினிமா விமர்சனங்கள் செய்யும் யூடியுப் சேனல்களில் பிரபலமான ஒன்று செகண்ட் ஷோ சேனல். இந்த சேனலில் வெப்பன் படத்தின் விமர்சனம் ஜூன் 7 ஆம் தேதி வெளியானது. இதில் படத்தில் வசந்த் ரவியின் நடிப்பு , திரைக்கதை , கதாபாத்திர வடிவமைப்புகள் உள்ள குறைகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. தற்போது இந்த சேனலுக்கு வெப்பன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸில் வெப்பன் படத்தில் நடித்த நடிகர் வசந்த் ரவி , மற்றும் படக்குழுவினரைப் பற்றி அவதூறு பரப்பு வகையில் பேசியதால் செகண்ட் ஷோ சேனல் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படத்திற்கு அளித்த நெகட்டிவ் விமர்சனங்கள் காரணத்தில் படத்திற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கு 2 கோடி வரை நஷ்ட ஈடாக செகண்ட் ஷோ சேனல் வழங்க வேண்டும் என்று இந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
View this post on Instagram
படம் நன்றாக இல்லை என்பதை சுட்டிக்காட்டி மட்டுமே விமர்சனம் செய்துள்ளதாகவும் மற்றபடி அவதூறு பரப்பும் வகையில்தான் எதுவும் பேசவில்லை என்றும் செகண்ட் ஷோ உரிமையாளர் தெரிவித்துள்ளார்.