Navarasa | ஒன்பது உணர்வுகள், ஒன்பது பார்வைகள், ஒன்பது கதைகள் ! வெளியானது நவரசா ட்ரெய்லர்..!
"நவரசா" 2021 ஆகஸ்ட் 6 முதல் Netflix தளத்தில் வெளியிடப்படுகிறது.
தமிழில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஒன்பது பாக "நவரசா" ஆந்தாலஜி திரைப்படத்தினை, தமிழின் புகழ்மிகு படைப்பாளிகளான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை மையமாக கொண்டு, ஒன்பது கதைகள் இணைந்த ஆந்தாலஜி திரைப்படமாக, தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் ஒன்றிணைந்து, இந்திய சினிமாவின் பெருமை மிகு நிகழ்வாக, இப்படைப்பினை உருவாக்கியுள்ளனர்
தமிழ் திரையின் மிகச்சிறந்த திறமைகள் ஒன்றினைந்தது மட்டுமல்லாமல், இந்த கொடிய நோய்காலத்தில் பாதிப்புக்குள்ளான, சக திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவும், உன்னதமான நோக்கத்தில் இப்படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைத்துறையில், தங்களின் தரமான படைப்புகள் வழியே உலக அளவில் சாதனை புரிந்த முன்னணி படைப்பாளிகளான அர்விந்த் சுவாமி, பெஜோய் நம்பியார், கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், ப்ரியதர்ஷன், ரதீந்திரன் பிரசாத், சர்ஜூன் மற்றும் வசந்த் சாய் ஆகிய 9 படைப்பாளிகள் ஒன்றிணைந்து, தங்களின் மாறுப்பட்ட பார்வையில் மனித உணர்வுகளின் ஒன்பது ரசத்தை படைப்புகளாக தந்துள்ளனர். Justickets நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர். "நவரசா" வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று, பிரத்தியேகமாக Netflix தளத்தில் வெளியாகிறது.
நவரசா படத்தின் அழகியல் குறித்து மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சாபகேசன் கூறியதாவது, "உணர்ச்சிகள் தற்காலிகமாக இருக்கலாம், ஆனால் அந்த தருணங்களில் சில நினைவுகளாக நம் வாழ்நாள் முழுவதும் இருக்கும். உணர்ச்சிகள் நம் வாழ்வின் ஒவ்வொரு நாளின் ஒரு பகுதியாகும், ஆனால் அவற்றில் சில, நம் வாழ்வின் போக்கை மாற்றும் வல்லமை கொண்டது. இது தான் நவரசா படைப்பினை அழகாக்குகிறது. பெரும்பாலான நேரங்களில் நம் உணர்ச்சிகள் தான், பெரும்பாலும் நம் மனதையும், ஆன்மாவையும் கட்டுப்படுத்தி, அந்த நேரத்தின் அதிர்ச்சியான செயல்களுக்கு காரணமாக இருக்கிறது. இதுபோன்ற 9 உணர்ச்சிகளில் பிறந்த 9 கதைகளின் தொகுப்புதான் நவராசா. இவற்றில் சில, ஒரு கணத்தை முன்னிலைப்படுத்தக் கூடியதாக இருக்கும் . சில ஆழமான, மனதில் வேரூன்றிய உணர்வுகளிலிருந்து வெளிப்படும்படியானதாக இருக்கும். நவரசா இந்த உணர்வுகளின் கலவை அனைத்தையும் திரையில் காட்டும் படைப்பாக இருக்கும். இந்த 9 உணர்ச்சிகளிலிருந்து அல்லது ரசங்களிலிருந்து, ரசிகர்களை ஈர்க்கக்கூடிய, அற்புதமான கதைகளை உருவாக்கிய, தொழில்துறையில் உள்ள எங்கள் சகாக்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குறித்து நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் இந்த உணர்வுகளின் சங்கமத்தை அனுபவித்து கொண்டாடுவார்கள் என உறுதியாக நம்புகிறோம்" என்றனர்.
படத்தின் விபரங்கள் :
தயாரிப்பாளர்கள் - மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன்
ஆந்தாலஜி தலைப்பு 1 - எதிரி (கருணை)
நடிகர்கள் - விஜய் சேதுபதி , பிரகாஷ் ராஜ், ரேவதி
இயக்குநர் - பெஜோய் நம்பியார்
ஆந்தாலஜி தலைப்பு 2 - சம்மர் ஆஃப் 92 ( நகைச்சுவை )
நடிகர்கள் - யோகி பாபு, ரம்யா நம்பீசன் நெடுமுடி வேணு
இயக்குநர் - ப்ரியதர்ஷன்
ஆந்தாலஜி தலைப்பு 3 -புராஜக்ட் அக்னி (ஆச்சர்யம்)
நடிகர்கள் - அர்விந்த் சுவாமி, பிரசன்னா, பூர்ணா
இயக்குநர் - கார்த்திக் நரேன்
ஆந்தாலஜி தலைப்பு 4 - பாயாசம் ( அருவருப்பு )
நடிகர்கள் - டெல்லி கணேஷ், ரோகிணி, அதிதி பாலன், செல்ஃபி கார்த்திக்
இயக்குநர் - வசந்த் S சாய்
ஆந்தாலஜி தலைப்பு 5 - அமைதி ( அமைதி )
நடிகர்கள் - பாபி சிம்ஹா, கௌதம் வாசுதேவ் மேனன், மாஸ்டர் தருண்
இயக்குநர் - கார்த்திக் சுப்புராஜ்
ஆந்தாலஜி தலைப்பு 6 - ரௌத்திரம் ( கோபம் )
நடிகர்கள் - ரித்விகா ஸ்ரீராம், அபிநய ஸ்ரீ, ரமேஷ் திலக், கீதா கைலாசம்
இயக்குநர் - அர்விந்த் சுவாமி
ஆந்தாலஜி தலைப்பு 7 - இண்மை ( பயம் )
நடிகர்கள் - சித்தார்த், பார்வதி திருவோர்து
இயக்குநர் - ரதீந்திரன் R பிரசாத்
ஆந்தாலஜி தலைப்பு 8 - துணிந்த பின் (தைரியம்)
நடிகர்கள் - அதர்வா, அஞ்சலி, கிஷோர்
இயக்குநர் - சர்ஜூன்
ஆந்தாலஜி தலைப்பு 9 - கிடார் கம்பியின் மேலே நின்று ( காதல் )
நடிகர்கள் - சூர்யா, ப்ரயகா ரோஸ் மார்டின்
இயக்குநர் - கௌதம் வாசுதேவ் மேனன்