VV 21: என்னிடமே மோதுகிறாயா? .. போர்தொழில் படத்தின் வெற்றியால் ராட்சசன் படக்குழு எடுத்த முடிவு..!
நடிகர் விஷ்ணு விஷாலின் 21வது படத்தை ராட்சசன் படத்தின் இயக்குநர் ராம்குமார் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷாலின் 21வது படத்தை ராட்சசன் படத்தின் இயக்குநர் ராம்குமார் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், நந்திதா, காளி வெங்கட், முனீஷ்காந்த் நடிப்பில் வெளியான படம் ‘முண்டாசுப்பட்டி’. வெற்றி பெற்ற குறும்படத்தை திரைப்படமாக ராம்குமார் இயக்கியிருந்தார். காமெடி ஜானரில் உருவான இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ராம்குமாரும், விஷ்ணு விஷாலும் 2018 ஆம் ஆண்டு ‘ராட்சசன்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்தனர்.
இம்முறை யாரும் எதிர்பாராத வகையில் இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ் சினிமாவில் ஆல்டைம் ஃபேவரைட் க்ரைம் த்ரில்லர் படம் என்ற பெருமையை ராட்சசன் படம் பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இப்போது டிவியில் பார்த்தாலும் ஒரு பயத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், அம்மு அபிராமி, காளி வெங்கட், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.
3வது முறையாக இணைந்த கூட்டணி
இதனிடையே இயக்குநர் ராம்குமார் - விஷ்ணு விஷால் 3வது முறையாக இணைந்துள்ளது. இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் சத்யஜோதி தியாகராஜனுடன் ராம்குமார் - விஷ்ணு விஷால் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. இதனால் இவர்கள் 3 பேரும் இணைந்து படம் உருவாவது உறுதியானது. இந்நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கிய ‘போர் தொழில் படம்’ வெளியானது.
அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. ராட்சசன் படத்திற்கு அடுத்ததாக தமிழின் சிறந்த க்ரைம் த்ரில்லர் படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது. நாளுக்கு நாள் காட்சிகளும், வசூலும் போர் தொழில் படத்திற்கு அதிகரித்து வருகிறது.
இதனிடையே ட்விட்டரில் இணையவாசி ஒருவர், “ஒரு சைக்கோ படம் வந்தாலே.. அதை இந்த ராட்சசன் படத்தோட தான் compare செஞ்சு எல்லாரும் எழுத்தராங்க.. அப்படி ஒரு சம்பவம் செஞ்ச படம். 2014 ல குடும்ப படமா முண்டாசுபட்டி எடுத்துட்டு.. யாருமே எதிர்பார்க்காம 2018 ல இந்த சைக்கோ திரில்லர் கொடுத்து அசத்தினார்” என தெரிவித்திருந்தார். இதனை குறிப்பிட்டு ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ள சத்யஜோதி நிறுவனம், “தயாராக இருக்குமாறு தெரிவித்துள்ளதோடு, ராம்குமார் & விஷ்ணு விஷால் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ளனர்” என அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.