Vishal - Mysskin: ’மிஷ்கின் அண்ணன் மாதிரி தான்.. அவருடன் மீண்டும் கூட்டணி அமைக்கிறேனா?’ .. விஷால் சொன்ன அதிரடி பதில்..!
மிஷ்கின் - விஷால் கூட்டணி மீண்டும் சாத்தியமா என செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகர் விஷால் அதிரடியாக பதிலளித்துள்ளார்.
2017ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் , விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான 'துப்பறிவாளன்' திரைப்படம் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து 'துப்பறிவாளன் 2' திரைப்படம் அதே கூட்டணியில் உருவாக திட்டமிடப்பட்டது. விஷால், பிரசன்னா, கௌதமி, ரகுமான் உள்ளிட்ட பல பேர் நடிக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்ற சமயத்தில் இயக்குனர் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
மிஷ்கின் - விஷால் மோதல் :
மிஷ்கின் விஷாலுக்கு விதித்த 15 நிபந்தனைகள் தான் மோதலுக்கு காரணமாக இருந்தது. அதில் சம்பளம், ரீமேக் உரிமை, படப்பிடிப்பு தளம், பட்ஜெட், இடையூறு, தகவல் தொடர்பு என பல நிபந்தனைகள் அதில் இடம்பெற்று இருந்தன. இதனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபட்டால் படத்தை தானே இயக்குவதாக விஷால் முடிவெடுத்தார். இப்படம் மூலம் விஷால் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.
துப்பறிவாளன் 2 நிலை :
இதற்கிடையே நேற்று (ஆகஸ்ட் 29) தனது 46வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் விஷால், பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிகவும் பொறுமையாக பதிலளித்தார். அதில் மிஷ்கினுடன் மீண்டும் நீங்கள் இணைந்து படம் செய்வீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு "துப்பறிவாளன் 2 படத்தை நான் தான் இயக்குகிறேன். அவரோட திரைக்கதை தான். ஆனால் அதை மாற்றி அமைத்து விட்டோம். இப்போது இருக்கும் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துப்பறிவாளன் 2 பண்ணுவோம். நான் ரசிக்க கூடிய இயக்குநர்களின் பட்டியலில் நிச்சயமாக அவர் இருப்பார். அவரை நான் என்னைக்குமே அண்ணன் ஸ்தானத்தில் பார்ப்பேன். ஆனால் தயாரிப்பாளராக என்னுடைய கருத்து வேறு என்பதால் அதை மறுபடியும் நான் சொல்லமாட்டேன்" என்றார்.
மார்க் ஆண்டனி:
தற்போது விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' திரைப்படம் செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதற்கான புரொமோஷன் பணிகள் நாளை முதல் துவங்க உள்ளது என்பதையும் தெரிவித்து இருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் செல்வராகவன், சுனில், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விஷால் முதலில் இரண்டு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்பட்டது ஆனால் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள 'மார்க் ஆண்டனி' படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் விஷால் மூன்று வெவ்வேறு தோற்றத்தில் இருப்பதால் அவர் மூன்று கதாபாத்திரங்களில் நடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
விஷால் 34 :
தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைத்து தயாரிக்கும் 'விஷால் 34' திரைப்படத்தில் விஷால் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கரும் நடிக்கிறார்கள். ஹரி இயக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார்.