(Source: ECI/ABP News/ABP Majha)
Vijayashanti: கார் டயர் பஞ்சரானதால் தான் எனக்கு சினிமா வாய்ப்பே கிடைச்சது - விஜயசாந்தி ஓபன் டாக்!
இயக்குநர் பாராதிராஜா கார் டயர் பஞ்சரானதால் தான் எனக்கு சினிமா வாய்ப்பே கிடைத்தது என்று நடிகை விஜயசாந்தி கூறியுள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி:
நயன்தாராவிற்கு முன்னதாகவே லேடி சூப்பர் என்றும், லேடி அமிதாப் என்றும் அழைக்கப்பட்டவர் நடிகை விஜயசாந்தி. 1980 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக சினிமாவில் ஜொலிக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 180க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 1966 ஆம் ஆண்டு, சென்னையில் பிறந்த விஜயசாந்தி அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில், பாரதி ராஜா இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கல்லுக்குள் ஈரம்:
பாரதிராஜா இயக்கத்தில் வந்த கல்லுக்குள் ஈரம் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, முதல் படத்திலேயே ஹிட் பட கதாநாயகியாக மாறினார். இதை தொடர்ந்து நெற்றிக்கண், நெஞ்சில் துணிவிருந்தால், நிழல் தேடும் நெஞ்சங்கள், ஈஸ்வர், மன்னன், தடயம், வந்தே மாதம், மண்ணாரி அம்மன் என்று பல படங்களில் நடித்துள்ளார். சரத்குமார், ராம்கி, ரஜினிகாந்த் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
சினிமா வாய்ப்பு:
சினிமா வாய்ப்பு பற்றி, விஜயசாந்தி கூறுகையில், "என்னோட அப்பா நிறைய போட்டோஷூட் எடுத்து அதனை ஸ்டூடியோக்களில் கொடுத்திருக்கிறார். அப்போது தான், பாரதிராஜா அவரோட படத்துக்கு ஹீரோயின் தேடிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு முறை பாரதிராஜா தன்னோட கார்ல சென்று கொண்டிருந்தார். அவரோட கார் பஞ்சராகி நின்றுவிட்டது. டிரைவர் கார் ரெடியாக கொஞ்ச நேரம் ஆகும் என்று சொல்லிருக்கிறார்.
அதனால், பக்கத்தில் இருந்த ஸ்டூடியோவில் உட்காரும்படி சொல்லிருக்கிறார். அதனால், அங்கு சென்ற பாரதிராஜா என்னோட ஃபோட்டோஸ் எல்லாம் பார்த்திருக்கிறார். அதில் அவருக்கு பிடித்து போக கல்லுக்குள் ஈரம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் என்று கூறியுள்ளார். இதில் பாரதிராஜா, சுதாகர், விஜயசாந்தி, கவுண்டமனி, மணிவண்ணன், ஜனகராஜ், மனோபாலா ஆகியோர் பலர் நடித்திருந்தனர். சினிமாவில் மட்டுமின்றி விஜயசாந்தி அரசியலிலும் கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.