Modi On Vijayakanth :விஜயகாந்த் சினிமாவில் மட்டும் அல்ல; அரசியலிலும் கேப்டன் தான் - பிரதமர் மோடி புகழாரம்
விஜயகாந்த் சினிமாவில் மட்டும் அல்ல, அரசியலிலும் கேப்டன் தான் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் மோடி, 30 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். அப்போது, பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, "வணக்கம், எனது மாணவ குடும்பமே, இந்த ஆண்டின் முதல் அரசு நிகழ்ச்சியாக தமிழகத்திற்கு வந்துள்ளேன். பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா எனக்கு மிகவும் சிறப்பானது. இளைஞர்களுடன் மற்றும் அழகிய மாநிலமான தமிழ்நாட்டில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் அவரது பெற்றோருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.பண்டைய காலத்திலேயே காஞ்சி, மதுரை நகர்கள் கல்வியில் சிறந்து விளங்கின. பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு வரும் முதல் பிரதமர் என்பதில் நான் பெருமைகொள்கிறேன் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் மறைந்த விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவர் பேசுகையில், விஜயகாந்த் சினிமாவில் மட்டும் கேப்டன் அல்ல அரசியலிலும் கேப்டனாக திகழ்ந்தவர் என தெரிவித்தார். மேலும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
முன்னதாக சமீபத்தில் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். தமிழ் சினிமாவின் ஆளுமைகளின் ஒருவரான விஜயகாந்த் தனது சிறந்த நடிப்பின் மூலம் கோடிக்கணக்கான இதயங்களை கவர்ந்தவர். தமிழக அரசியலில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. எனது நெருங்கிய நண்பராக இருந்தவர். கடந்த காலங்களில் அவருடனான சந்திப்புகளை நினைவுகூர்கிறேன். மிகுந்த வருத்தத்திற்குரிய இந்த தருணத்தில் அவரின் குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார்.
மேலும் படிக்க