Varisu Release: திட்டமிட்டபடி வாரிசு வெளியாகும்: பேச்சு வார்த்தையில் சமாதானம்.. - தயாரிப்பாளர் சங்கம் உறுதி!
நடிகர் விஜயின் வாரிசு படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் இல்லை என தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வாரிசு’ திரைப்படமும், அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘துணிவு’ திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் மோத இருப்பதால், இரு தரப்பு ரசிகர்களும் அதிக எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இதில் துணிவு படத்தை வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனமும், வாரிசு படத்தின் வெளியிடும் உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனமும் கைப்பற்றி இருக்கிறது.
தற்போது தமிழ் சினிமாவில், அதிக செல்வாக்கு உள்ள உதயநிதி, துணிவு படத்திற்கு அதிக அளவு திரையரங்குகளை கைப்பற்றி விட்டதாக தகவல் வெளியானது. இதனை உதயநிதி ஸ்டாலின் மறுத்திருந்த போதும், அது குறித்தான சர்ச்சை இன்னும் ஓய்ந்த பாடில்லை. இதற்கிடையே வாரிசு படத்திற்கு தெலுங்கில் முன்னுரிமை கொடுக்கமுடியாது என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டு இருந்ததும் தமிழ் சினிமாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெலுங்கு திரைப்படங்களின் தயாரிப்பு செலவு அதிகரிப்பு, தயாரிப்பாளர்களின் நலன், தெலுங்குத் திரைப்படத் துறையை காப்பாற்றுதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு 08.12.2017 அன்று நடைபெற்ற தெலுங்குத் திரைப்பட வர்த்தக சபையின் அவசரக் கூட்டத்தில், சக்ராந்தி (பொங்கல்) மற்றும் தசரா (விஜயதசமி) ஆகிய பண்டிகைகளின் போது, திரையரங்குகளில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் வாரிசு படத்தின் தயாரிப்பாளரும், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையின் தற்போதைய துணைத் தலைவருமான ரீ தில் ராஜு 2019 ஆம் ஆண்டு பண்டிகைக் காலங்களில் டப்பிங் செய்யப்பட்ட தெலுங்குப் படங்களுக்கு எப்படி திரையரங்குகளை வழங்குவது என்பது பற்றி கூறியிருக்கிறார்.
அதன்படி, பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை அளித்து, அந்தப்படங்களுக்கு அளித்தது போக, மீதமிருக்கும் திரையரங்குகளை தெலுங்கில் டப் செய்து வெளியிடப்படும் படங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இடையே நடிகர் விஜயின் வாரிசு படம் தெலுங்கில் வெளியாவது குறித்தான பேச்சு வார்த்தை நடந்ததாகவும், இதில் சுமூகத்தீர்வு எட்டப்பட்டிருப்பதாகவும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி தெரிவித்துள்ளார்.இதன்மூலம் தெலுங்கில் வாரிசு படம் வெளியாவதில் சிக்கல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.