Thalapathy 67 Update: என் காலேஜுக்கு வந்துட்டு அப்டேட் இல்லைன்னா எப்புடி..! தளபதி 67 குறித்து லோகேஷ் கனகராஜ் சொன்ன மாஸ் பதில்
தளபதி 67 படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 படத்தின், அப்டேட் எப்போது வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சந்தீப் நடித்துள்ள மைக்கல் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 3 ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முதல் தயாரிப்பு படமாகும். இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கோவை விமான நிலையம் அருகே அமைந்துள்ள பி.எஸ்.ஜி. என்ற தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் சந்தீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
லோகேஷ் சொன்ன அப்டேட்:
மேடையில் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, தளபதி 67 படத்தின் அப்டேட் குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், என் காலேஜ்கு வந்துட்டு அப்டேட் சொல்லலன்னா எப்படி, நல்லா இருக்காதுல்ல. அதனால, பிப்ரவரி 1,2, 3 ஆகிய தேதிகளை நியாபகத்துல வச்சுக்கங்க” என கூறினார்.
தளபதி-67 அப்டேட் - லோகேஷ் கனகராஜ் சொன்ன தேதிகள்!https://t.co/wupaoCzH82 | #Vijay #Thalapathy67 #Thalapathy67𓃵 #LokeshKanagaraj @actorvijay @Dir_Lokesh pic.twitter.com/MqEV5zgseV
— ABP Nadu (@abpnadu) January 25, 2023
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தளபதி 67:
சமீபத்தில் விஜய் நடிப்பில் வாரிசு படம் வெளியானது. கலவையான விமர்சனங்களையே இப்படம் பெற்றாலும், இதுவரை வாரிசு 250 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால், வாரிசு குறித்த பேச்சு ஒரு புறம் இருக்க, மறுபுறம் தளபதி67 குறித்த அப்டேட்கள் இணையத்தை சூழ்ந்து வருகின்றன. மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் என்ற பெயரில், கமல், விஜய், சூர்யா, கார்த்தி மற்றும் பகத் ஃபாசில் ஆகிய முக்கிய திரைநட்சத்திரங்களை லோகேஷ் கனகராஜ் இணைத்து வருவதே இந்த பிரமாண்ட எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளது.
படப்பிடிப்பு பணிகள் தீவிரம்:
அண்மையில் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் மிஷ்கின் மற்றும் மனோபாலா ஆகியோர் நடித்து வருவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், திரிஷா மற்றும் கவுதம் மேனன் ஆகிய பல நட்சத்திரங்கள் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, விக்ரம் படத்தில் இடம்பெற்ற கமல் மற்றும் பகத் ஃபாசிலின் கதாபாத்திரங்களும் இந்த படத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, தளபதி 67 படத்தில் விக்ரம் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும், சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பரவி வருகின்றன. இதுபோன்று தளபதி 67 படம் குறித்து பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்கு, வரும் பிப்ரவரி 1,2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.