Jason Sanjay : தாத்தாவின் பாலிசியை ஃபாலோ பண்ணும் பேரன்.. இயக்கத்தில் ஆர்வம் காட்டும் விஜய் மகன் சஞ்சய்..
நடிகர் விஜய் மகன் சஞ்சய் இயக்கியுள்ள 'புல் தி ட்ரிகர்' குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் நடிகர் விஜய். இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ற படங்களை சிறப்பான முறையில் தேர்வு செய்து அவர்களின் நாடி துடிப்பாக இருந்து வருகிறார். அவரின் மகன் ஜேசன் சஞ்சய் தனது தந்தையை போல ஒரு பெரிய ஸ்டார் நடிகராக சினிமாவில் தடம் பதிப்பார் என எதிர்பார்த்தனர் விஜய் ரசிகர்கள். ஆனால் சஞ்சய் படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. சஞ்சய் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய் நடிக்கும் லியோ :
நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான திரைப்படம் 'வாரிசு'. அதை தொடர்ந்து தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் 'லியோ -ப்ளடி ஸ்வீட்'. மாஸ்டர் திரைப்படத்துக்கு பிறகு இவர்கள் இரண்டாவது முறையாக கூட்டணி சேரும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இப்படத்தில் ஒரு வித்தியாசமான விஜய்யை பார்க்கலாம் என கூறப்படுகிறது.
சென்னையில் துவங்கும் படப்பிடிப்பு :
'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 50 நாட்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடும் குளிரில் காஷ்மீரில் நடைபெற்ற படப்பிடிப்பை முடித்த படக்குழு அடுத்ததாக சென்னையில் விரைவில் துவங்கவுள்ளது. திட்டமிட்டபடி சென்னையில் முடித்து விட்டு இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக ஐதராபாத் செல்ல திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.
குறும்படம் இயக்கிய விஜய் மகன் :
நடிகர் விஜய் - சங்கீதா தம்பதியினருக்கு ஒரு மகன் - ஜேசன் சஞ்சய் மற்றும் ஒரு மகள் - திவ்யா உள்ளனர். நடிகர் விஜய்யின் மகன் மற்றும் மகள் இருவருமே திரையில் ஏற்கனவே அறிமுகமாகியுள்ளார். வேட்டைக்காரன் திரைப்படத்தில் 'போக்கிரி பொங்கல்' பாடலில் அப்பாவுடன் சேர்ந்து டான்ஸ் ஆடியிருந்தார் சஞ்சய். தெறி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிறப்பு தோற்றத்தில் மகள் திவ்யா நடித்து இருந்தார். ஏற்கனவே திரையில் தோன்றியதால் நடிப்பில் சஞ்சய் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜேசன் சஞ்சய் நடிப்பை காட்டிலும் படம் இயக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதற்கான மேல் படிப்பையும் அமெரிக்காவில் முடித்துள்ளார். தற்போது சஞ்சய் ஒரு குறும்படத்தை இயக்கி வருகிறார். அதற்கான கதை மற்றும் எடிட்டிங் பணிகளை அவரே செய்துள்ளார். அதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சஞ்சய் இயக்கியுள்ள அந்த குறும்படத்தின் டைட்டில் 'புல் தி ட்ரிகர்'. இதற்கு இசையமைத்துள்ளார் சந்தோஷ். பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகவும் வித்தியாசமான தோற்றத்துடன் வெளியானது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.