குட் பேட் அக்லி vs சச்சின்! அஜித்தா? விஜய்யா? மீண்டும் எகிறும் கூட்டம்! குஷியில் தியேட்டர் ஓனர்கள்!
திரையரங்கில் குட் பேட் அக்லி படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நாளை விஜய்யின் சச்சின் படம் ரீ ரிலீசாக உள்ளதால் மீண்டும் திரையரங்கில் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் திரையுலகத்திற்கு இந்த மாதம் கொண்டாட்டமான மாதம் என்றே கூற வேண்டும். ஏனென்றால், இந்தாண்டு தொடக்கம் முதல் வளரும் நடிகர்கள், சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற நிலையில், பெரிய நடிகரான ராம் சரணின் கேம் சேஞ்சர் படம் போதியளவு வரவேற்பு பெறவில்லை.
மிரட்டும் குட் பேட் அக்லி:
அதேசமயம், கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசான அஜித்தின் விடாமுயற்சி படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றாலும், வர்த்தக ரீதியாக பெரியளவு வெற்றியைப் பெறவில்லை என்றே கூறப்பட்டது.
இந்த நிலையில், பெரிய நடிகர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இந்த ஏப்ரல் மாதம் அமைந்துள்ளது. கடந்த 10ம் தேதி வெளியான குட் பேட் அக்லி படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்துள்ளது.
சச்சின் ரீ ரிலீஸ்:
குட் பேட் அக்லி படம் ஒருபுறம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அதேசமயத்தில் நாளை நடிகர் விஜய்யின் சச்சின் படம் ரீ ரிலீசாக உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் கல்லூரி மாணவராக நடித்த இந்த படம் அப்போது இளைஞர்களை கவரும் விதமாக இருந்தது. நடிகர் விஜய் அரசியலில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அவரது அடுத்த படமான ஜனநாயகனும் அடுத்தாண்டே வெளியாகும் நிலையில் நாளை சச்சின் படம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக வெளியாக உள்ளது.
இது மட்டுமின்றி கமல்ஹாசன் - சிம்பு இணைந்து நடிக்கும் மணிரத்னம் இயக்கும் தக்லைஃப் படத்தின் ஜிங்குச்சா பாடலும் நாளை வெளியாக உள்ளது. இதுமட்டுமின்றி தமிழ் திரையுலகின் வளரும் நட்சத்திரமான சிபிராஜ் நடித்துள்ள டென்ஹவர்ஸ் திரைப்படமும் நாளை ரிலீசாக உள்ளது. ஒரே நாளில் நடக்கும் த்ரில்லர் வகையில் இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி
இதனால், இந்த மாத இறுதி வரை குட் பேட் அக்லி, சச்சின் ரீ ரிலீஸ் ஆகிய படங்களாலும் புதுவரவான டென் ஹவர்ஸ் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் அந்த படத்தாலும் திரையரங்கம் கூட்டத்தால் நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கலாம். இதனால், ரசிகர்களும், திரையரங்க உரிமையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.





















