Vijay Devarakonda: சீரியல் டைரக்டர் மகன் டூ அர்ஜூன் ரெட்டி...! பெண்களின் கனவு நாயகன் விஜய் தேவரகொண்டா..!
2011 ஆம் ஆண்டு தனது திரைப்பட பயணத்தை தொடங்கிய விஜய் தேவரகொண்டா தற்போது தென் திரையுலகின் பல்துறை நடிகராக மாறியுள்ளார்.
2011ஆம் ஆண்டு நுவ்விலா என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர். விஜய் தேவரகொண்டா தற்போது இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறார். ஆரம்ப கட்டத்தில், அவர் சினிமா துறையில் வெற்றிகளை கொடுக்க முடியவில்லை மற்றும் அவரது வாழ்க்கையில் பல நெருக்கடிகளை சந்தித்தார்.
விஜய் தேவர்கொண்டாவின் வெற்றி திருப்புமுனை:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2016ம் ஆண்டு அவர் பெல்லி சூப்புலுவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பின் திரைக்கு வந்த அந்த படம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு அர்ஜுன் ரெட்டி, நோட்டா போன்ற படங்களில் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். குறிப்பாக, அர்ஜூன் ரெட்டி திரைப்படம் அவருக்கு தென்னிந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை பெற்றுத்தந்தது. மேலும், அந்த படம் தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்படும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
விஜய் மற்றும் அவரது ரசிகர்கள்:
விஜய் தேவரகொண்டா தனது ரசிகர்களை அடிக்கடி சந்திப்பார். அவரது ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர், மேலும் அவர் சினிமாவில் பல விமர்சனங்களை சந்தித்தாலும் அவரது ரசிகர்கள் விஜய் தேவரகொண்டாவின் திரைப்படங்களை பார்க்க தவறுவதில்லை. கடந்தாண்டு அவரது பிறந்தநாளில், குழந்தை பருவத்தில் போராட்டங்கள் காரணமாக பிறந்தநாளை ஒருபோதும் விரும்பாத அவர் இன்று தனது ரசிகர்களுக்காக மட்டுமே கொண்டாடுகிறார் என்ற எழுச்சியூட்டும் கதையைப் பகிர்ந்து கொண்டார்.
“15 வயதாக இருந்தபோது பிறந்தநாள் கொண்டாடுவதை நிறுத்திய ஒருவருக்கு, நீங்கள் காட்டிய அன்பு உங்கள் மீது என்னை அக்கறை கொள்ள வைத்தது. 8 ஆண்டுகளுக்கு முன்பு, என் பெயரோ என் இருப்போ உங்களுக்குத் தெரியாது. இன்று நீங்கள் என்னை உற்சாகப்படுத்துகிறீர்கள், ஆதரிக்கிறீர்கள், எனக்காக போராடுகிறீர்கள், என்னை நம்புகிறீர்கள், உங்களில் பலர் எனக்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி அன்பைக் கொடுக்கிறீர்கள். நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன், அது திருப்பித் தரப்படும். உன்னிடமிருந்து நான் உணரும் அன்பை, நீ என்னிடமிருந்து உணர வேண்டும்” இவ்வாறு தனது கடந்த பிறந்தநாளின்போது ரசிகர்களிடம் பகிர்ந்தார்.
விஜய்யின் போராட்ட குணம்:
நடிகரான பிறகும், விஜய் தனது ஒவ்வொரு படத்தையும் திரையரங்குகளுக்கு கொண்டு செல்ல போராடினார். மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ஒரு முறை பேசிய விஜய் தேவரகொண்டா, "வாழ்க்கை எனக்கு கற்றுத் தந்தது என்றால், அதற்காக போராட வேண்டும். பணத்துக்காக, மரியாதைக்காக போராட வேண்டும். இந்த உலகில் என் இடத்திற்காக நான் போராட வேண்டியிருந்தது. வேலைக்காக போராடினேன்.
நான் நடித்த ஒவ்வொரு படமும் எனக்கான ஒரு போராட்டம். எனது முதல் படத்தை யாரும் தயாரிக்க விரும்பவில்லை. நாங்கள் சொந்தமாக பணம் திரட்டி அந்த படத்தில் இலவசமாக நடித்தோம். எனக்கு ஆதரவாக யாரும் இல்லை. அர்ஜுன் ரெட்டி நடந்தது. ஆனால், அதன் ரிலீஸ் எளிதாக அமையவில்லை. எதிர்ப்புகள் இருந்தன, நாங்கள் போராட வேண்டியிருந்தது. வெளியீட்டிற்குப் பிறகு எனக்கு மிகப்பெரிய அளவில் அன்பு கிடைத்தது. பின்னர் நாங்கள் பைரசியை எதிர்த்துப் போராடினோம்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகிய லைகர் படத்தை வெளியிடக்கூடாது என்று கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அந்த சம்பவம் குறித்து நினைவுகூர்ந்த விஜய் தேவரகொண்டா, "என்னிடம் எதுவும் இல்லாதபோது நான் பயப்படவில்லை, இப்போது என்னிடம் இவ்வளவு இருக்கிறது, பிறகு நான் ஏன் பயப்பட வேண்டும்? எனக்கு என் அம்மாவின் ஆசீர்வாதம் உள்ளது, அதனால் என்ன நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்." என்றும் கூறினார்.
தன்னுடைய 34வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் விஜய் தேவரெகொண்டா திரை வாழ்வில் மென்மேலும் முன்னேற வாழ்த்துகள்.