Parasakthi: சிவகார்த்திகேயனுக்கு பராசக்தி தலைப்பை விட்டுக்கொடுத்தது ஏன்? மனம் திறந்த விஜய் ஆண்டனி
பராசக்தி படத் தலைப்பு விவகாரத்தில் என்ன நடந்தது என்று நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி மார்கன் என்ற படத்தை நடித்து தயாரித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஆண்டனி பங்கேற்றார்.
பராசக்தி பஞ்சாயத்து:
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் தலைப்பு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனென்றால், இந்த படத்தின் தலைப்பில் ஏற்கனவே விஜய் ஆண்டனி நடிக்கும் படம் உருவாகிக் கொண்டிருந்தது. இதனால், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நடந்தது என்ன?
இந்த நிலையில், மார்கன் பட விழாவில் இதுதொடர்பாக விஜய் ஆண்டனி பேசியுள்ளார். விஜய் ஆண்டனி இதுகுறித்து பேசியதாவது, பராசக்தி படத்தில் மட்டும்தான் இந்த பிரச்சினை உண்டானது. அது தெரியாமல் நடந்த ஒரு விஷயம்தான். இரண்டு மூணு பெயர் பதிவு சங்கங்கள் உள்ளது. அங்கு அவர்கள் எதேச்சையாக பதிவு செய்துவிட்டார்கள். அவர்கள் அறிவித்துவிட்டார்கள். அது பெருசாகிவிட்டது.
மக்கள் மனதில் சென்று சேர்ந்துவிட்டது என்பதால், நானே நடப்பின் அடிப்படையில் விட்டுக்கொடுத்துவிட்டேன். ஏனென்றால் ஒரு தயாரிப்பாளரின் வலி புரியும் என்பதால் நானே அன்பாக விட்டுக்கொடுத்துவிட்டேன். தெரியாமல் எப்போதாவது இதுமாதிரி நடக்கும். அவங்களுக்கும், தெரியாது, நமக்கும் தெரியாது என்பதால் இந்த மாதிரி நடந்துவிட்டது. திரைத்துறை முழுவதும் எங்கேயாவது இதுபோன்று இருக்கும். அதில் நான் மாட்டினேன். யாரும் அதற்கு காரணம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் சினிமாவின் அடையாளம்:
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார். அவரது இல்லம் மற்றும் வீட்டில்தான் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.
பராசக்தி என்ற பெயரில் 1952ம் ஆண்டு வெளியான சிவாஜி நடிப்பில் கருணாநிதி வசனத்தில் வெளியான படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய படம். முற்போக்கு சிந்தனைகளுடன் அன்று வெளியான அந்த படம் இன்றளவும் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே திகழ்கிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தை சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த தாளமுத்து நடராசன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனுக்கு பராசக்தி படத்தின் தலைப்பை விட்டுக்கொடுத்ததால் விஜய் ஆண்டனி படத்திற்கு பரமசக்தி என்று பெயரிடப்பட்டுள்ளது.





















