T J Gnanavel: "கூட்டத்தில் ஒருவன்" படம் தோல்வி அடைந்தது ஏன்? மனம் திறந்த வேட்டையன் பட இயக்குனர்
தனது முதல் படத்தின் தோல்வி குறித்து வேட்டையன் பட இயக்குநர் த.செ ஞானவேல் பகிர்ந்துகொண்டுள்ளார்
கூட்டத்தில் ஒருத்தன் படம் தோல்வி அடைந்ததற்கான காரணத்தில் வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் பகிர்ந்து கொண்டுள்ளார்.
த.செ.ஞானவேல்
ரஜினிகாந்தின் 170வது படத்தை இயக்கிவருகிறார் த.செ.ஞானவேல். ரித்திகா சிங், அமிதாப் பச்சான் , ஃபகத் ஃபாசில் , துஷாரா விஜயன் , மஞ்சு வாரியர் , ரானா டகுபதி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள் . லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வரும் அக்டோபர் மாதம் வேட்டையன் படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான கூட்டத்தில் ஒருத்தன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் த.செ.ஞானவேல். அசோக் செல்வன் , பிரியா ஆனந்த், சமுத்திரகனி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். கூட்டத்தில் ஒருத்தன் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பின் இரண்டாவதாக இயக்கிய ஜெய் பீம் படத்தின் மூலம் முக்கியமான இயக்குநராக கவனம் ஈர்த்தவர் த.செ ஞானவேல்.
பழங்குடியின மக்களுக்கான வலியை, ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக பேசியது ஜெய் பீம் . கூடுதலாக சூர்யா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது இந்தப் படத்தின் மீது மிகப்பெரிய கவனத்தையும் ஈர்த்தது. தனது முதல் படம் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை இயக்குநர் த.செ ஞானவேல் பகிர்ந்துகொண்டுள்ளார்.
கூட்டத்தில் ஒருவன் படம் குறித்து த.செ.ஞானவேல்
“ ஜெய் பீம் படத்திற்கு போட்ட அதே உழைப்பைதான் நான் கூட்டத்தில் ஒருவன் படத்திற்கு போட்டேன். ஆனால் நான் என்னுடைய அளவுகோலுக்கு பதிலாக இண்டஸ்ட்ரிக்கு தேவையான அளவுகோலுக்கு கட்டுபட்டேன். நகைச்சுவை வேண்டும் என்றால் அதில் நகைச்சுவையை சேர்த்தேன் , ஒரு பாட்டு வேண்டும் என்றால் ஒரு பாட்டு வைத்தேன் . நான் அப்போது என்னுடைய கதையில் உறுதியாக இல்லை . தமிழ் சினிமாவுக்கு என்று இருக்கும் டெம்ப்ளேட் வகை சினிமாவுக்கு நான் என்னை ஒட்டுக்கொடுத்தேன்.
ஒரு படம் ஓடனும் என்றால் அதற்கு தேவையான காரணிகளை எல்லாம் இந்தப் படத்தில் நான் வைத்தேன். அந்த இடத்தில் நான் சொல்ல வந்த கதையோட ஷேப் மாறிவிட்டது. ஒருவேளை இன்று நான் அந்த கதையை சொன்னால் வேறு மாதிரி சொல்லியிருப்பேன். கூட்டத்தில் ஒருத்தன் படம் என்னுடைய முதல் படமாக நான் சொல்ல வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். முதல் பெஞ்சிலும் இல்லாமல் கடைசி பெஞ்சிலும் இல்லாமல் நடுவில் மாட்டிக்கொண்ட இளைஞர்களின் வாழ்க்கையை நான் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நான் சொல்ல வந்த விஷயத்திற்கு உறுதியாக இல்லாமல் இருந்தே இந்தப் படத்தின் தோல்விக்கு காரணம் என்று நான் ஏற்றுக் கொள்கிறேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்