Sonakshi Sinha : 36 வயதினிலே... சோனாக்ஷி சின்ஹாவின் பிறந்தநாளுக்கு அப்பா சத்ருஹன் சின்ஹாவின் அன்பு ட்வீட்
சத்ருகன் சின்ஹா தனது மகள் சோனாக்ஷியின் 36வது பிறந்தநாளுக்கு ட்விட்டர் மூலம் ஃப்ளாஷ்பேக் புகைப்படங்களையும், அன்பான பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
பாலிவுட் நடிகர் மற்றும் முன்னாள் எம்.பி. யான சத்ருகன் சின்ஹா - பூனம் சின்ஹா தம்பதியின் மகள் சோனாக்ஷி சின்ஹாவின் 36வது பிறந்தநாள் இன்று. தஹாத் என்ற தொலைக்காட்சி தொடரில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பாராட்டுகளை குவித்தார். விஜய் வர்மா, குல்ஷன் தேவையா மற்றும் சோஹும் ஷா உள்ளிட்டோர் நடித்த இந்த தொடரில் போலீஸ் அதிகாரியாக பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். மேலும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அதற்கு பிறகு அவர் வேறு எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை. ஹிந்தி திரைப்படங்களிலும், இணைய தொடர்களிலும் நடித்து வருகிறார். இன்று 36வது பிறந்தநாள் கொண்டாடும் மகளுக்காக ட்விட்டர் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் சத்ருகன் சின்ஹா.
மகளுக்கு சத்ருகன் சின்ஹாவின் வாழ்த்து :
சத்ருகன் சின்ஹா தனது மகள் சோனாக்ஷியின் ஃப்ளாஷ்பேக் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து அவரின் நடிப்பையும், சாதனைகளை பற்றியும் அவரது பெருமிதத்தை தெரிவித்து இருந்தார். ட்விட்டர் பதிவில் "எவ்வளவு அழகான காலம் கடந்துவிட்டது. இந்த அற்புதமான மற்றும் புனிதமான நாளில், மகிழ்ச்சி, என்டர்டெயின்மென்ட் மற்றும் மகத்தான சாதனைகள் நிறைந்த ஒரு அழகான ஆண்டாக எங்கள் கண்ணின் மணியை வாழ்த்துகிறோம். உங்களின் பலம் மற்றும் சாதனைகளை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். குறிப்பாக 'தஹாத்' மூலம் மைல்கல்லை துவங்கியுள்ளார் சோனாக்ஷி. இது அவரது வெற்றி க்ரீடத்தில் மேலும் ஒரு இறகை சேர்த்த அருமையான படங்களில் ஒன்றாகும். அப்படம் சமீபத்தில் தான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது. எங்களின் இதயங்களில் உனக்கென ஒரு சிறப்பான இடம் எப்போதுமே இருக்கும். உங்கள் மகத்தான இந்த நாள் டன் கணக்கில் மகிழ்ச்சியால் நிரம்பட்டும். மகிழ்ச்சியும், அன்பும் வாழ்வின் ஒவ்வொரு நாளும் பெருகட்டும். "ஒரு வியப்பான நாளை பெறுவாய்! கடவுள் ஆசிர்வதிக்கட்டும்! " என பதிவிட்டு இருந்தார் சோனாக்ஷி சின்ஹாவின் தந்தை, நடிகர் மற்றும் அரசியல்வாதியான சத்ருகன் சின்ஹா.
சோனாக்ஷி சின்ஹா தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடுவது வழக்கம். தற்போது அவர் படப்பிடிப்பில் இருப்பதாகவும் அதற்காக அவர் அலிபாக் அல்லது லோனாவாலாவுக்குச் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
புது வீட்டுக்கு குடியேறிய சோனாக்ஷி :
அப்பா சத்ருஹன் சின்ஹா மற்றும் அம்மா பூனம் சின்ஹாவுடன், மும்பையில் உள்ள ஜூஹுவில் வசித்து வந்த சோனாக்ஷி சின்ஹா சில தினங்களுக்கு முன்னர் தான் பாந்த்ராவில் நான்கு படுக்கை அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடியேறி உள்ளார்.