'உலகத்திரைப்பட விழாக்களின் வரலாறு - 7’ வெனீஸ் சர்வதேச திரைப்பட விழா -1..!
முசோலினியின் சர்வாதிகார ஆட்சியில் கீழிருந்த இத்தாலியில், அதன் பின் 1934-ல் நடைபெற்ற இரண்டாவது வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு தலைப்புகளின் கீழ் விருதுகள் வழங்கப்பெற்றன.
உலகெங்கிலும் ஆண்டு முழுவதும் ஏதோவொரு சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வந்தாலும் குறிப்பிட்ட சில திரைப்பட விழாக்கள் மட்டுமே உலகின் சிறப்பு கவனத்தை பெறுகின்றன. அவற்றில் மிக முக்கியமான திரைப்பட விழா இத்தாலியின் வெனீஸ் நகரில் நடைபெறும் வெனீஸ் சர்வதேச திரைப்பட விழா. இந்த ஆண்டு வெனீஸ் சர்வதேச திரைப்பட விழா ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.
உலகில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் Big 5 என அழைக்கப்படும் கேன்ஸ் திரைப்பட விழா (பிரான்ஸ்), வெனீஸ் திரைப்பட விழா(இத்தாலி), பெர்லின் சர்வதேச திரைப்பட விழா(ஜெர்மனி), டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா(கனடா) மற்றும் சண்டேன்ஸ் சர்வதேச விழா(அமெரிக்கா) ஆகிய விழாக்களில் மிகவும் பழைமையான விழா இந்த வெனீஸ் திரைப்பட விழா தான்.
வெனீஸ் திரைப்பட விழாவின் பாதை
இத்தாலியில் 1895-ல் இருந்து நடைபெற்று வரும் லா பியானலே (La beinale) என அழைக்கப்படும் சர்வதேச கலாச்சார கண்காட்சியில் பல்வேறு தலைப்புகளின் கீழ் கலை, இசை, நடனம், நாடகக் கலை மற்றும் கலை ஆகிய பிரிவுகளில் நடைபெற்று வரும் நிகழ்வில் 1932-ல் வெனீஸ் திரைப்பட விழாவும் ஒரு பிரிவாக உருவாக்கப்பட்டு இன்று வரையில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 1932 ஆகஸ்ட் 6-ல் இவ்விழாவின் முதல் திரைப்படம் திரையிடப்பட்டது, ஆகஸ்ட் 21-ம் தேதி வரை இவ்விழா நடைபெற்றது. முதல் திரைப்பட விழாவில் இன்று வழங்கப்படுவது போன்ற குறிப்பிட்ட திரைப்படங்களை அங்கீகரிக்கும் பொருட்டு விருதுகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் சில திரைப்படங்கள் மக்கள் மனதை கவர்ந்த திரைப்படங்கள் அறிவிக்கப்படன. முதல் விழாவிற்கு கிடைத்த வரவேற்பினால் வெனீஸ் திரைப்பட விழா ஆண்டுதோறும் நடைபெறும் என அறிவிக்கப்படது.
சர்வாதிகாரி முசோலியின் பெயரால் விருதுகள்
முசோலினியின் சர்வாதிகார ஆட்சியில் கீழிருந்த இத்தாலியில், அதன் பின் 1934-ல் நடைபெற்ற இரண்டாவது வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு தலைப்புகளின் கீழ் விருதுகள் வழங்கப்பெற்றன. அவ்விருதுகள் முசோலினியின் பெயரால் வழங்கப்பட்டு வந்தன. சிறந்த இத்தாலிய திரைப்படங்களுக்கு முசோலினி கோப்பை எனும் பெயரிலும், சிறந்த வேற்று நாட்டு திரைப்படங்களுக்கு முசோலினி கோப்பை தனியாக வழங்கப்பட்டது. ஆம், சர்வாதிகாரி முசோலினியின் பெயராலேயே அவ்விருதுகள் வழங்கப்பட்டன. அதன் பிறகாக 1935-ல் திரைப்பட விழாவினை நடத்துவதற்கென உறுப்பினர் குழு நியமிக்கப்பட்டது. ஆனால் ஒரு சர்வதேச திரைப்பட விழாவிற்கென அமைக்கப்பட்ட குழுவில் இத்தாலியர்களை தவிர எவரும் குழுவில் நியமிக்கப்படாதது சலசலப்பினை உண்டாக்கினாலும் எவரும் அது குறித்து கேள்வி எழுப்பவில்லை. அதுவரையில் வெனீஸ் சர்வதேச திரைப்பட விழா லா பியானலே ( La beinale ) அமைப்பின் கீழ் இயங்கி வந்தாலும் 1936-ல் வெனீஸ் திரைப்பட விழா தன்னாட்சி பெற்ற அமைப்பாக உருவாக்கப்பட்டு அதன் படி இயங்க துவங்கியது முக்கியமான மாற்றமாக பார்க்கப்பட்டது. அதுவரையில் ஒரு அரங்கில் நடைபெற்று வந்த விழாவிற்கு சர்வதேச அங்கீகாரமும் சிறப்பான வரவேற்பின் காரணமாக வெனீஸ் திரைப்பட விழாவிற்கென தனி அரங்கு அமைக்க தேவை கூடியிருப்பதாக கருதியதின் விளைவாக இன்றளவில் விழா நடைபெறும் பளாஸ்ஸோ டெல் சினிமா (palazzo del cinema ) அரங்கு அமைப்பதற்கான பணி ஆரம்பிக்கப்பட்டு 1937-ல் நடைபெற்ற 5-வது வெனீஸ் திரைப்பட விழா அந்த அரங்கில் முதல்முறையாக நடைபெற்றது. அதன் பின் பல்வேறு காலகட்டங்களில் இன்றும் நடைபெறும் அரங்கில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு பிரம்மாண்டமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
போரால் இடமாற்றப்பட்ட விழா
1940 முதல் 1942 வரையில் வெனீஸ் திரைப்பட விழா, அப்போது நடைபெற்று வந்த போரின் காரணமாக குண்டுவீச்சுக்கு உள்ளாக்கப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக பளாஸ்ஸோ டெல் சினிமா அரங்கிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. 1941-ல் நடைபெற்ற விழாவில் ஹிட்லரின் கொள்கைகளை ஆதரித்து உருவாக்கப்பட்ட ஹெய்ம்கெர் (Home coming) என்ற திரைப்படத்திற்கு விருது வழங்கியதை தொடர்ந்து விழா மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு சில நாடுகள் இவ்விழாவினை புறக்கணித்ததினால் விழாவின் புகழ் மங்கத் துவங்கியது.
#BiennaleCinema2022 Il Presidente della Biennale di Venezia #RobertoCicutto presenta la 79. Mostra Internazionale d'Arte Cinematografica (Lido di Venezia, 31 agosto > 10 settembre 2022).
— La Biennale di Venezia (@la_Biennale) July 27, 2022
Scopri di più su #Venezia79 → https://t.co/zWyJvcIjy4 pic.twitter.com/MvAwxgypFe
தங்கச் சிங்கம் (The golden lion) பிறப்பு
அதன் பின், இரண்டாம் உலகப்போருக்கு பின்னர், தனது இழந்த பழைய வளமையை பெற்ற வெனீஸ் திரைப்பட விழா இன்றளவிலும் சர்வதேச திரைத்துறையில் பட்டொளி வீசி பறக்கிறது. இவ்விழாவில் 1949-ல் இருந்து சிறந்த படைப்புகளுக்கு தங்கச் சிங்கம் விருது(Golden Lion : Leone d'oro ) வழங்கப்பட்டு வருகிறது. இன்றளவிலும், தங்கச் சிங்கம் விருதினை பெறும் திரைப்படங்கள் பல்வேறு வணிக மற்றும் கலை குறித்தான மதிப்பு மிக்க புகழினை பெறுகின்றன. இவ்விழா, பல்வேறு தடைகளை தகர்த்து வளர்ந்து, இன்றளவில் இருக்கும் இப்புகழினை எவ்வாறு பெற்றது என்றும், இவ்விழாவில் கலந்து கொள்ளும் திரைப்படங்கள் குறித்தும், வழங்கப்பட்டு வருகின்ற விருதுகள் குறித்தும் அடுத்தடுத்த கட்டுரைகளில் பார்க்கலாம்…!
(Image Source : Twitter / @la_Biennale )