Valimai Making Video | வெறித்தனமான சேஸிங்... பதறிய பார்வையாளர்கள்! விழுந்த வேகத்தில் எழுந்து ஸ்டண்ட் செய்த ஏ.கே..
பல காத்திருப்புகள்... இடையூறுகள்... சறுக்கல்கள்... ஆனாலும் எழுந்து நின்ற அஜித்....
பல காத்திருப்புகள்... இடையூறுகள்... சறுக்கல்கள்... ஆனாலும் எழுந்து நின்ற அஜித்.... "இந்த உலகமே உன்ன எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையிலும் நீ தோத்துட்ட தோத்துட்டன்னு சொன்னாலும்; உன் முன்னாடி நின்னு அலறினாலும் நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்பவும் உன்ன ஜெயிக்க முடியாது... Never Ever Give Up" இது அஜித் பேசிய வசனம்தான்.... அவருக்கே பொருந்தக்கூடிய அழுத்தமான வசனமும் கூட...
போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வலிமை படத்தின் அப்டேட் என்று ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகாத நாட்களே கிடையாது. அந்த அளவுக்கு அஜித்தின் ரசிகர்கள் என்று சொல்வதை விட வெறியர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். சமூக வலைதளம் மட்டும் இல்லாமல் கிரிக்கெட் ஸ்டேடியத்தையே அலறவிட்ட பெருமை அவர்களையே சேரும். கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு சென்று கிரிக்கெட் பார்க்காமல் உள் நாடு, வெளிநாடு வீரர்களிடம் வலிமை அப்டேட்டை கேட்டுக்கொண்டிருந்தனர். இதுகுறித்த வீடியோவும் செம்ம வைரல் ஆனது. இதுகுறித்த நிகழ்வுகளையும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலியும், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினும் தங்களது பேட்டியின் போது நெகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டனர்.
இதுபோதாது என்று அரசியல் கட்சியினரையும் அஜித் ரசிகர்கள் விட்டுவைக்கவில்லை. சட்டசபை தேர்தலில் போது வாக்கு கேட்க சென்றால், அரசியல் கட்சியினரிடம் வலிமை அப்டேட் கேட்டு அதிர்ச்சி அடைய வைத்தனர். ஆனால் பாஜக சார்பில் நின்ற வானதி சீனிவாசன் எனக்கு வாக்களித்தால் வலிமை அப்டேட் வாங்கி தருகிறேன் என உறுதியளித்து அதையும் அரசியல் வாக்குறுதியாக்கினார். அவர் நேரம் சரியாக அவர் வெற்றி பெற்ற பிறகு வலிமை அப்டேட்டும் எதேர்ச்சியாக வெளியானது.
அதன்பின் ஒன்றன் பின் ஒன்றாக வலிமை அப்டேட் வெளியானது. டீசர், பாடல் காட்சிகள் என ரசிகர்கள் உற்சாகத்தில் திழைத்தனர். ஆனால் இடையிடையே எவ்வளவோ இடையூறுகள் இறுக்கத்தான் செய்தது. கொரோனாவால் படப்பிடிப்பு நின்று போனது. அதுமட்டுமில்லாமல் இடையில் அஜித்தின் உடல்நலக்குறைவு காரணமாகவும் படப்பிடிப்பு சற்று தள்ளிவைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில்தான் தற்போது வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களை ஆரவாரப்படுத்தியுள்ளது. அஜித்தின் அதிரடி பைக் ரேஸ் காட்சிகளும், ஸ்டண்ட் காட்சிகளும், யுவனின் மிரட்டலான இசையும் மேக்கிங் வீடியோவில் தெறிக்க விடுகிறது.
வலிமை படத்தின் பூஜைக்காட்சியோடு தொடங்கும் மேக்கிங் வீடியோவின் அடுத்த கிளிப்பே கேமராமேன் நீரவ் ஷா தான்... படத்தின் விறு விறு காட்சிகளுக்கு வலிமை சேர்ப்பதே சினிமோட்டோகிராஃபிதான் என்றால் அது மிகையல்ல. ஆரம்பத்திலேயே பிளாக் டிசர்ட், பிளாக் பேண்ட், பிளாக் தொப்பி, பிளாக் வாட்ச்சோடு ஸ்டண்ட் காட்சியில் அண்ணாந்து பார்த்து மழையை வரவேற்கிறார் அஜித்.... பதிலுக்கு க்யூட்டான பிளாக் டிரஸில் டஃப் கொடுக்கிறார் நம்ப ஹூமா குரேஷி... சூட்டிங்கிற்கு இடையில் கட்டுமஸ்தான உடற்கட்டை வடிவமைத்துக்கொண்டிருக்கிறார் கார்த்திகேயா...
நெடுஞ்சாலையில் புகை கிளம்ப... அனல் பறக்க பறக்க அஜித்தின் பைக் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. வேகமாக செல்லும் வேனை சுற்றி ஏராளமான பிளாக் காட்ஸ். கார், பைக், வேன், லாரி என எதையும் விட்டுவைக்கவில்லை ஃபைட் மாஸ்டர்... தீப்பிடித்து வண்டிகள் அந்தரத்தில் பறந்த வண்ணம் இருக்கிறது.
இடையிடையே ரசிகர்களின் நம்பிக்கைத்துளிகளை எழுத்துக்கள் வாயிலாக தூவ விட்டுள்ளனர் படக்குழுவினர்.
அஜித் இந்த படத்திற்காக டூப் போடாமல் தனது வழக்கமான பைக் ஸ்டண்ட்டை காட்டிலும் அதிக எஃபோர்ட் போட்டு ரசிகர்களை திகைக்க வைத்திருப்பது கண்கூடாக தெரிகிறது. ஆம்... இதில் பைக் வீலிங் செய்யும் போது யாரும் எதிர்ப்பாராத விதமாக அஜித் மல்லாக்க சாலையில் விழுகிறார். அதைப்பார்த்த படக்குழு அலறியறித்துக்கொண்டு ஓடுகிறது. வீடியோவை பார்ப்பவர்கள் மனதும் பதைபதைத்துதான் போகிறது. ஆனால் நம்ப அஜித் Never Ever Give Up தான்... விழுந்ததும் அசால்ட்டாக எழுந்து நடந்து கெத்து காட்டினார். மீண்டும் பைக் ரேஸில் தெறிக்க விடுகிறார். இவையனைத்தும் மேக்கிங் வீடியோவில் இடம்பெற்றிருக்கிறது.
வலிமை படத்தின் படப்பிடிப்பு இடையே நின்றதிற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த பைக் ரேஸில் அவர் விழுந்ததைவிட 18 லட்சம் ரூபாய் பைக்கை சேதப்படுத்தி விட்டோமே என்று அஜித் கவலை பட்டாராம்.. அடுத்த நாளே ஷூட்டிங் நிற்காமல் இருப்பதற்காக அதே மாடலின் புதிய பைக்கை அவர் தனது சொந்த செலவில் வாங்கியதாகவும் ஒரு தகவல் இருக்கு. அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
ஆனால் இந்த பைக் ரேஸில் விழுந்த அஜித்திற்கு ரத்தக்காயம் ஏற்பட்டதாக உறுதியான தகவலும் வெளியாகியுள்ளது. அஜித் விழுந்த போது அவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.. ஆனால் அவற்றை மேக்கிங் வீடியோவில் காட்டவில்லை என்றும் தெரிகிறது.