Vairamuthu: ’சிட்டுக் குருவி முத்தம் கொடுத்தபோது எனக்கு முதல்மீசை முளைத்தது’ - பி.சுசீலாவை புகழ்ந்து தள்ளிய வைரமுத்து
பழம்பெரும் பிண்ணனி பாடகி பி.சுசீலாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதற்கு கவிப்பேரரசு வைரமுத்து நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பழம்பெரும் பிண்ணனி பாடகி பி.சுசீலாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதற்கு கவிப்பேரரசு வைரமுத்து நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தென்னிந்தியாவின் "இசைக்குயில்" என்றும், "மெல்லிசை அரசி"என்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் பழம்பெரும் பின்னணி பாடகி “பி.சுசீலா”. புலப்பாக்க சுசீலா என்பதே இவரது முழுப் பெயராகு,. 1950 ஆம் ஆண்டு சென்னை வானொலியில் பாடத் தொடங்கிய பி.சுசீலா 1953 ஆம் ஆண்டு வெளியான ‘பெற்ற தாய்’ என்ற படத்தில் தான் பாடகியாக அறிமுகமானார். கிட்டதட்ட இந்த 70 ஆண்டுகளில் கிட்டதட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம், பெங்காலி, சிங்களம், பஞ்சாபி, துலு, பதுகா மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் கிட்டதட்ட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
இப்படியான நிலையில் 88 வயதான பி.சுசீலாவுக்கு கடந்த நவம்பர் 21 ஆம் தேதி கௌரவ டாக்டர் பட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத்தின் 2ஆவது பட்டமளிப்பு விழாவில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பி.சுசீலா பாடியா தெய்வத்தின் தெய்வம் படத்தில் இடம்பெற்ற தனக்கு மிகவும் பிடித்த “நீ இல்லாத உலகத்திலே” பாடலையும் பாடிக் காட்டினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இப்படியான நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து, பாடகி பி.சுசீலாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியதை பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,
”நீ
மலர்ந்தும் மலராத பாடியபோது
என் பாதிமலர்க் கண்களில்
மீதி மலர்க் கண்களும்
மென்துயில் கொண்டன
சிட்டுக் குருவி
முத்தம் கொடுத்தபோது
எனக்கு முதல்மீசை முளைத்தது
உன்
கங்கைக்கரைத் தோட்டத்தில்
நான் கால்சட்டை போட்ட
கண்ணனானேன்
சொன்னது நீதானாவென்று
சொற்களுக்கிடையில்
விம்மிய பொழுது
என் கண்களில்
வெளியேறியது ரத்தம்
வெள்ளை வெள்ளையாய்
காலமகள் கண்திறப்பாள்
பாடியபோது
என் எலும்பு மஜ்ஜைகளில்
குருதியும் நம்பிக்கையும்
சேர்ந்து சுரந்தன
நீ காதல் சிறகைக்
காற்றினில் விரித்தபோது
ஒரு தேவதையின் சிறகடியில்
என் காதல் சம்பவம் நிகழ்ந்தது
நீ கண்ணுக்கு மையழகு
பாடவந்தபோது
சந்திரனும் சூரியனும்
நட்சத்திரமும் கூழாங்கல்லும்
என் தமிழும் அழகாயின
எத்துணையோ
காயங்களை ஆற்றியபிறகு
உன்னை டாக்டர் என்கிறார்கள்.. வாழ்க நீ அம்மா!” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் பி.சுசீலாவுடன் பல ஆண்டுகளுக்கும் முன் எடுத்த ஃபோட்டோவையும் வைரமுத்து பகிர்ந்துள்ளார்.
மேலும் படிக்க: கட்சியில் இருந்து நீக்கிய தலைமை! ம்ம்ம் பார்த்துக்கலாம் என்று பதிவிட்ட திமுக கவுன்சிலர் - நெல்லையில் சம்பவம்!