Jana Nayagan: ஜனநாயகன் படத்திற்கு வசனம் எழுதியது விஜய்யா? உண்மை என்ன?
நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்திற்கு அவரே வசனங்கள் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது கடைசி படமாக ஜனநாயகன் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகியுள்ளது.
ஜனநாயகன்:
ஜனநாயகன் படத்தின் கிளிம்ப்ஸ் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் வெளியானது. அதில் காவல்துறை அதிகாரி உடையில் விஜய்யின் என்ட்ரி காட்சி இடம்பெற்றிருந்தது. மேலும், அதில் என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற வசனமும் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இந்த வீடியோவின் வசனங்கள் தளபதி விஜய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வசனம் எழுதியது விஜய்யா?
இதையடுத்து, ரசிகர்கள் பலரும் தன்னுடைய கடைசி படமான ஜனநாயகனுக்கு விஜய்யே வசனம் எழுதியிருப்பதாக உற்சாகத்துடன் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், ஜனநாயகன் படத்திற்காக வெளியான அந்த கிளிம்ப்ஸ் காட்சியில் இடம்பிடித்துள்ள என் நெஞ்சில் குடியிருக்கும் வசனம் விஜய்யின் சொந்த வசனம் என்பதால் அந்த கிளிம்ப்ஸ் காட்சிக்கான வசனத்திற்காக, அந்த வீடியோவில் வசனங்கள் விஜய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான எச்.வினோத் ஜனநாயகன் படத்தை இயக்கியுள்ளார். சதுரங்க வேட்டை, தீரன், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என அவர் இயக்கிய படங்களில் வலிமை தவிர மற்ற அனைத்து படங்களும் வெற்றிப்படமாக அமைந்தது.
அனல் பறக்கப்போகும் வசனங்கள்:
இந்த படங்களின் வெற்றிக்கு எச்.வினோத்தின் வசனமே முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில், ஜனநாயகன் படத்திலும் அவரது கூர்மையான வசனங்கள் இடம்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீசான 3 அல்லது 4 மாதங்களில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இதனால், விஜய்க்கு எதிராகவும், ஆளுங்கட்சியை விமர்சித்தும் மிக கடுமையான விமர்சனங்கள் படத்தில் இடம்பிடித்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் கடைசி படமான ஜனநாயகத்தை கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் இந்த படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.
அரசியல் செல்வாக்கை அதிகரிக்குமா?
நடிகர் விஜய்யுடன் சேர்ந்து இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமைதா பாஜு, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நரைன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த ஜனநாயகன் படம் விஜய்யின் அரசியல் செல்வாக்கை பன்மடங்கு உயர்த்தும் வகையில் அமைய வேண்டும் என்று விஜய் தரப்பு விரும்புவதாக கூறப்படுகிறது. ஜனநாயகன் பட கிளிம்ப்ஸிற்கு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பல தரப்பு ரசிகர்களும் பலத்த வரவேற்பை அளித்துள்ளனர்.





















