Anant Ambani - Radhika : இவான்கா டிரம்ப் முதல் ஃபேஸ்புக் நிறுவனர் வரை.. களைகட்டும் முகேஷ் அம்பானி வீட்டு திருமணம்
Anant Ambani - Radhika Merchant Pre- wedding : அம்பானி வீட்டு ப்ரீ - வெட்டிங் விழாவில் கலந்து கொள்ள உலகெங்கிலும் உள்ள ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வரும் ஜூலை 12ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக திருமணத்துக்கு முன்பான கொண்டாட்டங்கள் தற்போது மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன் காம்ப்ளக்ஸில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் மிகவும் பிரம்மாண்டமாக ஜாம்நகர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிட்டத்தட்ட 51 ஆயிரம் மக்களுக்கு தடபுடலாக விருந்து நடைபெற்றது. அம்பானியின் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து விருந்தை பரிமாறினார்கள்.
இந்த விழாவுக்கு திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், சர்வதேச அளவிலான தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஏராளமானோர் வருகை தந்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரக தொழிலதிபர் முகமது அல் அப்பார், பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் மற்றும் பல விவிஐபிக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பாலிவுட் பிரபலங்கள் நடிகர் சல்மான் கான், ரன்பீர் கபூர் - ஆலியா பட் , ராணி முகர்ஜி, ரன்வீர் கபூர், தீபிகா படுகோன், சோனாலி பிந்த்ரே, நடிகர் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் தனது குடும்பத்தினருடன் வருகை தந்துள்ளனர். கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ். தோனி, சச்சின் டெண்டுல்கர், சூரியகுமார் யாதவ், ஹிர்திக் பாண்டியா, பேட்மிண்டன் சாம்பியன் சாய்னா நேவால் மற்றும் பலர் இந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மும்பை விமான நிலையம் வந்தடைந்துள்ளனர். இப்படி திரை பிரபலங்கள் முதல் வணிக தலைவர்கள் வரை ஏராளமான பிரபலங்கள் ஜாம்நகருக்கு வருகை புரிந்துள்ளனர்.
ஹாலிவுட்டின் பிரபலமான பாடகி ரிஹானாவின் நடன நிகழ்ச்சி இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. திருமணத்துக்கு முன்பான இந்த நிகழ்ச்சிகளில் நடனமாட அவருக்கு சம்பளமாக 50 கோடி வழங்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், பூட்டான் மன்னர் மற்றும் ராணி, கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல் ரகுமான் பின் ஜாசிம் அல் தானி, கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், தி வால்ட் டிஸ்னியின் தலைமை நிர்வாக அதிகாரி பாப் இகர், மெட்டா சிஓஓ ஜேவியர் ஒலிவன் மற்றும் பல சர்வதேச தலைவர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. எனவே அவர்களின் வருகை இந்த மூன்று தினங்களுக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பிரபலங்களான அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், அனில் கபூர், அமீர் கான், கரண் ஜோஹர், சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பாக்கப்படுகிறது.