google Celebrates Actor Sivaji Ganesan: சகாப்தத்துக்கு மரணமில்லை ...சிவாஜியின் பிறந்தநாளை கொண்டாடிய கூகுள் டூடுல்!
இந்த பூமிப் பந்தில், மனிதக் குலத்தின் கடைசி ரசிகன் உயிர்வாழும் வரை, சிவாஜி கணேசன் என்கிற சகாப்தத்துக்கு மரணமுமில்லை..காலமுமில்லை!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
அந்தந்த நாளின் முக்கியத்துவத்தையும், சிறப்பையும் கொண்டாடும் வகையில் கூகுள் இணைய பக்கத்தில், சிறப்பு சித்திரத்தை வடிவமைப்பதை அந்த நிறுவனம் வழக்கமாக வைத்துள்ளது. இந்த சித்திரம் தான், 'கூகுள் டூடுல்' என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று, நடிகர் திலகம் சிவாஜியின் 93 வது பிறந்தநாளில் அவரை கவுரவப்படுத்த சிறப்பு டூடுலை Google உருவாக்கியுள்ளது.
நடிகர் திலகம், நடிப்புத் திலகம் என்ற மக்களால் அழைக்கப்பட்ட சிவாஜி, 300க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். நாட்டின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, தாதா சாகிப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். அயல்நாட்டின் உயரிய விருதுகளையும் பெற்ற பெருமைக்குரியவர்.
1964ல் வெளிவந்த சிவாஜியின் 100வது திரைப்படமான நவராத்திரி திரைப்படத்தில், சிவாஜி கணேசன் ஒன்பது கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அற்புதம், பயம், இரக்கம், கோபம், சாந்தம், வெறுப்பு, சிங்காரம், வீரம் மற்றும் ஆனந்தம் ஆகிய நவரச வேடங்களில் சிவாஜி நடித்துள்ளார். மேலும், வீரபாண்டியன் கட்டபொம்மன் திரைப்படத்திற்காக சிவாஜிகணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதன்மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற வரலாற்று பெருமையையும் பெற்றார். சிவாஜி கணேசனின் கலைத்துறை பங்களிப்பிற்காக 1995ம் ஆண்டு பிரெஞ்சு அரசாங்கம் இவருக்கு செவாலிய விருது வழங்கி கவுரப்படுத்தியது.
உலகம் போற்றிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 2001 ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் நாள் இயற்கை எய்தினார்.
தமிழக அரசின் சார்பில் மரியாதை:
சிவாஜி கணேசனின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அடையாறில் அமைந்துள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு இன்று, தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.
நடிப்பின் இமயமாகத் திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 2001 ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் நாள் இயற்கை எய்தினார். அன்னாருடைய அருமை பெருமைகளை போற்றுகின்ற வகையில் அவரின் பிறந்த நாளானது அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட அற்புத கலைஞன்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். எது நடிப்பு, எது இயல்பு எனக் காண்போர் அறிந்திடா வண்ணம், ஒட்டுமொத்த உணர்ச்சிக் குவியல்களை வெள்ளித் திரையில் கொட்டி வெற்றி வீரராகவே வலம் வந்தவர். இந்த பூமிப் பந்தில், மனிதக் குலத்தின் கடைசி ரசிகன் உயிர்வாழும் வரை, சிவாஜி கணேசன் என்கிற சகாப்தத்துக்கு மரணமுமில்லை..காலமுமில்லை...! என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.