Today movie releases :இந்த வாரம் முழுக்க ரசிகர்கள் பிஸியோ பிஸி தான்... ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீசா?
Today movie releases : இன்று (டிசம்பர் 15) எந்தெந்த திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகின்றன என்ற பட்டியலை பார்க்கலாமா...
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒவ்வொரு வாரமும் கொண்டாட்டமான ஒரு வாரமாக அவர்களை பிஸியாக வைத்திருக்கும் வாரமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரமும் ஒரே நேரத்தில் பல படங்கள் வெளியாகி ரசிகர்களை என்டர்டெயின் செய்ய உள்ளது. டிசம்பர் 15ம் தேதியான இன்று என்னென்ன படங்கள் திரையரங்கில் வெளியாகின்றன என்பதை பார்க்கலாம்.
ஃபைட் கிளப் :
லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பில் அப்பாஸ் ஆர்.ரஹ்மத் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ஃபைட் கிளப். உறியடி படம் மூலம் பிரபலமான நடிகர் விஜயகுமார் நடிப்பில் ஒரு பவர்-பேக் ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்தில் மோனிஷா மோகன் மேனன், அவினாஷ் ரகுதேவன், ஷங்கர் தாஸ், கார்த்திகேயன் சந்தானம் மற்றும் சரவண வேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாக்ஸிங் விளையாட்டை மையமாக வைத்து வெளியான இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
ஆலம்பனா :
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், பாரி கே விஜய் இயக்கத்தில் திண்டுக்கல் லியோனி, பாண்டியராஜன், ஆனந்தராஜ், முனீஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோரின் நடிப்பில் குழந்தைகளுக்கு பிடித்தமான ஃபேன்டஸி காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.2021ம் ஆண்டு முடிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் வெளியாகாமல் நிலுவையில் இருந்தது. ஒரு வழியாக இன்று இப்படம் திரையரங்கில் வெளியானது.
நா நா :
நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் பல ஆண்டுகாலமாக நிலுவையில் இருந்த நிலையில் இன்று வெளியாகியுள்ளது. பாரதிராஜா, சித்ரா சுக்லா, ரேஷ்மா வெங்கடேஷ், பகவதி பெருமாள், பிரதீப் ராவத், எஸ்கே கனிஷ்க் மற்றும் டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கண்ணகி :
யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஷாலின் ஜோயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'கண்ணகி'. நான்கு பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எடுத்துரைக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. ஷான் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மேலும் சி.எஸ். கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் டிசம்பர் 15 ம் தேதி வெளியாக இருந்த 'சபாநாயகன்' திரைப்படம் மிக்ஜாம் புயல் பாதிப்பால் டிசம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.