OTT: ஜெயிலருக்கு டிக்கெட் கிடைக்காத மக்களே.. கொஞ்சம் ஓடிடியில் ரிலீஸான படங்கள் என்னன்னு பாருங்க..!
ஜெயிலருக்கு போட்டியாக இந்த வாரம் ஓடிடியில் வெளியாகி இருக்கும் மாஸ் ஹிட்டான புதிய படங்கள் பற்றி காணலாம்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ரிலீசாகி ஓடி கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ஓடிடி தளத்தில் போர் தொழில், மாவீரன், மாயோன் உள்ளிட்ட ஹிட் படங்களும் வெளியாகி உள்ளது.
OTT Release: ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜெயிலர் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நேற்று முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு திரையரங்குகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால், ரசிகர்கள் பலருக்கும் டிக்கெட் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் ஜெயிலர் படம் பார்க்காமல் விரக்தியில் இருக்கும் ரசிகர்களுக்கு ஆறுதலாக ஓடிடியில் புதிய படங்கள் வெளியாகி உள்ளது.
மாவீரன்:
Maaveeran: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் ரிலீசான மாவீரன் திரைப்படம் அமேசான் பிரைமில் இன்று முதல் வெளியாகி உள்ளது. மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கி உள்ள இந்த படத்தில் அதிதி ஷங்கர் ஹீரோயினாகவும், இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக சரிதாவும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியான மாவீரன் ரூ.89 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிசில் வசூலித்துள்ளது.
போர் தொழில்
Por Thozhil: சரத்குமார், அசோக்செல்வன், நிகிலாவிமல் நடிப்பில் வெளியான மற்றொரு ஹிட் படமான போர் தொழில் சோனி லைவில் ரிலீசாகி உள்ளது. பெண்களை குறி வைத்து கொலை செய்யும் சீரியல் கில்லரை தேடும் போலீஸின் அதிரடி திருப்பங்களை கொண்ட படமாக போர் தொழில் உள்ளது. அடுத்தடுத்த திருப்பங்கள், த்ரில்லர் என நகர்ந்து செல்லும் போர் தொழில் படத்தில் அசோக் செல்வன், சரத்குமார் நடித்து அசத்தி இருப்பர். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கி இருக்கும் போர் தொழில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மாயோன்
Maayon: கடந்த ஆண்டு சிபி சத்யராஜ் நடிப்பில் வெளியான மாயோன் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது. டபுள் மீனிங் புரொடெக்ஷன்ஸ் வழங்கிய இந்த படத்தில் சிபி சத்யராஜ் உடன் தன்யா ரவிச்சந்திரன் நடித்து இருந்தார். பழங்காலத்தில் இருந்த கோவில் ஒன்றை சுற்றி நடக்கும் சம்பவங்களை கதையாக கொண்டு மாயோன் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
வான் மூன்று
Vaan Moondru: ஆஹா ஓடிடி தளத்தில் வான் மூன்று திரைப்படம் வெளியாகி உள்ளது. அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர், வினோத் கிஷன், அபிராமி வெங்கடாசலம், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் வான் மூன்று திரைப்படத்தில் நடித்துள்ளனர். அனைத்து வயதிலும் வரும் காதலை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர நெட்பிளிக்ஸில் மலையாளத்தில் பத்மினி என்ற படமும் வெளியாகி உள்ளது. குஞ்சக்கா போபன், மடோனா செபாஸ்டியன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் கடந்த ஜூன் மாதம் ரிலீசாகி இருந்தது. தெலுங்கு படமான ஹிடிம்பா படம் ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீசாகியுள்ளது. இதற்கெல்லாம் மேலாக இந்தியில் கமெண்டோ என்ற வெப் சீரிஸும், தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற டாக்குமெண்ட்ரி ஜீ5 ஓடிடியிலும் ரிலீசாகியுள்ளது.