Comedian to Hero: எல்லாமே எங்களுக்கு ஜுஜுபி... காமெடியன் டூ ஹீரோ... வெற்றிகண்ட ஜாம்பவான்கள்..!
நூறு ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகர்களாக பரிமாணம் எடுத்து வெற்றி கண்டுள்ளார்கள்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்பது இன்றியமையாத ஒன்று. சினிமா என்பது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சம். சமீப காலமாக திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வெளிவந்தாலும் நகைச்சுவைக்கு என்றுமே மவுசு குறையவே குறையாது. மிகவும் இறுக்கமான மன உளைச்சலும் நிறைந்த இந்த வாழ்க்கையில் மனிதனின் மனதை சற்று லேசாக்கி சந்தோஷப்படுத்துவது சினிமா. அதனால் தமிழ் சினிமாவில் காமெடியன்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.
100 ஆண்டுகால பழமை வாய்ந்த சினிமா ஏராளமான நகைச்சுவை நடிகர்களை கண்டுள்ளது . என்.எஸ். கிருஷ்ணன் தொடங்கி இன்று வரை பல நகைச்சுவை ஜாம்பவான்கள் நம்மை ஆட்கொண்டுள்ளார்கள். அவர்களில் பலர் ஆரம்பம் முதல் இறுதி வரை நகைச்சுவை ட்ராக்கில் சென்றாலும் பெரும்பாலான காமெடியன்கள் ஹீரோக்களாக முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.
என். எஸ். கிருஷ்ணன், சந்திரபாபு, நாகேஷ் போன்ற பலரும் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்களாக இருந்து பின்னர் ஹீரோவாகவும் ஜெயித்தவர்கள். அவர்களை தொடர்ந்து வந்த கவுண்டமணி, விவேக், வடிவேலு மற்றும் இன்றைய தலைமுறை ரசிகர்கள் விரும்பும் சந்தானம், யோகி பாபு போன்ற நடிகர்களும் ஹீரோவாக களத்தில் இறங்கி பட்டையை கிளப்பி வருகிறார்கள்.
இந்த பட்டியலில் இடம் பெற்று தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தூள் கிளப்பும் ஒரு நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரை மூலம் அறிமுகமாகி இன்று கம்ப்ளீட் என்டர்டெயினராக லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். அவரை அடுத்து தற்போது ஒரு சிறந்த காமெடியனாக இருந்து ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகர் சூரி. சமீபத்தில் வெளியான இயக்குனர் வெற்றிமாறனின் 'விடுதலை' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். அவரின் முயற்சிக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி, மிர்ச்சி சிவா என பலரும் காமெடி என்ற பலத்தை கொண்டு சினிமாவில் நுழைந்து இன்று பெரிய அளவில் ஜெயித்துள்ளார்கள் என்றால் அது மிகையல்ல.
நகைச்சுவை நடிகர்கள் காமெடி மட்டுமே செய்வார்கள் என்ற எண்ணத்தை மாற்றி பலரும் குணச்சித்திர கதாபாத்திரங்கள் மட்டுமின்றி நெகட்டிவ் ரோல்களிலும் கலக்கியுள்ளனர். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் நடிகர் நாகேஷ். அவரின் வெற்றிடத்தை நிரப்ப எத்தனை பேர் முயன்றாலும் அவருக்கு நிகர் அவர் மட்டுமே.
ஒரு காலகட்டத்தில் மிகவும் மிரட்டலான வில்லனாக பயமுறுத்தியவர் நடிகர் ஆனந்தராஜ். சமீபகாலமாக அவர் ஏராளமான படங்களில் நகைச்சுவை நடிகராக பின்னி பெடலெடுத்து வருகிறார். ஒரு நடிகருக்கு திறமை மட்டுமே போதும் என்பதை நிரூபித்து வெற்றி கண்டவர் நடிகர் யோகி பாபு. ஒரு நகைச்சுவை நடிகர் ஹீரோவாக தன்னை மெருகேற்றிக் கொள்ள முடியும். ஆனால் அனைத்து நேரங்களிலும் ஒரு ஹீரோவால் காமெடி மூலம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க முடியுமா என்பது சந்தேகமே.